Mr & Mrs Mahi Review 
வெள்ளித்திரை

Review - Mr & Mrs Mahi... கிரிக்கெட் தம்பதிகள் இணையும்போது என்ன நடக்கும்?

நா.மதுசூதனன்
  • பட்டம் அழகாய் பறக்கும்னு சொல்வாங்க. ஆனா அதைத் தாங்கிப் பிடிக்கிற நூலுக்கு மரியாதை இருக்காது. புகழும் அது மாதிரி தான். அந்த வெளிச்சம் தன்மேல் படணும்னு நெனைக்கறவங்க அதுக்கு காரணமானவர்களைச் சொல்றது ரொம்ப அரிது. இதயெல்லாம் பெரிசு படுத்தக் கூடாது.

  • 2% ஹார்ட் வொர்க் 98 % மார்கெட்டிங். புகழ் வெளிச்சத்தை தக்க வைத்துக் கொள்ள இதுவே வழி. எல்லாம் கிடைத்தாலும் சந்தோசம் வராது. அடுத்ததாய் வேறு ஏதாவது தேடி ஓடிக்கொண்டே இருப்போம். நின்று பார்த்தால் வாழ்க்கையைக் கடந்திருப்போம். 

  • இதுவரை இப்படியொரு உணர்வே இருக்குனு தெரியாம இருந்திருக்கேன். நீ வந்தப்பறம் தான் அது தெரிஞ்சது. என்னன்னு தெரியுமா? சந்தோஷம்.

  • நீ எனக்கு ஒரு ஏணி. நம்பிக்கை. என் ஆக்சிஜன். என் மனசைப் புரிஞ்சு வழிநடத்தறேன்னு சந்தோஷப்பட்டேன். அதுக்கு பின்னால இப்படியொரு சுயநலம் இருக்குன்னு தெரியவே இல்லை.

  • இதுவரை நீ எடுத்த முடிவெல்லாம் வேற ஒருத்தர் சொல்லி, வழிகாட்டி நீ எடுத்திருக்கலாம். அடுத்த பந்து உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கற பந்து. அதை எப்படி அடிக்கறதுன்னு உன்னோட முடிவா மட்டும் தான் இருக்கணும்.

  • ஒரு அம்மாவுக்குக் கடமைன்னா என்னனு தெரியாதா. புருஷன், புள்ளைங்க எல்லாரும் நிம்மதியா இருக்கணும் அப்டின்னு வாழற அம்மாக்கு தனக்கு இதனால என்ன லாபம் அப்படிங்கற கேள்வி வரவே வராது. சந்தோசம் நெஞ்சுல இருக்கு. நமக்கு என்ன கிடைக்குதுன்னு எதிர்பார்க்கறதுல இல்ல.

படம் முழுதும் இது போன்ற வசனங்கள். சண்டைக்காட்சிகள் இல்லை, குத்தாட்டங்கள் இல்லை. பெரிதான திருப்பங்கள் இல்லை. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் இருந்தாலும், எதிர்பார்த்தபடி முடிந்தாலும் நிறைவாக இருக்கிறது என்ற உணர்வைத் தரும் படம் தான் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி.

நெட்ப்ளிக்ஸில் உள்ள, ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர் நடித்த இந்தப் படம், ஒரு கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட படம். ஏகப்பட்ட ஆசைகளும், முன்கோபங்களும் கொண்ட ஒரு தோல்வியடைந்த கிரிக்கெட்டராக ராவ். கிரிக்கெட் மேல் அதீத ஆர்வம் இருந்தாலும் குடும்ப அழுத்தத்தால் மருத்துவராகப் பணியாற்றும் ஜான்வி. இவர்கள் இணையும்போது என்ன நடக்கும்?

தன்னால் சாதிக்க முடியாத விஷயங்களைத் தன் மனைவி மூலம் சாதிக்கும் கணவன் அவள் புகழ் பெரும்பொழுது சுய கௌரவம் பாதிக்கப்பட்டு கோபப்படுகிறான். பின்னர் மனம் திருந்தி அவள் வளர்ச்சிக்குத் துணை நிற்பதே கதை. மகேந்திராக ராஜ்குமார் ராவ், மஹிமாவாக ஜான்வி. அழகான ஜோடி. நடிப்பு என்று வரும் போது, ராவ் சுலபமாக ஸ்கோர் செய்து விடுகிறார். பல காட்சிகளில் ஜான்வியின் கண்கள் படபடத்தாலும் ஒரு கிரிக்கெட்டருக்கான உடல் மொழி வராமல் சற்று தடுமாறுகிறார்.

ராஜ்குமாரின் அப்பாவாகக் குமுத் மிஸ்ரா. அம்மாவாக ஜெரினா வஹாப். இருவரும்  நிறைவு. ஆனால் குமுத் மிஸ்ராவின் கோபம் சில சமயம் எரிச்சலை தருகிறது. இந்தக் காலத்தில் இப்படியொரு அப்பா பிள்ளையா என்ற எண்ணம் வராமல் இல்லை. அவரது தம்பி கேரக்டர் சும்மா தண்டமாக வந்து போகிறது.

சூரிய வம்சம் கதைபோல இருந்தாலும் இது போன்ற சுய முன்னேற்றப் படங்கள் ஒரு நிறைவைத் தருவது எப்பொழுதும் சாத்தியம், அதுவும் இந்தியா மாதிரியான கிரிக்கெட் ஆர்வலர்கள் நிறைந்த ஒரு இடத்தில் தொடர்ந்து இது போன்ற படங்கள் வருவது நல்ல விஷயம்.

தமிழில் கனா, இந்தியில் தோணி, 83, கூமர், போன்ற படங்கள் உதாரணம். முடிவுகள் தெரிந்தே படம் பார்த்தாலும், பட இறுதியில் ஹீரோவோ ஹீரோயினோ வெற்றி பெற்றால் கைதட்டுகிறோம். நிறைவாக வெளியே வருகிறோம். அது தான் இந்தப் படங்களின் திரைக்கதை சூட்சமம். இதில் ஜெயித்த படங்கள் வெற்றி பெறுகின்றன.

திரைக்கதை கட்டுக்குள் வந்து வசனங்கள் இயல்பாக அமைந்து விட்டால் தப்பித்து விடும் படங்களில் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் மஹியும் ஒன்று.

தொடர் தும்மல் அவஸ்தையைப் போக்க உதவும் மூலிகை டீ!

கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு என்ன தகுதி உள்ளது – சீமான்!

தவறு செய்வது தவறில்லை ஆனால்..!

News 5 - (22.10.2024) தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள்!

இவர்களுடன் வாதிட்டு நேரத்தை விரயம் செய்யாதீர்கள்!

SCROLL FOR NEXT