சினிமா ரசிகர்கள் பலரும் மற்றும் ஊடகத்தினரும், ‘பார்த்திபன் சாருக்கு இத்தனை தைரியம் எப்படி வந்தது?’ என்ற கேள்வியை கேட்டவண்ணம் இருக்கின்றனர். ஆம், நாளை மறுநாள் மிகப்பெரிய எதிபார்ப்புடன் வெளியாகப்போகும் கமலின், ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில், தனது இயக்கத்தில் உருவான, 'டீன்ஸ் ' படத்தையும் ரிலீஸ் செய்கிறார் பார்த்திபன்.
‘இந்தியன் 2’ திரைப் படத்துடன் மோதும் தைரியம் பார்த்திபனுக்கு எப்படி வந்தது? ‘இந்தியன் 2’ படத்துடன் போட்டி போடுகிறாரா பார்த்திபன் என்ற கேள்வியை பார்த்திபனிடமே கேட்டோம். இப்படத்தின் வெளியீட்டு பிசியில் இருந்த அவர் நமது கேள்விக்கும் இடையில் பதில் தருகிறார்.
"பெரிய படம் வெளியாகும் நாளில் எனது படத்தை ரிலீஸ் செய்வது என்பது தைரியம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. கலையின் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை தொடர்பான விஷயம். ஒரு பெரிய பான் இந்தியா படம் தற்போது வெளியாகியுள்ளது. பத்து நிமிடத்திற்கு ஒரு ஹீரோ படத்தில் வருகிறார். பெரிய டைரக்டர்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுபோன்று மேஜிக்கை செய்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று சில படைப்பாளிகள் நினைக்கிறார்கள். உண்மையில் நிலைமை இப்படி இல்லை.
நல்ல விஷயத்தை சரியாக முறையில் தந்தாலும் அதை ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்வார்கள். ‘புதிய பாதை’யின் போதும் இதைத்தான் செய்தேன். இப்போது பதிமூன்று டீன் ஏஜர்களை வைத்து இயக்கி உள்ள, ' டீன்ஸ் ' படத்துடன் வரும்போதும் நல்ல கதைக் களத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் வருகிறேன்
‘கமல் சார் படத்துடன் போட்டி போடுகிறீர்களா?’ என்று சிலர் கேட்கிறார்கள். முட்டாள்தான் அவர் படத்துடன் போட்டி போடுவான். என் படம் போட்டி போடவில்லை. ‘இந்தியன் 2’ படத்திற்கு ஆயிரம் தியேட்டர்கள் கிடைக்கும்போது, எனது படத்திற்கு 100 தியேட்டர்கள் கிடைத்தால் போதுமானது. இது ஒரு பெரிய மார்க்கெட் போல. இங்கே பாசுமதி அரிசியும் கிடைக்கும், எள்ளும் கிடைக்கும். எள்ளை வாங்குவதைப் போல்தான் என் படமும். புதிதாக ஒரு படம் செய்திருக்கிறேன். வந்து பாருங்கள் என்கிறேன் நான்.
‘அபூர்வ சகோதரர்கள், புதிய பாதை வந்த காலத்தை இது நினைவு படுத்துகிறதா?’ என்றால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அபூர்வ சகோதரர்கள் படத்துடன் புதிய பாதை வெளியானால் எனது படம் வெற்றி பெறாது என்பதற்காக, செங்கல்பட்டு ஏரியாவில் புதிய பாதை படத்தை வாங்க மறுத்து விட்டார்கள். இதையும் மீறி படத்தை ரிலீஸ் செய்தேன். புதிய பாதை வெற்றி பெற்றது.அப்போதே கமல் சார் பெரிய ஹீரோதான். இப்போது அதைவிட பல மடங்கு மிகப்பெரிய ஹீரோ. இப்போதும் எனது படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன். இந்தப் பரபரப்பில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். நான் கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன்" என்று சர்ப்ரைஸ் தருகிறார் பார்த்திபன்.