இந்திய அளவில் பிரம்மாண்டமான மற்றும் பிரபலமான இயக்குநர்களில் ராஜமௌலியும் ஒருவர். பான் இந்தியப் படங்களை இயக்கி, அதிக வசூலைக் குவித்தவர் இவர். பான் இந்தியப் படங்களை எடுக்க எது காரணம் என்ற தகவலை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்தியத் திரைப்பட உலகில் கடந்த சில ஆண்டுகளாக தான் இந்தியப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர் இயக்குநர் ராஜமௌலி தான். பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமடைந்தார். உண்மையில் இப்படத்திற்கு முன்பே பான் இந்தியப் படங்கள் வந்துள்ளன. இருப்பினும் அவையெல்லாம் வெளியில் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பாகுபலி திரைப்படம் தான் பான் இந்தியப் படங்களின் வருகைக்கு முதல் படியாக இருந்தது எனலாம். ஏனெனில் இப்படம் இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது மட்டுமின்றி, வசூலிலும் சாதனைப் படைத்தது.
ராஜமௌலி முதலில் தெலுங்கில் மட்டுமே படங்களை இயக்கி வந்தார். பாகுபலி படம் தான் இவரை இந்திய அளவில் அடையாளப்படுத்தியது. இருப்பினும் பான் இந்தியா அளவில் படத்தை எடுக்கத் தூண்டியது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் இருந்து வந்தது. இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ராஜமௌலி பான் இந்தியப் படங்களை எடுக்கத் தூண்டியவர் ஒரு தமிழ் நடிகர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நடிகர் சூர்யா தான் அந்தத் தமிழ் நடிகர். இந்த உண்மையை ராஜமௌலியே தற்போது சொல்லியிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் கங்குவா படம் வருகின்ற நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படம் பான் இந்திய மொழிகள் உள்பட பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஆந்திராவில் நடந்தது. அப்போது ராஜமௌலி சூர்யாவைப் புகழ்ந்து பேசியுள்ளார். ராஜமௌலி கூறுகையில், “நடிகர் சூர்யா கஜினி படத்தில் நடித்த போது, அப்படத்தை தெலுங்கில் பிரபலப்படுத்த ஆந்திரா வந்திருந்தார். அப்போது அவர் கஜினியை விளம்பரப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் இங்குள்ள இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அது ஓர் ஊக்கத்தை கொடுத்தது. நான் பான் இந்தியப் படங்கள் எடுப்பதற்கு ஊக்கம் கொடுத்ததும் சூர்யா தான். அவருடன் இணைந்து பயணிக்க நான் தவறிவிட்டேன். கதையை உருவாக்கும் இயக்குநரின் பின் செல்லாமல், கதையின் பின் செல்வது தான் சூர்யாவின் தனிச்சிறப்பு. மேலும் அவருடைய நடிப்புத் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த சூர்யா, “நான் ரயிலைத் தவறவிட்ட பயணியாக இன்னும் ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறேன். ஒருநாள் நிச்சயமாக அந்த ரயிலில் ஏறிச் பயணிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
ராஜமௌலி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் சொல்வதைப் பார்த்தால், விரைவில் இவர்கள் கூட்டணியில் ஒரு பான் இந்தியப் படத்தை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.