உலகநாயகன் கமலஹாசன் அவ்வை சண்முகி படத்திற்காகத் தொடர்ந்து 55 நாட்கள் எப்படி கஷ்டப்பட்டார் என்பதைப் பற்றி ரமேஷ் கண்ணா பேசியுள்ளார்.
கமலஹாசன் பல கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக இவருடையே மேக்கப் தமிழ் சினிமாவை ஒருபடி மேலே தூக்கிச் சென்றது. அபூர்வ சகோதரர்கள் குள்ளமான கமல், புன்னகை மன்னன் சார்லி சாப்ளின், இந்தியன் தாத்தா என ஏகப்பட்ட படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இளம் வயது முதல் இப்போது வரை புதுமையான கெட்டப்கள் போட்டு அசுத்தும் தனித்துவ கலைஞர் அவர். சமீபத்தில்கூட கல்கி படத்தில் அவருடைய கெட்டப் அட்டகாசமாக இருந்தது. கலியுகத்தில் கல்கி ஏற்ற வில்லனாக அவர் மட்டுமே இருக்க முடியும் என்பதுபோல கெட்டப் அமைந்திருந்தது. மேலும் சினிமாவில் அவர் பேசாத தமிழ் வட்டார வழக்கு மொழிப் படங்களே கிடையாது.
குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளிவந்த அவ்வை சண்முகி படம் இன்றும் பலருக்கும் பிடித்தமான படம். அதில் கமலஹாசன் மாமி கெட்டப்பில் அசத்தியிருப்பார். அந்த கெட்டப்பில் நிஜமாகவே அவர் ஒரு வயதான மாமி போலதான் இருப்பார். ஆனால், இந்த கெட்டப்பிற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை குறித்து ரமேஷ் கண்ணா பேசியுள்ளார்.
“அவ்வை சண்முகி படத்திற்காக கமலஹாசன் காலை 4 மணிக்கெல்லாம் தயாராக வேண்டும். ஏனெனில் படத்தில் வரும் மாமி கதாபாத்திரத்திற்காக பெண் வேடம் போட தினமும் ஷேவ் செய்ய வேண்டும். காலை 4 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்தால் 9 மணிக்குத் தான் முடியும். அதனால் நாங்கள் அதிகாலையிலேயே டிபன் சாப்பிட்டு விடுவோம்.
மேக்கப் போட்டப்பின் அவரால் சரியாக சாப்பிட முடியாது என்பதால் அவரும் அதிகாலையிலேயே சாப்பிட்டு விடுவார். அதன்பின் பிற்பகல் 3 மணி வரை வெறும் ஜுஸ் மட்டும் தான். இப்படி தொடர்ச்சியாக 55 நாட்கள் கமலஹாசன் அவ்வை சண்முகி படத்திற்காக உழைத்தார். அவரின் டெடிகேஷன் தான் அவரை உலகநாயகனாக்கி இருக்கிறது.” என்று பேசினார்.
நடிப்புக்காக பல அர்பணிப்புகள் செய்திருக்கிறார் கமல். ஆகையால்தான் இன்றும் அவர் 'கண்டங்கள் கண்டு வியக்கும் உலகநாயகனாக' இருந்து வருகிறார்.