சில காலங்களுக்கு முன் ரீரிலீஸ் படங்கள் வெளியாகி வந்தன. இதனையடுத்து மீண்டும் ஒரு படத்தை படக்குழு ரீரிலீஸ் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
திரையரங்கில் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகும் புதுப்படங்களைவிட பழைய படங்களே ரீரிலீஸில் வரவேற்பைப் பெற்றன. வந்தால் ஒரே நேரத்தில் நல்ல படங்கள் வரும், இல்லையென்றால் ஒரு படம் கூட வராது. இதுதான் சினிமாவின் ப்ளஸ் மற்றும் மைனஸ். இந்த ஆண்டின் முதல் பாதியில் மலையாளப் படங்கள் தமிழகத்தில் ஒரு புயலாக வந்து ஓய்ந்தன. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் வருமானமும் அள்ளினார்கள்.
நல்ல தமிழ் படங்கள் வராத நிலையில், வாலி, காதலுக்கு மரியாதை, யாரடி நீ மோஹினி போன்ற பல பழைய படங்கள் ரீரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல வசூலை ஈட்டினார்கள்.
இப்படி ரீரிலீஸான படங்களிலேயே மிக அதிகமாக வசூல் ஈட்டிய படம் கில்லி.
ஆனால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதி தொடங்கியதிலிருந்தே கோலிவுட்டில் நல்ல படங்கள் தொடர்ந்து ரிலீஸாகி வருகின்றன. இதனால் ரீரிலீஸ் படங்களுக்கான அவசியம் தேவையில்லாமல் போனது.
அந்தவகையில் மீண்டும் ஒரு படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஆம்! அது ரஜினிகாந்த் படம்தான்.
தற்போது ரஜினியின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. ஆனால், வேட்டையன் படம் போட்ட படத்தை மட்டுமே எடுத்தது. இப்படியான நேரத்தில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டும் ரஜினி திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும் ஒரு படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறது படக்குழு.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படத்தை ரீரிலீஸ் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்தப் படத்தின் சில காட்சிகளும் இளையராஜாவின் பாடல்களும் இன்றளவு இளம் தலைமுறையினருக்குகூட மிகவும் பிடித்தவை.
எஸ்எஸ்ஐ புரொடக்சன்ஸ் நிறுவனம் தளபதி படத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ரீ ரிலீஸ் செய்கிறது. அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று அவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பும் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.