Radha Mohan 
வெள்ளித்திரை

மெல்லிய உணர்வுகளால் இதயம் நிறைத்த படைப்பாளி - ராதா மோகன்!

ராதா ரமேஷ்

மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான குணங்களைத் தாண்டி சில தனித்துவமான சுபாவம் உண்டு. அதைப்போலவே படைப்பாளிகளுக்கும் ஒரு தனித்துவமான சுபாவம் உண்டு. அப்படி சினிமா மூலம், வன்முறை இல்லாமல், காட்டுத்தனமான மனித தாக்குதல்கள் இல்லாமல் மென்மையான கதைகளை கையில் எடுத்து  மிகவும் ஆழமான படைப்புகளை தந்தவர் தான் இயக்குனர்  ராதா மோகன். மனிதனின் மெல்லிய உணர்வுகளை வாழ்வியலாக அடிக்கோடிட்டு செல்லும் கதை அம்சங்களை திரைப்படமாக எடுத்த  ஒரு நல்ல படைப்பாளியான ராதா மோகனைப்  பற்றி இப்பதிவில் காணலாம்.

தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக  அறிமுகமானவர் ராதா மோகன். ஆனால் இவரை  மக்களிடம்  நெருக்கமாக கொண்டு சேர்த்த ஒரு படைப்பு என்றால் மொழி திரைப்படத்தை சொல்லலாம்.

வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு பெண்ணை மையமாக வைத்து புனையப்பட்ட கதை தான் மொழி. மிகவும் நகைச்சுவையோடு, அதேசமயம் வாய் பேச முடியாத பிரச்சனையை ஒரு பெரிய பூதகரமான விஷயமாக காட்டாமல், அவர்களிடம் ஒரு பரிதாபம் தோன்றாத அளவுக்கு மிகவும் எதார்த்தமாக அந்த கதையைப் படைத்திருப்பார். தன் வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு மனிதரையும், அவர்களது உணர்வுகளையும் ஏளனம் செய்யாமல், அவரவருக்கு உரிய பிரச்சினைகளின் வழியாக அவர்களைப் புரிந்து கொண்டு உணர்வுபூர்வமான தீர்வுகளை பெரிய மெனக்கெடல் இல்லாமல் போகிற போக்கில் அமைத்துக் கொடுப்பதை போல மிகவும் எதார்த்தமாக, கண்ணியமாக ஒவ்வொரு காட்சியும் மிக நுட்பமாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் இசையும்  அதில் இருக்கும் பாடல்களும் இப்படத்திற்கு ஒரு பெரிய பலம் என்றே சொல்லலாம்.

மாற்ற முடியாத குறைகளை, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்போடு பார்க்காமல், குறைகளை குறைகளாகவும்  பார்க்காமல் ஒரு சக மனிதனை கடந்து செல்வது போல் மிகவும் எதார்த்தமாக ஜோதிகா, பிருத்திவிராஜ்  நடித்த காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மிகச் சிறந்த மற்றொரு படம் என்றால் அபியும் நானும் படத்தை சொல்லலாம். மேலோட்டமாக பார்ப்பதற்கு அப்பா மகள் பாசத்தை வலியுறுத்தும் படம் போலவே இருக்கும். ஆனால் உண்மையில் தன் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் எத்தகைய உணர்வுகளோடு ஒரு மனிதன் கடந்து போகிறார் என்பதை மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தி இருப்பார். இந்த உலகில் உள்ள சக்திகளுக்கெல்லாம் மேலானது மனித சக்தி தான் என்பதையும், ஒரு அமைதியான வாழ்க்கைக்கான அடித்தளத்தை அவர்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதையும் மிகவும் ஆழமாக காட்சிப்படுத்தி இருப்பார்.

60 வயது நிரம்பிய ஒரு முதியவரின் மனநிலை என்னவாக இருக்கும், அவர் இந்த உலகினை எவ்வாறு புரிந்து கொள்கிறார், நோயினால் அவர் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் போதும் அவரது ஆழ்மனதில் மேலோங்கி இருக்கும் மனிதர்களைப் பற்றிய உணர்வுகள் என்னவாக இருக்கும், என்கிற ஆழமான மனதின்  வெளிப்பாட்டை 60 வயது மாநிறம் என்று திரைப்படத்தில் காட்டியிருப்பார். அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்படும்  60 வயது  முதியவரை  மையமாக வைத்து படைக்கப்பட்ட கதை தான் 60 வயது மாநிறம். நடிகர் பிரகாஷ்ராஜ் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். இன்று உலகின் பல்வேறு இடங்களில் அல்சைமர் எனும் மறதி நோயின் பாதிப்புக்கு பல்வேறு முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றின் மொழி என்ற ஒரு திரைப்படம் இவர் படைப்பில் மிகவும் முக்கியத்துவமானது. ஒரு இல்லத்தரசியின் ஏக்கமும், தனக்கென  ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற உந்துசக்தியையும் படத்தின் மூலம் நன்கு காட்சிப்படுத்தியிருப்பார். அம்மா என்பதும் அப்பா என்பதும்  ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பொறுப்பு என்பதை  தாண்டி, அவர்களுக்குள்ளும் வாழ்வதற்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்பதையும் அந்த வாழ்க்கையை  குழந்தைகளை பாதிக்காத மாதிரி எப்படி அமைத்துக் கொள்வது என்பதையும் மிகவும் அழகாக படைத்திருப்பார்கள். மேலோட்டமாக பார்த்தால் சில  ஆபாசமான  காட்சிகள் இருப்பது போல் தோன்றலாம். ஆனால் அதை எல்லாம் தாண்டி, அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எவ்வளவு சிக்கலான ஒரு விஷயமாக இருக்கிறது என்ற உளவியலை மிகவும் நுட்பமாக விளக்கி இருப்பார். இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குரிய  நடைமுறை சிக்கல்களையும், தன் குழந்தைகளை பாதிக்காத ஒரு வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பதையும் மிகவும் எதார்த்தமாக சொல்லி இருப்பார் இத்திரைப்படத்தில்.

அதைப் போல இவர்  இயக்கிய பயணம் திரைப்படமும் ஒரு அற்புதமான படைப்பு என்றே சொல்லலாம். மக்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட இவரது திரைப்படங்களான மொழி, அபியும் நானும், பயணம் போன்றவை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ படங்களை பார்க்கிறோம், ஆனால் சில படங்களை பார்க்கும் போது மட்டும் தான் மனதும் உடலும் மிகவும் இலகுவாக, அமைதியாக இருப்பதை உணர முடிகிறது. பொதுவாக ராதா மோகன் இயக்கிய  திரைப்படங்களை பார்க்கும் போதெல்லாம் அப்படிப்பட்ட ஒரு உணர்வு தான் இருக்கும். நன்கு பழகிய நண்பர்களிடத்தில் ஒரு சுவையான கலந்துரையாடலை முடித்து விட்டு வந்ததைப் போன்று, அதில் சின்ன சின்னதாய் ஆசைகளும், ஆனந்தமும், எதிர்பார்ப்புகளும் இவரது படங்களை கடந்து செல்லும் வழியில் நிறையவே கொட்டி கிடக்கும். இவரது படைப்புகள் எத்தனை முறை பார்த்தாலும் நிச்சயம் ஒரு சலிப்பை தராது.

அமைதியான இடங்களுக்குச் சென்று ஆர்ப்பரிக்கும் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு உணர்வை, இவரது திரைப்படங்களை பார்க்கும் போது நிச்சயம் உணரலாம்!

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

SIP திட்டத்தின் மாதத்தவனையை தவறவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT