Star Movie Review In Tamil 
வெள்ளித்திரை

விமர்சனம் - ஸ்டார்: ஜொலிக்கவில்லையே!

ராகவ்குமார்

‘டாடா’ பட வெற்றிக்குப் பிறகு கவின் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்துள்ள படம் ‘ஸ்டார்’. இப்படத்தை SSI நிறுவனம் தயாரித்துள்ளது.

பாண்டியன் (லால்) என்ற புகைப்படக் கலைஞரின் மகன் கலையரசன் (கவின்) சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சிறு வயது முதல் ஆசைப்படுகிறார் கலை. இவரது தந்தை பாண்டியனும் மகனின் ஆசைக்கு உறுதுணையாக இருக்கிறார். விஸ்காம் படிக்க ஆசைப்பட்டு, தாயின் வற்புறுத்தலால் இன்ஜினியரிங் படிக்கிறார். பல போராட்டங்களைச் சந்தித்தப்பின்பு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன்பு விபத்தில் சிக்கி கலையின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் காரணமாக தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்கிறார் கலை. இப்படத்தின் இயக்குனர் இளன். இவரது தந்தை பாண்டியன் திரையுலக புகைப்படக் கலைஞர். ஸ்டில்ஸ் பாண்டியன் என்று அழைக்கபடுபவர். ‘ராஜா ராணி’, ‘ஜெய் பீம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

‘ஸ்டார்’ படத்தில் அப்பாவாக நடிக்கும் லால் கதாபாத்திரம் தன் தந்தை பாண்டியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் என்கிறார் டைரக்டர் இளன். சொந்த வாழ்க்கையின் இன்ஸ்பிரேஷனை மையப்படுத்தி படம் எடுக்கலாம். ஆனால், படம் இன்ட்ரஸ்டிங்காக இருக்க வேண்டுமே? இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Star Movie Review

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனைப் பற்றிய கதையில் பல தேவையற்ற விஷயங்கள்! நடிப்புப் பயிற்சி பெற மும்பை சென்று நடிப்பு பள்ளியில் சேர்க்கிறார் ஹீரோ. குப்பை அள்ளி, எடுபுடி வேலை செய்து மும்பையில் கஷ்டப்படுகிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு மும்பையில் ஏன் நடிப்புப் பயிற்சி எடுக்கவேண்டும். நம் ஊரிலேயே சிறந்த நடிப்புப் பயிற்சி தர கூத்துபட்டறை போன்ற நிறுவனங்கள் உள்ளனவே! இது டைரக்டருக்கு தெரியாதா என்ற கேள்வி எழுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் என்று பொருந்தாத ஒன்றை வைத்துள்ளார் டைரக்டர்.

ப்ரீத்தி, அதிதி போங்கர் என இரண்டு ஹீரோயின்கள் இருந்தும், இந்த இருவருக்கும் கவினை காதலிப்பதைத் தவிர பெரிய வேலை எதுவும் இல்லை. குறிப்பாக அதிதி கேரக்டரை வேண்டுமென்றே வண்டியில் ஏற்றிவிட்டது போல தெரிகிறது.

எழிலின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. பாடல்களின் இசையில் உயிரோட்டம் இல்லை. படத்தில் மிகப்பெரிய ஆறுதல் லாலின் நடிப்புதான். சினிமாவில் சாதிக்கப் போராடும் இளைஞனை மையப்படுத்தி ‘முகவரி’ படம் 23 ஆண்டுகளுக்கு முன்பே வந்துள்ளது. அந்த அளவுக்கு இருக்குமா என்று எதிர்பார்த்துப் போனால், ஏமாற்றமே மிஞ்சும்!.

சினிமாவில் போராடுபவர்களைப் பற்றி படம் எடுத்தாலும் சுவாரசியமாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள். அப்படிப்பட்ட கதையைக் கையில் எடுத்து, சரியான திரைக்கதை இல்லாததால் கவின், லால் போன்ற ஸ்டார்கள் இருந்தும் டைரக்டர் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் இந்த ஸ்டார் ஜொலிக்கவில்லை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT