Kanguva 
வெள்ளித்திரை

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

நா.மதுசூதனன்

பாகுபலி போலப் படம் எடுக்க வேண்டும். ஹாலிவுட் தரம் என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவின் கௌரவம் என்று சூளுரைக்க வேண்டும் என்பதெல்லாம் சரி தான். இதற்கெல்லாம் ஆதாரமாக ஒன்று வேண்டும். நல்ல கதை. அதற்கு ஏற்றாற்போல ஒரு திரைக்கதை. இது இரண்டும் இல்லாமல் பிரம்மாண்டமான தயாரிப்பு மட்டுமே ஒரு படத்தைத் தரம் உயர்த்தி விடாது. இந்த வலி தரும் உண்மையை இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நாயகன் சூர்யா, கங்குவா படத்தின் மூலம் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புவோம்.

கோடிக்கணக்கில் செலவு. அற்புதமான லொகேஷன்கள். சூர்யாவின் அர்ப்பணிப்பான நடிப்பு. நல்ல மேக்கப். குறை சொல்ல முடியாத ப்ரொடக்ஷன் டிசைன் என அனைத்தும் இருந்தாலும் விழலுக்கு இறைத்த நீர் போல ஆனது தான் ஆகப் பெரிய சோகம். ஒரு சிறுவனுக்குச் செய்து கொடுத்த சத்தியமா? தனது தீவைக் காப்பாற்ற நடக்கும் போராட்டமா? சிறுவர்களின் மூளையோடு விளையாடும் அந்நிய சக்திகளிடம் ஒரு சிறுவனைக் காப்பாற்ற நடக்கும் போராட்டமா?  இதில் எது கங்குவா படத்தின் அடிநாதம் என்று தெரியவே இல்லை.

Kanguva movie review

இந்திய எல்லையில் உள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பரிசோதனைக் கூடத்திலிருந்து தப்பி வருகிறான். அவன் கோவாவில் காவல்துறைக்கு உதவியாக இருக்கும் சூர்யா மற்றும் குழுவினரிடம் வந்து சேர்கிறான். அவனைக் கண்டதும் சூர்யாவிற்கு இனம்புரியாத ஒரு பிணைப்பு. அவரைப் போலவே இருக்கும் கங்குவாவின் படத்தை வரைந்து கொண்டே இருக்கிறான். கதை ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி செல்கிறது.

ஐந்து தீவுக்கூட்டங்களின் ஒன்றான பெருமாச்சியைச் சேர்ந்தவர் கங்குவா. தனது தீவை ரோமானிய படைகளின் ஆக்கிரமிப்புகளிலிருந்து  காப்பற்ற நினைக்கிறார். அதோடு அரத்தி என்ற தீய சக்திகளின் புகலிடமான இனத்தவரிடம் (இதன் தலைவராக பாபி தியோல்) இருந்தும் காப்பாற்ற வேண்டும். இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் கங்குவா. படிக்கும் போதே எவ்வளவு குழப்பம்!! பார்க்கும்போது அதைத் தவிர்க்க மிகச் சுவாரசியமான திரைக்கதை அமைந்திருக்க வேண்டும். எவ்வளவு முடிச்சுகள் இதைச் சுற்றி பின்னியிருக்கலாம்.

காட்சிகளின் பிரம்மாண்டத்தை மட்டும் மனதில் வைத்து விட்டுக் கதை சொல்லலில் மிகப் பெரிய கோட்டை விட்டிருக்கிறது இந்தக் குழு. நடிகர்களில் சூர்யாவைத் தவிர வேறு யார் முகமும் தெரியவில்லை. கலைராணி, நட்டி, ஹரிஷ் உத்தமன் (என்று நினைக்கிறேன்) போன்றவர்கள் எல்லாம் சுத்தம். போஸ் வெங்கட்  ஆழ்வார்க்கடியான் போன்ற கெட்டப்பில் வருகிறார். வரும் குறைந்த நேரத்தில் கூட மிகைப்பட்ட நடிப்பால் எரிச்சல் மூட்டுகிறார்.

மொத்தக் கூட்டத்தை மட்டுமல்ல முழுப் படத்தையும் தனது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார் சூர்யா. இடைவேளைக்குப் பிறகு வலி தாங்காமல் இறக்கி வைத்து விட்டார் போல இருக்கிறது. திக்கின்றி அலைகிறது படம். பார்க்கிறவர்களை எல்லாம் கொல்கிறார் வில்லன் பாபி தியோல். கடைசியில் சப்பென்று சூர்யா கையால் சாகிறார். பரிதாபமான வில்லன். 

ஒரு படம் ரசிகர்களை இழுக்க வேண்டுமென்றால் அது முதல் பதினைந்து நிமிடங்களில் நடந்து விட வேண்டும். இதில் முதல் அரை மணி நேரம் இந்தக் கால (2024) போர்ஷன்கள் தான் படத்தை ஆரம்பத்தில் இருந்தே அவர்களிடமிருந்து பிரித்து விடுகின்றன. இந்த அளவு மோசமான துவக்கம் சமீபகாலப்  படங்களில் வந்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நாயகி இஷா பதானி, கே எஸ் ரவிக்குமார், கோவை சரளா, ரவி ராகவேந்தர்... இவர்கள் செய்வது நகைச்சுவை என்பது தான் மிகப் பெரிய அவல நகைச்சுவை. எப்போதடா கங்குவா வருவார் என்று காத்திருக்க வைத்துவிடுவார்கள். ஆனால் அந்த ஆபத்து அப்பொழுது அவர்களுக்குத் தெரியதல்லவா. 

ஒளிப்பதிவாளர் வெற்றி, சண்டைப்பயிற்சி இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இவர்கள்  இருவர் மட்டுமே படத்தில் அவர்கள் பங்கைக் குறையின்றி செய்திருப்பவர்கள். அதுவும் பனிமூட்டத்தில் பெண்கள் மட்டும் போடும் சண்டைக்காட்சி வரும். படத்தில் ஆகச் சிறந்த சண்டை இது தான். தனியொரு ஆளாக ஒரு கூட்டத்தைச் சூர்யா எதிர்கொள்ளும் சண்டையை அடுத்துச் சொல்லலாம். கிளைமாக்சில் பறக்கும் விமானத்தில் நடக்கும் சண்டைகள் எல்லாம் அடங்கப்பா போதுண்டா சாமி ரகம்.

பெரும்பான்மையான இடங்களில் கிராபிக்ஸ் நன்றாகவே இருந்தாலும் இந்த விமான சண்டைக்காட்சிகள், ரஷ்யாவின் விஞ்ஞானக் கூடம் எல்லாம்  மிகவும் சுமார். மிகவும் பிரலாபிக்கப்பட்ட அந்த முதலை சண்டையும் தேவையே இல்லாத ஆணி. சூர்யா யாருக்காகப் போராடுகிறாரோ அந்தச் சிறுவன் (அவன் சிறுவனா சிறுமியா என்பதிலேயே பலருக்கு குழப்பம் கங்குவா போர்ஷன்களில்) பற்றிய விளக்கங்கள் இல்லை. 

இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தைக் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் என்று அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் சிவா. சூர்யா மட்டும் தான் இரண்டு ஜென்மங்களில் வர முடியுமா இந்த வில்லன் கதாபாத்திரம் வரக்கூடாதா என்று 'இவரை'யும் ரெட்டை வேடங்களில்... மற்றவை கங்குவா 2 வில் என்று முடித்து அனுப்பி வைக்கிறார்கள். கங்குவா 2 வந்தால் தானே நான் வில்லன். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் 'இவர்' நடித்து இருப்பார் போலும்.

ராஜமௌலி போன்ற படம் எடுக்க வேண்டும் என்ற லட்சியம் இருப்பதெல்லாம் சரி தான். அவரைப் போல ஒரு கதைக்கும், மேக்கிங்கிற்கும், பெர்பெக்க்ஷனுக்கும் மெனக்கெட வேண்டுமல்லவா. காட்சிகளை வேகமாக நகர்த்தி கொஞ்சமே கொஞ்சம் எமோஷன்களை புகுத்திவிட்டால் படம் பரபர வென்று சென்று விடும் என்ற நம்பிக்கையில் தான் இதுவரை படம் எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் சிவா. இனிமேல் அது எடுபடாது என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும். 

படத்திற்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்று உண்டு. அது படத்தின் பின்னணி இசை. படம் முழுதும் (சூர்யாவும் தான்) அனைவரும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். நடிகர்கள் கத்துவதை நிறுத்தும்போது இசையமைப்பாளர் டி எஸ் பி தனது இரைச்சலைத் துவக்கி விடுகிறார். படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கு மழை பெய்து ஓய்ந்தது போல ஒரு ஆசுவாசம் வருகிறது. வயதான ஆட்கள் சற்று பஞ்சு எடுத்துச் செல்வது காதுகளுக்குப் பாதுகாப்பு. குழந்தைகளை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 3டி காட்சிகள் சற்றுப் பரவாயில்லை.

'வாயைப் பிளந்து கொண்டு இரண்டாயிரம் கோடி ரசிகர்கள் பார்ப்பார்கள்', 'தமிழ் சினிமாவின் புது அடையாளம் இது' போன்ற படக்குழுவின் பேட்டிகள் தான் சமூக ஊடகங்களின் வருங்கால மீம் மெட்டீரியல்கள் என்பது தான் நிஜம். 

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT