Kottukkaali Movie Review 
வெள்ளித்திரை

விமர்சனம்: கொட்டுக்காளி -  ஒலியும் ஒளியும் ஓஹோ... படம் முடிவு ஸோ ஸோ!

ராகவ்குமார்

ஒரு சினிமாவுக்கு  பின்னணி இசை மிக முக்கியம்  என்பார்கள். ஒரு படத்தின்  வெற்றியில் பின்னணி இசையின் பங்களிப்பு மிக முக்கியமானது. இருப்பினும் உலக சினிமா என்று கொண்டாடப்படும் பல திரைப்படங்கள் குறிப்பாக ஈரானிய மொழி திரைப்படங்கள் பின்னணி இசை இல்லாமல்தான் வெளிவருகின்றன. இதே போன்ற ஒரு முயற்சியை தமிழில் செய்துள்ளார் டைரக்டர் PS வினோத் ராஜ். சிவகார்த்திகேயன் தயாரிப்பில்  சூரி, அன்னா பென் நடிப்பில், வரும் ஆகஸ்ட் 23 அன்று  வெளிவரவுள்ள  கொட்டுக்காளி படம் எந்த வித பின்னணி இசையும் இல்லாமல் வந்துள்ளது. இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்டங்களில் பிடிவாத குணம் உடையவர்களை 'கொட்டுக்காளி' என்றழைப்பார்கள். இது ஒரு வட்டார சொல்லாகும். 

தமிழ் நாட்டின் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பன்னிரண்டாவது வரை படித்த மீனா, (அன்னா பென்) மேற்கொண்டு கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் மாமன் மகன் பாண்டி (சூரி). படிக்கும் இடத்தில் மீனா காதல் வயப்படுகிறார். இந்த காதலை மீனாவுக்கு பேய் பிடித்து விட்டது என்று வீட்டில் இருப்பவர்கள் தவறாக புரிந்து கொண்டு குல தெய்வ கோவிலுக்கும், ஒரு சாமியாரிடமும் அழைத்து செல்கிறார்கள். மீனாவை பிடித்த 'பேய்' மீனாவை விட்டு போனதா என்பதை ஒரு பயணத்தின் வழியே சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

103 நிமிடங்கள் வரை நீளமுள்ள இந்த படத்தில் ஒரு மணி நேரம் வரை ஆட்டோவிலும், பைக்கிலும் கிராமத்தின் வழியே செல்லும் பயண காட்சிகளே இடம் பெறுகின்றன. இந்த பயணத்தின் வழியே கதை மாந்தர்களையும், சிக்கல்களையும் சொல்லியிருக்கிறார் டைரக்டர். வறட்டு ஜாதி கெளரவத்தையும்  பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளையும் இந்த பயணத்தின் வழியே சொல்ல முற்பட்டிருக்கிறார் வினோத் ராஜ்.

'SK production' என்று டைட்டில் கார்டு  முதல் என்ட் கார்ட் போடுவது முடிய பின்னணி இசையும் படத்தில் துளியும் இல்லை. ஆரம்பத்தில் வித்தியாசமாக தெரியும் இந்த அம்சம் படம் செல்ல செல்ல  ரசிக்கும் விஷயமாக மாறி விடுகிறது. வாகனத்தின் ஓசை, காற்றின் ஓசை, சில சமயங்களில் கத்தும் சேவல் என லைவ் சவுண்ட் எபெக்ட்டில் படம் பார்த்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது. இந்த ஓசைகளை துல்லியமாக பதிவு செய்த ஒலி வடிவமைப்பாளார்கள் சூரன் மற்றும் அழகிய கூத்தனை பாராட்டலாம்.

கண்ணின் கருவிழியை அசைக்கவில்லை, கண் இமையை சிமிட்டவில்லை ஒரு நேரான நிலை குத்திய பார்வையில் ஒரு சித்த பிரமை பிடித்தது போல் வசனம் எதுவும் பேசாமல் மிக சிறப்பாக நடித்துள்ளார் அன்னா பென். சூரியிடம் அடி வாங்கும் காட்சியில் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், யார் முகத்தையும் பார்க்காமல் சிறப்பான நடிப்பை தந்துள்ளார். பிடிவாதம் கொண்ட நபரை குறிக்கும் கொட்டுக்காளி என்ற டைட்டிலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

அன்னா பென், சூரி இருவரையும் தவிர மண் சார்ந்தவர்களையே நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர். அனைவரும் சரியான தேர்வு என யதார்த்த நடிப்பின் மூலம் உணர்த்துகிறார்கள். படத்தில்  இடம் பெறும் சேவல் கூட நடித்திருக்கிறது. 

படம் வித்தியாசமாக இருந்தாலும் தெளிவில்லாத முடிவு ஒரு மைனஸாக உள்ளது. முடிவை ரசிகர்களிடமே விட்டு விடுகிறார் டைரக்டர். ஆனால் நம் தமிழ் ரசிகர்கள் படத்தில் சொல்லப்படும் முடிவுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். படத்தில் வரும் பல ஷாட்கள் மிக நீளமாக உள்ளன. இது சலிப்பை தருகிறது.

சூரி இதற்கு முன்பு நடித்த கருடன், விடுதலை போன்று இந்த கொட்டுக்காளி  வெகு ஜன ரசிகர்களை கவருமா என்பது சந்தேகமே. உலக சினிமா ரசிகர்களுக்கும், மாற்று சினிமா விரும்பிகளுக்கும் இந்த கொட்டுக்காளியை பிடிக்கும். இது போன்ற ஒரு வணிக அம்சம் இல்லாத மாற்று சினிமாவை தந்ததற்கு சிவகார்த்திகேயனை பாராட்டலாம்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT