ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் அறிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். அதற்காக நடிகர் கமலஹாசன் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக படம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தற்போது தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பாதியில் நின்ற போது இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கத் தொடங்கினார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கேம் சேஞ்சர் திரைப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
நாளை ராம் சரண் பிறந்தநாள் என்பதால், ரசிகர்களை குஷிப்படுத்த கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் வகையில் நாளை காலை 9 மணிக்கு கேம் சேஞ்சர் படத்தில் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜரகண்டி என தொடங்கும் அப்பாடலுக்கு தமன் இசையமைத்து உள்ளார். அத்துடன் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.