புதுப்படங்கள் வெளியான 48 மணி நேரத்திற்குள் விமர்சகர்களோ, பத்திரிக்கைகளோ, யாருமே படத்தைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது எனக் கேரளா உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
துல்கர் சல்மான் நடித்த 'சுப்' என்றப் படத்தில் விமர்சனங்களால் ஒரு கலைஞன் எவ்வளவுத் துன்பப்படுகிறான் என்பதையும் அதனால் அவன் எவ்வளவு பெரிய சைக்கோ ஆகிறான் என்பதையும் பற்றி விவரித்துக் காண்பித்திருப்பார்கள். அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் என்னற்ற இயக்குனர்களின் நல்ல படங்களை மோசமாக விவரித்து அவர்கள் வந்த இடம் தெரியாமல் சென்றிருக்கிறார்கள். நல்லப் படங்களை நல்ல விதமாகவும் மோசமான படங்களை உண்மையாகவும் விமர்சனம் செய்வது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது எதிர்மறையாக மாறும்போதுதான் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்தவகையில் 'ராஹேல் மாகன் கோரா' என்றப் படத்தின் இயக்குனர் உபைனி என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதாவது, “ திரையரங்குகளில் வெளியாகும் தங்களதுப் புதிய படங்களுக்கு வேண்டுமென்றே தவறான விமர்சனங்களைக் கொடுக்கின்றனர். இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தேவன் ராமச்சந்திரன், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் நபராக ஷியாம் பத்மன் என்பவரை நியமித்தார். இதனையடுத்து சினிமா விமர்சனங்கள் தொடர்பானத் தகவல்களை ஷியாம் அறிக்கையாக நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அந்த அறிக்கையில் , “ஒரு திரைப்படம் வெளியான 48 மணி நேரத்திற்குள் விமர்சனம் செய்யக்கூடாது. இதனால் வரவேற்பு குறைந்து வசூல் ரீதியாகப் படம் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தைக் கண்காணிக்க ஒரு இணையத்தளத்தை உருவாக்க வேண்டும்.
அதேபோல் திரைப்பட விமர்சகர்கள் சரியான விமர்சனங்களை மட்டுமே கொடுக்க வேண்டும். இதன்மூலம் படத்தின் உண்மை விமர்சனத்தை மட்டுமே கொடுக்க முடியும். சொந்த கருத்துகளைத் திணித்து விமர்சனம் கூறுவது குறையும்“ என்று அதில் குறிப்பிட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட கேரளா உயர்நீதிமன்றம் 48 மணி நேரத்திற்குள் படத்தைப் பற்றி விமர்சனங்கள் செய்யக்கூடாது என்றுப் பரிந்துரைத்துள்ளது.