பாலிவுட்டில் தற்போது திகில் நகைச்சுவை திரைப்படங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் அனிமல் படத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து நடிக்கும் அடுத்த படம், திகில் கலந்த நகைச்சுவைப் படமாக எடுக்கப்பட உள்ளது. பெரிய வெற்றியைப் பெற்ற கீதகோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறிய ராஷ்மிகா நேஷனல் கிரஷ்ஷாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
ராஷ்மிகாவின் புதிய பாலிவுட் திரைப்படத்திற்கு 'வேம்பையர் ஆப் விஜயநகர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆயுஷ்மான் குரானா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது, ஆயுஷ்மான், கரண் ஜோஹர் தயாரிக்கும் உளவு நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் அனுராக் சிங் இயக்கும் 'பார்டர் 2' படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில், ராஷ்மிகா மந்தனாவும் அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2' மற்றும் சல்மான்கானுடன் 'சிகந்தர்' ஆகியவற்றில் பிஸியாக நடிக்கிறார்.
பிறகு இருவரும் இணைந்து வேம்பையர் ஆப் விஜயநகர் திரைப்படத்தில் நடிப்பார்கள். தயாரிப்பாளர் தினேஷ் விஜனின் திகில் நகைச்சுவை யுனிவர்சில் இந்த திரைப்படமும் இணைகிறது. தினேஷ் விஜனின் தயாரிப்பில் இதற்கு முன்பு ஆயூஷ்மான் 'பாலா' வெற்றிப்படத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தை முஞ்ஜியா, ககுடா, சோம்பிவில்லி ஆகிய திகில் காமெடி வெற்றிப்படங்களை இயக்கிய ஆதித்யா சத்போதர் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திகில் நகைச்சுவைத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
திகில் பக்கம் திரும்பிய பாலிவுட்:
சமீப காலங்களில் கான் நடிகர்கள் இல்லாத திகில் நகைச்சுவைப் படங்கள் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஷைத்தான் மற்றும் ஸ்திரீ , ஸ்திரீ 2 போன்ற திரைப்படங்களின் மகத்தான வெற்றி, பாலிவுட்டை திகில் பக்கம் திருப்பி விட்டது. திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ஷ்ரத்தா கபூர் நடித்த ஸ்திரீ 2 , திகில் காமெடி நகைச்சுவை திரைப்படம் 16 நாட்களில் உலகளவில் 630 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்கிறது.
வேம்பையர் ஆப் விஜயநகர் திரைப்படம்:
வழக்கமான திகில், பயம் மற்றும் பேய் பற்றிய படமாக மட்டும் இருக்காது. இதில் மிகவும் சுவாரஸ்யமான விஜய நகரத்தின் வரலாறு கொண்ட கதை அமைப்பு, சமகால திகில் நகைச்சுவை என இரண்டு வேறுபட்ட காலத்தில் கதை உருவாக்கி உள்ளனர். முதல் காலக் கட்டத்தில் வரலாற்று தொன்மங்கள் மற்றும் புனைவுகளையும் சேர்த்து விஜயநகரப் பேரரசின் காலத்தில், ஹம்பியின் பிரம்மாண்டம், பண்டைய இந்தியாவின் காலாச்சாரம், பண்பாட்டுப் பெருமைகள் மற்றும் வாழ்வியலை நோக்கிச் செல்லும்.
இரண்டாவது காலகட்டம் தற்போதைய வட இந்தியாவில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் நடைபெறும் அமானுஷ்யங்கள் அதைத் தொடர்ந்து நிகழும் சுவாரசியங்கள், அங்கங்கே நகைச்சுவை தெளித்த கதையம்சம் இருக்கும். படத்தின் தலைப்பே படத்திற்கான ஆர்வத்தை கூட்டி உள்ளது.