விஜய் ஆண்டனி, அவர் செப்பல் அணியாதது குறித்து பேசியது ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. ஆனால், தற்போது இதுவும் சர்ச்சையாகிவுள்ளது.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிப்பிலும் களமிறங்கினார். பின்னர் 2023ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராக களமிறங்கினார். இப்படி இசையைமைப்பாளராகவும், பாடகராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வரும் இவரைப் பிடிக்காத தமிழ் மக்களே இல்லை. ஏனெனில், இளைஞர்களுக்கு தேவையான ஊக்கத்தை தனது வார்த்தைகள் மூலம் கொடுத்து ரசிகர்களுக்கு பிடித்த மனிதராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இந்தநிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த 'மழை பிடிக்காத மனிதன்' படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து இவர் சமீபக்காலமாக பட ப்ரோமோஷன்கள், ஆடியோ லாஞ்ச் போன்ற நிகழ்ச்சிகளில் பங்காற்றி வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சிகளுக்கு வரும்போது செருப்பில்லாமல் வருகிறார்.
ஏன் அப்படி வருகிறீர்கள் என்று தொகுப்பாளர் ஒருவர் கேட்டபோது, "திடீரென எனக்கு அப்படி தோன்றியதால் செருப்பு இல்லாமல் நடந்துப் பார்த்தேன், அது எனக்கு பிடித்திருந்தது எனவும், எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது." எனவும் கூறினார்.
மேலும், "மனத்திற்கு உத்வேகம் வேண்டுமா, மனம் சோர்வா இருக்கா, உங்களுக்குள் ஏதாவது மாற்றம் வேண்டுமா, அப்போ செருப்பு இல்லாமல் நடந்துப் பாருங்கள்." என்று கூறினார். இதனை ரசிகர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஆனால், தற்போது மருத்துவர் ஒருவர் இதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்திருக்கிறார். "அக்லோஸ்டோமோ குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும். இந்த ரத்த சோகையால் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கர்ப்பகால மரணம் தொடங்கி குழந்தைகள் மரணம் வரை ரத்தசோகை கொண்டுவந்துவிடும். இதில் இருந்து தப்பிக்க செருப்பு அணிவது தான் சிறந்தது. சிலர் அரைகுறையாக எதையாவது தெரிந்து கொண்டு பேசுவதை நம்பி ரத்த சோகைக்கு ஆளாகாதீர்கள்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இன்னும் நயன்தாரா பிரச்சனையே தீராமல் இருக்கிறது. இப்போது இதுவுமா? மருத்துவர்களுக்கு நம்மீது எவ்வளவு அக்கறை பாருங்களேன்…