வெளியே வெயில் கொடுமை ஜாஸ்தியா இருக்கே என்ன செய்யலாம் என யோசிச்சு 3 மணி நேரம் ஜில்லுன்னு ஏ சி தியேட்டரில் பொழுதைப் போக்கலாம் என முடிவெடுத்து பார்க்கப்போன படம்தான் விஷால் நடித்த ‘ரத்னம்.’ படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திற்கு அப்புறம்தான் புரிஞ்சது வெளியில் இருக்கிற வெயிலின் கொடுமையே தேவலாம் என்று.
விஷால் - ஹரி கூட்டணியில் இன்னொரு தாமிரபரணியாக ‘ரத்னம்’ இருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் உங்களுக்கு ஏப்ரல் பூல் என்று கதையில் சிரிக்கிறார் டைரக்டர்.
திருப்பதி மலையில் ஒரு பஸ்ஸுக்குச் செயற்கையாக விபத்தை ஏற்படுத்தி பயணிகளிடமிருந்து நகைகளைக் கொள்ளையடிக்குது ஒரு கும்பல். அடுத்தக்காட்சியில் ஒரு பொண்ணு ஆந்திரா பஸ் ஏறி வேலூர்க்கு வந்து இறங்குறா. அப்புறமா ஒரு பையன் மார்க்கெட்டில் ஒரு ரவுடியைக் காப்பாத்துறான். ராயுடு பிரதர்ஸ் ஒரு பெண்ணை கொலை பண்ண துரத்துறாங்க. அந்த பெண்ணை நம்ம ஹீரோ காப்பாத்துறார்.
'அட சரிப்பா, கதை எங்க?' என நீங்க கேக்குறது புரியுது. அப்படி ஒண்ணு இருந்தாதான சொல்ல முடியும். மேல சொன்ன காட்சிகளை ஒழுங்கா டெவலப் பண்ணியிருந்தாலே ஒரு சுமார் படத்தை ஹரி அண்ணாச்சி தந்திருக்கலாம். பல படங்களின் கதையை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ஹரி தனது ஒரே படத்தில் அத்தனையும் தர முயற்சி செய்து வேகாகாத அவியலை தந்திருக்காரு.
ஆன்னா ஊன்னா யாரவது தன் கையை அறுத்துகிரானுக அல்லது அடுத்தவனை வெட்டுறாங்க. காட்சிக்குக் காட்சி காரை பறக்க விடுறாங்க. நிறைய சேசிங் சீன் இருக்கு. இதை நாங்க சாமி, சிங்கத்திலேயே பார்த்துட்டோம் என ரசிகர்கள் சொல்வது கேட்க முடிகிறது. நீங்க, நல்லவரா? கெட்டவரா? என கன்பியூஸ் ஆகும் அளவுக்கு சமுத்திரக்கனி கேரக்டர் உள்ளது. ஒரு பக்கம் மக்கள் மோசமா மாறிட்டாங்கன்னு அட்வைஸ் பண்றார். இன்னொரு பக்கம் விஷாலை அடிதடிக்கு அனுப்புறார். ஒண்ணும் புரியலை. "போலீசும், ரவுடியும் அண்டர்ஸ்டாண்டிங்கோட வேலை பார்த்தாதான் நாட்டுக்கு நல்லது"ன்னு நம்ம கனி ஒரு இடத்தில சொல்றாரு. இப்படில்லாம் டயலாகா? புதுசாலடா இருக்குனு நமக்கு பயம் வருகிறது.
வில்லனைப் பார்த்தா பயம் வரலைன்னாலும் பரவாயில்லை. சிரிப்பு வராம இருக்கலாம் இல்லையா? வில்லன் முரளி சர்மா பபூன் மாதிரி வர்ற சீன்ல எல்லாம் பவுடரைப் போட்டுக்கிட்டே இருக்கார். யோகிபாபுவும் சிரிக்க வைக்கல. இன்னொரு வில்லன் 'சேட்டா ' ஹரிஷ் பேரடியும் எதுக்கு வர்ராருன்னே தெரியல. பிற மொழியிலிருந்து கலைஞர்களைத் தன் படத்துல நடிக்க வெச்சு, வெச்சு செஞ்சுட்டாரு நம்ம ஹரி. விஷால் இந்தப் படம் வெளிவராம இருக்க சிலர் பிரச்னை செய்றதா சொல்லி வருத்தப்பட்டாரு. படத்தில் விஷால் நடிப்பைப் பார்த்தா, 'இதுக்கு பஞ்சு மூட்டை குடவுன்லேயே இருந்துருக்கலாம்’ன்னு யோசிக்க தோணுது. அம்மணி ப்ரியா பவானி ஷங்கர்... எங்கம்மா இருக்கீங்க?
படம் திருப்பதியில் நடக்குதா? வேலூரில் நடக்குதா? திருத்தணியில் நடக்குதா? இல்லை நகரியில் நடக்குதான்னு நாம ஒரு கட்டத்தில் குழம்பி போய், ஏழு கொண்டல வாடா, திருத்தணி முருகா சீக்கிரம் படத்தை முடிக்க சொல்லுங்கப்பா என வேண்டிக்கொள்கிறோம்.தேவி ஸ்ரீ பிரசாத்தின் மியூசிக் ஏதோ பரவாயில்லை ரகம்தான். கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், விக்கி என நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் சேர்ந்து பண்ண ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமே பாராட்டும்படி இருக்கிறது.
முக்கியமா ஒரு விஷயம் இந்தப் படம் பார்க்கும் சாமி, சாமி ஸ்கோயர், வீரம் இப்படிப் பல படங்கள் உங்கள் நினைவுக்கு வந்தால் இது உங்கள் பார்வையின் தவறுதானே தவிர டைரக்டரின் கிரேயேட்டிவிட்டியின் குறைபாடு அல்ல. தமிழ் நாட்டில் மலையாளப் படங்கள் நல்லா ஓடுது. தமிழ் சினிமா தன் அணுகுமுறையை மாத்திகணும்ன்னு நாம சொன்னா நீ தமிழனான்னு கேட்பாங்க. நமக்கு எதுக்கு வம்பு?