மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியாகவுள்ளார். சமீபக்காலமாக வேட்டையன் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த ரஜினிகாந்த், விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடையே மாட்டிக்கொண்டு அவதிப்பட்டார். அரசியல் குறித்த எந்த கேள்விகள் கேட்டாலும், அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் பதிலளித்து வந்தார். அவருடைய செய்தியாளர் சந்திப்புகள் பேசுபொருளாக மாறியது. இன்று அவர் நடித்த வேட்டையன் படத்தின் ட்ரைலர் வெளியாக இருக்கிறது.
இதனையடுத்து இரண்டு நாட்கள் முன்னர் உடல்நலக் குறைவால் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வயிற்று பகுதியில் ஏற்பட்ட திடீர் வலி காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு இருதயத்தில் அறுவை சிகிச்சையற்ற முறையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
அதாவது, தொடையில் சிறு துவாரத்தின் வழியாக ஒயர் போன்ற கருவி செலுத்தப்படும் அது, ரத்த நாளத்துக்குள் ஊடுருவி வீக்கம் உள்ள பகுதிக்கு செல்லும். அக்கருவியில் உள்ள வலைப்பின்னல் போன்ற ஸ்டென்ட், பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தப்படும். இதனால், வீக்கமடைந்த பகுதிக்கு தேவையில்லாமல் ரத்தம் செல்வது தடுக்கப்படும். இதைப் பொறுத்திய பின்னர் ரஜினிகாந்த் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.
மேலும் ரஜினிகாந்த் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பல பிரபலங்களும் ரஜினிகாந்தை விசாரித்து வருகின்றனர். அதேபோல், சிலர் ட்வீட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி ரஜினிகாந்த் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுமென தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இதனை தமிழக பா.ஜ.க. தலைவர், அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது. “நமது மதிப்பிற்குறிய திரு மோடி அவர்கள் தொலைப்பேசி மூலமாக ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தை தொடர்புக் கொண்டு நலம் விசாரித்தார். ரஜினிகாந்த் விரைவில் குணமடையுமாறு பிரதமர் தெரிவித்தார்.” என்று பதிவிட்டிருந்தார்.