தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்த மாமல்லபுரம் உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். ஆறாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மற்றும் அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆகியோர் மாமல்லபுரத்தில் குன்றுகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களையும் திறந்தவெளியில் அமைந்த பாறைகளில் புடைப்புச் சிற்பத் தொகுதிகளையும் அமைத்தும் மாபெரும் சாதனை படைத்தனர். இனி, மாமல்லபுரத்தில் நாம் காண வேண்டிய வியக்க வைக்கும் சிற்பங்களைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
1. வெண்ணை உருண்டைக் கல் (Butter Ball): ஒரு குன்றின் சரிவில் இந்த பெரிய கல்லானது தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொண்டு சுமார் 1300 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் அதிசயத்தைக் காணலாம். இந்த கல்லானது ஆறு மீட்டர் உயரமும் (19.6 அடி) ஐந்து மீட்டர் அகலமும் (16.4 அடி) சுமார் 250 டன் எடையும் கொண்டது.
2. அர்ஜுனன் தபசு சிற்பங்கள்: அர்ஜுனன் தபசு சிற்பங்கள் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உடைய இருபெரிய பாறைகளில் பலவிதமான உருவங்களுடன் வடிக்கப்பட்டுள்ளன. சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைச் சிற்பங்கள் அடங்கியது இந்த அர்ஜுனன் தபசு சிற்பத் தொகுதி.
3. ராயர் கோபுரம்: பல்லவர்களுக்குப் பிந்தைய விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கலைக்கோயிலானது ஏதோ சில காரணங்களால் முற்று பெறாமல் போயிற்று. விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்டதால் இதற்கு ராயர் கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
4. கிருஷ்ண மண்டபம்: அர்ஜுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிருஷ்ண மண்டபத்திற்குள் கோவர்த்தன சிற்பத் தொகுதி காணப்படுகிறது. பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்ததாகவும் பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
5. மகிஷாசுரமர்த்தினி மண்டபம்: கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் மகாவிஷ்ணு பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சியைக் காணலாம்.
6. வராக மண்டபம்: வராக மண்டபத்தில் நான்கு சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பூமா தேவியைக் காப்பாற்றி மேலே கொண்டு வருவது முக்கியமான சிற்பத் தொகுதியாகும்.
7. பஞ்ச பாண்டவ ரதங்கள்: முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனால் தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்ட இந்த ஐந்து சிற்ப ரதங்கள் பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ரதங்களுக்கு முன்புறமாக சிம்மமும், பக்கவாட்டில் யானையும் நந்தியும் செதுக்கப்பட்டுள்ளன.
8. கடற்கரைக் கோயில்: இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் இராஜசிம்மன் என்பவரால் இந்த கடற்கரைக் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் கி.பி.700 முதல் கி.பி.728 காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு பெரிய விமானம் மற்றொரு சிறிய விமானம் இரண்டு அழகிய கருவறை விமானங்களுடன் காட்சியளிக்கிறது.
9. புலிக்குகை: புலிக்குகை எனும் பல்லவர் கால கலைச்சிற்பத் தொகுதிகள் சாளுவன்குப்பம் என்ற இடத்தில் கடற்கரையினை ஒட்டி அமைந்துள்ளது. ஒரு குன்று போன்ற அமைப்பினைக் குடைந்து இந்த குடைவரை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் தரையிலிருந்து சுமார் இரண்டு மீட்டர் உயரத்தில் மேடை காணப்படுகிறது. மேடையை அடைய படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடைவரை முற்றுபெறாத ஒரு குடைவரையாகவே காட்சி தருகிறது. இந்த குடைவரையின் முகப்பில் பதினொரு யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.
10. கலங்கரை விளக்கம்: தற்போது மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் 1887ல் அமைக்கப்பட்டது. சுழல் விளக்கினைக் கொண்ட இந்த கலங்கரை விளக்கம் 1904ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது. இதற்கு அருகில் கி.பி.640ம் ஆண்டில் மகேந்திர பல்லவரால் கட்டப்பட்ட பழைமையான கலங்கரை விளக்கம் உள்ளது. தற்போது இது நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.