ஹாலிவுட்டில் மார்வல் ஸ்டுடியோ போன்ற நிறுவனங்கள் சூப்பர் ஹியூமன் கதைகளைச் சமீபமாக தயாரிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் குகன் சென்னியப்பன் தமிழில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் ‘வெப்பன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். மில்லியன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
குழந்தை ஒன்று விபத்தில் இருந்து காப்பாற்றப்படுவதை டிவியில் பார்க்கிறார் இயற்கை ஆர்வலர் யூ டூபர் வசந்த் ரவி. இதற்குப் பின்னால் சூப்பர் ஹியூமனின் சக்தி இருப்பதை உணர்கிறார். இந்த ஹியூமனைத் தேடிச் செல்கிறார். பிளாக் சொசைட்டி என்ற பெயரில் திரைமறைவில் மோசமான விஷயங்களைச் செய்துவரும் ராஜீவ் மேனன் தனது ஆட்கள் கொல்லப்படுவதற்குப் பின்னால் இந்த சூப்பர் ஹியூமன் இருக்கிறார் எனச் சந்தேகப்பட்டு, இந்த ஹியூமனைத் தேடிச் செல்கிறார். யார் இந்த சூப்பர் பவர் ஹியூமன்? இவருக்கும் வசந்த் ரவிக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த ‘வெப்பன்’.
ஆங்கிலப் படங்களால் இன்ஸ்பயர் ஆகி டைரக்டர் குகன் சென்னியப்பன் தீமையை அழிக்கும் சூப்பர் பவர் கதையைத் தந்திருக்கிறார் போலும். கதை ஒகே. திரைக்கதை ஸ்ட்ராங்கா இல்லையே பாஸ். பல காட்சிகள் படத்தில் கொட்டாவியை வரவைத்து விடுகின்றன. ஒளிப்பதிவும், ஸ்பெஷல் எபெக்ட்டும் அவ்வப்போது எழுப்பிவிடுகின்றன. ஜிப்ரானின் இசை ‘நாட் பேட்’ ரகம்தான்.
சத்யராஜிடம் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்த்துச் சென்றால் கிடைப்பது ஏமாற்றமே. சத்யராஜ் தன் ரசிகர்களுக்கு 'அல்வா' கொடுத்துவிட்டார் என்றே சொல்லலாம். வசந்த் ரவியும் நடிப்பில் ஒகே ரகம்தான்.
தன்யா ஹோப் இதற்குமுன்பு தான் நடித்த படங்களில் காண்பித்த ஒரே மாதிரியான முகப் பாவனைகளைத்தான் இந்த ‘வெப்பன்’ படத்திலும் காட்டியுள்ளார். அடுத்தப் படத்தில் முகப் பாவனைகளை மாத்துங்க; எக்ஸ்பிரஷனோட நடிக்கப் பயிலுங்க மேடம்.
நடிப்பில் ரசிகர்களைச் சபாஷ் போட வைப்பது ராஜீவ் மேனன்தான். வில்லனாக மிரட்டி இருக்கிறார் இந்த ஹாண்ட்சம் கேமரா மேன்.
திரைக்கதை சரியாக இல்லாததால் இந்த ஆயுதம் (வெப்பன்) இலக்கை அடையவில்லை. கிரைம் த்ரில்லர், ஆக்ஷன் என தென்னிந்திய சினிமாவின் ட்ரெண்ட் மாறிக்கொண்டிருக்கும்போது சூப்பர் ஹியூமன் கதை கொண்ட படம் எதற்கு என்ற கேள்வியும் நமக்கு வருகிறது. ஒருவேளை நல்ல திரைக்கதை அமைத்திருந்தால் இந்த ‘வெப்பன்’ சூப்பர் ஹியூமன் படங்கள் மீண்டும் ட்ரெண்டிங் ஆக ஒரு காரணமாக அமைந்திருக்கும். ஆனால், அமையவில்லை.