கடந்த வாரம் நகுல் நடிப்பில் உருவாகி, விரைவில் வெளியிடப்பட இருக்கும் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் நகுலின் அக்கா நடிகை தேவயானி கலந்துகொண்டார். மேடையில் நகுலுக்கு நான் அம்மா மாதிரி என்று சொன்னது பல்வேறு சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நகுல் தன்பட விழாவிற்கு அக்கா வந்து வாழ்த்தியதை பெருமையுடன் சொல்கிறார். தனது உணர்வுகளையும் , மகிழ்ச்சியையும் நம் கல்கிஆன்லைனுக்காக பகிர்ந்துகொள்கிறார்.
அக்கா உங்கள் பட விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்தியதை எவ்வாறு உணர்கிறீர்கள்?
எனது நாற்பதாவது வயதில் என் அக்காவிடம் இருந்து கிடைத்த பரிசாக இந்தப் பாராட்டை எடுத்துக்கொள்கிறேன். நான் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை நான் நடித்த எந்தப் படத்திற்கும் அக்கா என்னை நேரில் வந்து வாழ்த்தியதில்லை. இந்தப் படத்திற்கு வந்து வாழ்த்தியதை ஒரு தேசிய விருது கிடைத்ததுபோல உணர்கிறேன். அக்கா முப்பதாண்டுகளாக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகையாக இருக்கிறார். அக்காவின் பெயரை கெடுக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு எப்பவும் உண்டு. "நகுல் உனக்கு திறமை இருக்கு. கண்டிப்பா நல்லா வருவ" என்ற வாழ்த்து அக்காவிடமிருந்து வந்ததை பார்க்கும்போது ஏதோ நானும் கொஞ்சம் நல்லா நடிச்சிருக்கேன் என்ற எண்ணம் வருகிறது. இதுவரை என் நடிப்புக்காக பெரிய அளவில் பாராட்டாத என் அக்கா என்னை மேடையில் மனம் விட்டு பாராட்டியபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது
தேவயானி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுத்த தனிப்பட்ட முடிவுதான் உங்களுக்கும், அக்காவுக்கும் விரிசல் வரக் காரணம் என்று பல சமூக ஊடகங்களில் பேசுகிறார்களே?
அக்கா சினிமாவில் பிஸியான ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த போதும், தனிப்பட்ட முடிவுகளை வாழ்க்கையில் எடுத்தபோதும் நான் சிறுவனாக ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா, அம்மாவின் முடிவுகளை பொறுத்தே என் முடிவும் அமைந்திருந்தது. காலம் அனைத்தையும் மாற்றிவிடும் என்பதற்கு எங்கள் உறவே உதாரணம்.
இப்படி பக்குவமாக பேசுவதற்கு என்ன காரணம்?
காதல், அன்பு, குடும்பம் என அக்காவிற்கும் ஒரு தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கிறது என்பது இந்த வயதில் எனக்குப் புரிகிறது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அக்காவிற்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களும் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். இந்த அன்புதான் என் பக்குவத்திற்குக் காரணம். அக்கா எடுத்த தனிப்பட்ட முடிவின் மீதுள்ள நியாயங்கள் இப்போது எனக்குப் புரிகிறது. என் அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்கு அம்மா இடத்தில இருந்து என்னை அரவணைப்பது அக்காதான். அக்காவை அம்மாவாக நினைத்துதான் மேடையில் காலில் விழுந்து ஆசி பெற்றேன்.
விரைவில் வெளிவர உள்ள ‘வாஸ்கோடகாமா’ எதைப் பற்றிய படம்?
'கலியுகம்' என்ற கான்சப்டை ஒரு டார்க் காமெடியில் சொல்லும் படம் ஆர்.ஜி. கிருஷ்ணனின் இயக்கத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாமல் வர உள்ளது ‘வாஸ்கோடகாமா’.
இந்த 15 ஆண்டுகளில் குறைவான படங்கள் நடித்துள்ளதற்கு என்ன காரணம்?
எனக்கு quantityயைவிட குவாலிட்டிதான்(quality) முக்கியம். குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
இன்று மண் சார்ந்த கதைகளுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. உங்கள் சாக்லேட் பாய் இமேஜ் இதற்கு தடையா?
வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் மண் சார்ந்த கதைகளில் நடிக்கக் காத்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது என் சாக்லேட் பாய் இமேஜ் மாறிவிடும்.