இந்தியாவிலேயே ஓவியத்தில் Phd பட்டம் பெற்ற ஒரே நடிகர் நம் தமிழ் காமெடி நடிகர் பாண்டுதான். இவர்தான் அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்தவர்.
தனது ஓவியக்கலை மூலமாகவே சினிமா வாய்ப்பு பெற்று, பல படங்களில் காமெடியனாக நம்மை சிரிக்க வைத்தவர் இவர். நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மூலம் எம்ஜிஆருக்குப் பரிச்சயமான நடிகர் பாண்டு, எம்ஜிஆர் படங்களை விதவிதமாக வரைந்து எம்ஜிஆரிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
இதன்பின்னரே எம்ஜிஆர் பாண்டுவை திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்தார். முதலில் கேமியோ ரோல்களிலும், கூட்டத்தில் ஒருவராகவும் நடித்து வந்த இவர், பின்னாட்களில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். முதன்முதலாக எம்ஜிஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் சிறிய காட்சியில் பாண்டு தோன்றினார்.
திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர், ஆரம்பத்தில் கருப்பு சிவப்புக் கொடியும் நடுவில் தாமரைச் சின்னம் கொண்ட கொடியை வடிவமைக்க எண்ணினார். பின்னர் பாண்டு ஓவியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்று தெரிந்துக்கொண்ட எம்ஜிஆர், அவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். அவர் ஒரு புது சின்னத்தை வரைந்தார். அதாவது கருப்பு சிவப்புக் கொடியில் அண்ணா ஒற்றை விரலை நீட்டியபடி இருக்கும் கட்சிக் கொடியை வடிவமைத்தார். அதுவே அதிமுகவின் அதிகாரபூர்வக் கொடியானது.
ஒருநாள் எம்ஜிஆர், பாண்டுவை அழைத்து, இரட்டை இலையை சின்னமாக யோசித்துள்ளோம், வரைந்து கொடு என்று கூறினார். நரம்புகளுடன் கூடிய இரட்டை இலை சின்னத்தை பாண்டு வரைந்து கொடுத்தார். அதுவே பின்னாட்களில் அனைவரின் மனதில் பதியும் ஒரு சின்னமாக மாறியது.
பிறகு ஒருநாள் எம்ஜிஆர் படத்தின் போஸ்டர்கள் பேனர்கள் வைக்க முடியாத நிலை வந்தபோது, பாண்டுதான் ஒரு புதிய விளம்பர உத்தியை வடிவமைத்தார். வீடுதோறும் சிறிய அளவிலான டோர் ஸ்லிப் எனப்படும் போஸ்டரை அவர் உருவாக்கினார்.
கலையில் போற்ற வேண்டிய ஒருவராக இருந்த பாண்டு, இந்தியாவில் ஓவியத்தில் Phd பட்டம்பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையை சேர்த்தார். இன்றுவரை யாருமே இந்த பட்டத்தை பெறவில்லை. இத்தனை பெருமைக்குரிய வேலைகளை செய்தாலும், திரைக்கு முன் தன் மக்களை சிரிக்க வைப்பதற்காக ஒரு கோமாளியாக தன்னை வடிவமைத்துக்கொண்டவர் பாண்டு.
ஒரு ஓவியனுக்கு வடிவமைப்பதுக் குறித்து சொல்லித்தரவா வேண்டும்?