தங்கலான் படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான சம்பவத்தை பற்றிப் பேசியுள்ளார். அந்தக் கதையை கேட்கும்போது ஸ்டார் படத்தின் திரைக்கதையை பார்ப்பது போலத்தான் தோன்றுகிறது. எப்படி என்றுத்தானே யோசிக்கிறீர்கள்?
அதற்கு ஸ்டார் படத்தின் கதையை முதலில் பார்ப்போம். பின் விக்ரம் பேசியதைப் பார்ப்போம்.
ஸ்டார் படத்தில் கவின் சிறு வயதிலிருந்தே மேடை நாடகம் செய்து வருவார். பின் கல்லூரி நாட்களில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். பல தடைகளுக்கு பின்னர் ஒரு வாய்ப்பு வரும். அப்போது ஒரு விபத்து ஏற்பட்டு பல நாட்கள் எதுவும் செய்ய முடியாமல் இருப்பார். முகத்தில் தழும்பு ஏற்பட்டுவிடும். இறுதியில் பெரிய நடிகரவார். இதுதான் ஸ்டார் படத்தின் கதை. இல்லையா?
இப்போது நடிகர் விக்ரம் பேசியதைப் பார்ப்போம்.
தங்கலான் பட நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “தங்கலான் படத்தில் ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் ஹீரோவின் உடன் இருப்பவர்கள், 'உன்னால் முடியாது, முடியாது' என்று கூறுவார்கள். அவனுக்கு கை உடையும் கால் உடையும். ஆனால், அவன் எவ்வளவு அடிபட்டாலும், யார் என்ன கூறினாலும் முன்னோக்கிச் செல்வான். இந்த கதை என் மனதுக்கு நெருக்கமானது. ஏனெனில், நான் 8வது படிக்கும் வரை முதல் மூன்று ராங்கில் இடம்பெறுவேன்.
அதன்பிறகு நடிக்க ஆசை வந்தவுடன், கடைசி மூன்று ராங்கிற்கு சென்றுவிட்டேன். நடிப்பில்தான் கவனம் செலுத்தினேன். பின் கல்லூரியிலும் எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்று முழு மூச்சுடன் நடிப்புத்தான் என்றிருந்தேன். அப்போது ஒரு நாடகத்தில் நடித்து சிறந்த நடிகன் என்று விருது வாங்கும்போது எனக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் என் கால் செயலிழந்தது. மொத்தம் 23 சர்ஜரி நடந்தது. மூன்று வருடங்கள் படுத்தப் படுக்கையில் இருந்தேன். வீட்டில் கதறினர், கால் இல்லாமல் எப்படி? என்று.
டாக்டர் சொன்னார், காலை முழுமையாக எடுக்க வேண்டியது. ஆனால், விட்டுவைத்திருக்கிறோம். மற்றப்படி கால் முழுமையாக செயலிழந்துவிட்டது. துணை (ஸ்டிக்) இல்லாமல் நடக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஆனால், நான் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, விடவும் இல்லை. முன்னோக்கிச் செல்ல முயன்றேன். முதலில் ஒரு ஸ்டிக் இல்லாமல் நடக்கத்தொடங்கினேன். பின் இரண்டு ஸ்டிக்குகளுமே இல்லாமல் நடக்கத்தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இப்போது இங்கிருக்கிறேன்." என்று அவருடைய வாழ்க்கை கதைப் பகிர்ந்துள்ளார்.
ஒருவேளை ஸ்டார் படமும் Based on true story-யா இருக்குமோ?