சென்னை, இராஜகீழ்ப்பாக்கத்தில் ஒரே இடத்தில் மூன்று அருங்காட்சியகங்கள் உள்ளன. அவை: 1. காஞ்சி மகாபெரியவர் அருங்காட்சியகம், 2. எம்.எஸ்.சுப்புலட்சுமி அருங்காட்சியகம், 3. காஞ்சி கோஷ் அருங்காட்சியகம் ஆகியவை ஆகும். இம்மூன்று அருங்காட்சியகங்களும் உலகத்தரத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அருங்காட்சியங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
காஞ்சி மகாபெரியவர் அருங்காட்சியகம்: காஞ்சி மகாபெரியவர் பிறந்தது முதல் முக்தி அடைந்தது வரை அவரது வாழ்வில் எடுத்த பல்வேறு புகைப்படங்கள், அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், அவரது முழு உருவ மெழுகுச் சிலைகள், அவர் பயன்படுத்திய ரிக் ஷா வண்டி போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.
காஞ்சி மகாசுவாமிகளின் போதனைகளும் அங்கங்கு பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சி மகாசுவாமிகள் இந்தியாவெங்கும் பயணித்த பாத யாத்திரை, அவர் வியாச பூஜை செய்த இடங்கள் போன்றவையும் அங்கு வரைபடமாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சம் உருத்ராட்சங்கள் கொண்ட ஒரு மிகப்பெரிய சிவலிங்கமும் இங்கு காணப்படுகிறது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அருங்காட்சியகம்: இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த பல்வேறு காலப் புகைப்படங்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமி, மகாத்மா காந்தி முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் போன்ற அரிய புகைப்படங்களும், மகாத்மா காந்தி எம்.எஸ்.அம்மாவுக்கு வரைந்த கடிதம், பல்வேறு இசை மேதைகள் எம்.எஸ்.அம்மாவை சிலாகித்துச் சொன்ன வாசகங்கள் போன்ற பல்வேறு அரிய விஷயங்கள் இங்கு நமக்குத் தெரிய வருகின்றன. இவை தவிர, எம்.எஸ்.அம்மாவின் ஒரு பெரிய மெழுகுச் சிலையும் இங்கு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
காஞ்சி கோஷ் அருங்காட்சியகம்: இது காஞ்சி மடத்தின் வரலாறு குறித்த மூன்று தளங்களைக் கொண்ட உலகத் தரத்தில் அமைந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம். இங்கு தரைத் தளத்தில் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறித்த சம்பவங்கள் கண் முன்னே சிலையாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும், காஞ்சிபுரம் குறித்த, இந்திய நாடு குறித்த பல்வேறு காணொலி காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக சுவற்றில் மிகப்பெரிய திரையில் இடப்படுகின்றன. இங்கு ஒரு சிறிய திரையரங்கும் உள்ளது. காஞ்சி காமாட்சி அம்மன், ஆதிசங்கரர் போன்ற மிகப்பெரிய சிலைகளும் இங்கு உள்ளன.
முதல் மாடியில் காஞ்சிபுரத்தில் ஆதிசங்கரர் முதல் இருந்த பீடாதிபதிகள் வாழ்க்கை குறித்த குறிப்புகள் தனித்தனிப் புகைப்படங்களாக விரிவாக உள்ளன. காஞ்சி மகாபெரியவருக்கு என்றே மிகப்பெரிய வண்ணமயமான புகைப்படங்கள் ஒரு பெரிய கூடத்தில் உள்ளன. மேலும், காஞ்சி மடம் நடத்தும் பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், கோயில்கள் போன்றவைக் குறித்த விரிவான பதாகைகளும் உள்ளன. காஞ்சி மடத்தின் பீடாதிபதிகளின் அதிஷ்டானங்கள் அமைந்துள்ள இடங்களைக் குறித்த தகவல்களும் உள்ளன.
இரண்டாவது மாடியில் ஒரு சிறிய சிற்றுண்டி உணவகமும் சிறு பொருட்களை விற்கும் கடையும் உள்ளன. இந்த அருங்காட்சியகம் உலகத் தரத்தில் அமைந்துள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. ஆதிசங்கரரை பற்றியும் காஞ்சி மடத்தின் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள மிகவும் அருமையானதொரு அருங்காட்சியகம் இது.
இந்த அருங்காட்சியங்களுக்கு அருகிலேயே ஒரு சிறிய கோயில் உள்ளது. அங்கு சிவன், அம்பிகை சன்னிதிகள் உள்ளன. மொத்த வளாகமும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. மேலும் கழிப்பறை வசதிகளும் உள்ளன.
பார்வையாளர்கள் நேரம்: வார நாட்களில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை. ஞாயிறன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
காஞ்சி கோஷ் அருட்காட்சியகம் சனி, ஞாயிறுகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.