புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற நடிகர் மைம் கோபிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த நிலையில் கடந்த சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தான் நடிகர் மைம் கோபி. அவர் வெற்றி பெற்று பரிசை கையில் வாங்கும் போது, கிடைத்த பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவேன் என கூறினார்.
அதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது அண்ணா நகர் பகுதியில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் வான் உலா என பெயரிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல்முறையாக விமானத்தில் பெங்களூர் அழைத்து செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்தார். இது குறித்து பேசிய தேன்மொழி டிரஸ்ட் நிறுவனர் வினோத் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் அடிப்படையில் குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கோபியுடன் இணைந்து வான் உலா என்ற தலைப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்னை விமான நிலையத்திலிருந்து விமான மூலம் பெங்களூர் அழைத்து செல்கிறோம் அங்கு நட்ச்சத்திர விடுதி ஒன்றில் தங்கவைத்து மகிழ்ச்சி ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என கூறினார்.
இவர்களை நடிகர் சசிகுமார் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட், அம்மு அபிராமி, பார்த்திபன் டைரக்டர், மோனிஷா சென்னை விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தனர். மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வரும் இந்த குழந்தைகள் விமானத்தில் பயணிப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.