பிரிலியன்ட் மேக்கிங் அதாவது அறிவுபூர்வமன உருவாக்கம் என சில படைப்புகளை சொல்வார்கள். அது போன்ற ஒரு படமாக வந்துள்ளது துல்க்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம். இன்று வரை நம்மில் பலருக்கு புரியாத, புரிந்து கொள்ள முடியாத ஷேர் மார்க்கெட்டிங் பற்றியும், இதில் நடக்கும் தகடு தத்தம் பற்றியும் லக்கி பாஸ்கர் நமக்கு புரிய வைக்கிறது. வெங்கட் அல்லூரி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காசாளராக வேலை செய்கிறார் பாஸ்கர். நடுத்தர குடும்பம், ஊரெல்லாம் கடன் என்று வாழ்ந்து வருகிறார். மகன், மனைவி, அப்பா, தங்கை, தம்பி இவர்களும் இவருடன் வாழ்ந்து வருகிறார்கள். நன்றாக வேலை செய்தும், வங்கி மேனேஜராக பதவி உயர்வு கிடைக்காததால் வங்கி பணத்தை கையாடல் செய்து தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறார். அதிர்ஷ்ட வசமாக மேனேஜர் பதவி பாஸ்கருக்கு கிடைக்கிறது. தான் வேலை செய்யும் வங்கி வேறொரு வங்கிக்கு கடன் தருவதையும், அந்த வங்கியில் உள்ள பணத்தை இடை தரக்கர் மேத்தா என்பவர் சட்ட விரோதமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதையும் கண்டுபிடிக்கிறார். தானும் சட்ட விரோதமாக பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார். வங்கி நிர்வாகமும், சிபிஐ யும் இந்த குற்றத்தை கண்டு பிடிக்கிறது. இதன் பிறகு பாஸ்கர் லக்கியாக இருந்தாரா?... சில பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது லக்கி பாஸ்கர்.
1990களில் நடந்த மும்பை பங்குச் சந்தை ஊழலை பற்றி இந்த படம் உருவாக்கியுள்ளது. இந்த படம் முதல் பாதி ஒரு கதையுடனும், இரண்டாவது பாதி வேறொரு கதையுடனும் செல்கிறது. வெவ்வேறு கதைகளும் நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடுகி. படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் பார்வையாளர்களிடம் கதை சொல்வதை போல் படம் நகர்கிறது. கதை நகரும் விதமும், ஏற்ற இறக்கத்துடன் பேசும் துல்கரின் குரலும் லக்கி பாஸ்கருக்கு கூடுதல் பலம். 1990 களில் பிரபலமாக பேசப்பட்டன்றன. பங்கு சந்தை மோசடியை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். முழுவதும் உண்மை இல்லை என்றாலும் ஓரளவுக்கு உண்மைக்கு அருகில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
1990 காலகட்டத்தின் பெரிய சைஸ் கம்யூட்டர், வங்கியின் தோற்றம், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாம்பே ( இன்றைய மும்பை ) என படம் முழுவதும் கண்ணுக்கு விருந்தாக காட்சிகள் அமைந்துள்ளன. பணம் இல்லாம அவமானப் படுத்தப்படும் போதும், பணம் வந்த பின் தலைகால் புரியாமல் புது பணக்காரன் செய்யும் சேட்டைகளை துல்கர் செய்யும் போதும் இந்த கதை துல்கருக்கு கிடைத்த விதத்தில் 'லக்கி துல்கர் ' என்று சொல்ல தோன்றுகிறது.
கிளாமர் ஹீரோயினாக வலம் வரும் மீனாட்சி சௌத்திரி இந்த படத்தில் ஆறு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்து எனக்கும் கொஞ்சம் நடிக்க வரும் என்பதை புரிய வைத்திருக்கிறார். GV பிரகாஷின் இசை துல்கர் - மீனாட்சி ரொமான்ஸ் காட்சிகளுக்கு கை கொடுக்கிறது.
கன்டைனரில் பணம் கடத்துவது, கட்டை வண்டியில் பணம் கடத்துவது என பழைய பல்லவியை பாடமால் அறிவுப்பூர்வமாக நடக்கும் நிதி மோசடிகளை சொல்கிறது. படத்தை உருவாக்கிய விதத்திலேயே ஒரு intellectual டச் தெரிகிறது. படத்தின் முதல் பாதியில் பணம் இல்லாமல் துல்கர் சந்திக்கும் பல பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் நாம் சந்தித்த பண பிரச்சனைகளை நினைவுபடுத்துகின்றன.
"இதுல ஜெயிக்கிறது முக்கியமில்லை, எப்ப நிறுத்தணும்றது முக்கியம்" என ஷேர் மார்க்கெட்டிங் பற்றி வரும் டயலாக் ஷேரில் முதலீடு செய்யும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற படங்களை போல மசாலா இல்லாமல், ஒரு கிளாசிக் படமாக வந்திருக்கும் இந்த பாஸ்கரை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தால் லக்கி தான்.