சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள திரைப்படம் யசோதா, வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள யசோதா, மருத்துவத் துறையில் நடக்கும் வாடகைத் தாய் மோசடிகளை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் வரலக்ஷ்மிசரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவிமூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் வெளியான யசோதா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரெய்லரின் முடிவில் வரும் "யசோதா யாருன்னு தெரியும்ல" என்கிற சமந்தாவின் வசனமும் ரசிகர்களிடம் ட்ரெண்டானது. இந்நிலையில், யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, அவரது மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி கூறி கண்கலங்கினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டடிருந்தார்.அது சமூகவலைத்தளங்களில் பேசு பொருளானது. இதன் எதிரொலியாக பல்வேறு திரை பிரபலங்கள் சமந்தாவிற்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது தியேட்டர் பிரீ ரிலீஸ் பிசினஸில் மாஸ் காட்டியுள்ளது யசோதா. இந்தப் படத்தின் ஒடிடி ரைட்ஸ் 24 ரூபாய் கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 13 கோடி ரூபாய்க்கும், இந்தி ரைட்ஸ் 3.5 கோடி ரூபாய்க்கும் விற்பனைஆகியுள்ளதாம். அதேபோல், சர்வதேச ரைட்ஸும் சுமார் 2.5 கோடி ரூபாய்க்கும், தியேட்டர் ரைட்ஸ் 10 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. ஆகமொத்தம் 53 கோடி ரூபாய்க்கு யசோதா படத்தின் பிரீ தியேட்டர் பிசினஸ் நடந்துள்ளது.
முன்னணி ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் சமந்தாவின் படம் தியேட்டர்களில் வெளியாகும் முன்பே 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.