wisteria flower https://www.realsimple.com
கலை / கலாச்சாரம்

அழகும் ஆபத்தும் நிறைந்த விஸ்டேரியா மலர்களின் கலாசார சிறப்பு!

எஸ்.விஜயலட்சுமி

விஸ்டேரியா மலர்கள் அவற்றின் அற்புதமான அழகு, தனித்துவமான நறுமணம் மற்றும் கண்கவரும் பூக்களின் அடுக்கைக் கொண்டுள்ளன. அமெரிக்கா, சீனா, கொரியா மற்றும் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட இந்த மலர்கள் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் கொண்டவை.

மலரின் அமைப்பு: விஸ்டேரியா மலர்கள் அதன் நீண்ட தொங்கும் பூக்களுக்கு பெயர் பெற்றவை. இந்தப் பூக்கள் 12 முதல் 18 அங்குல நீளம் வரை வளரும். இவை மென்மையான லாவண்டர், ஊதா, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இவை வசந்த காலத்தில் பூக்கும்.

வாசனை: விஸ்டேரியா மலர்கள் இனிமையான போதை தரும் நறுமணத்தை கொண்டுள்ளன. இவற்றை முகர்ந்து பார்க்கும்போது அந்த போதை தரும் மணம் மயக்கம் வரும் அளவு இருக்கும்.

கிழக்கு கலாசாரத்தில் விஸ்டேரியா: நூறு ஆண்டுகளுக்கு மேல் விஸ்டேரியா தாவரங்கள் நீடித்து வாழ்கின்றன. கிழக்கு கலாசாரங்களில் இந்த பூக்கள் நீண்ட ஆயுள் மற்றும் அழியாமையின் சின்னமாகக் கருதப்படுகிறது. விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மை போன்ற நல்லொழுக்கங்களுடன் தொடர்புடையது. சீன நாட்டுப்புறக் கதைகளில் இந்த மலர் வெள்ளைப் பாம்பின் புராணக் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சீன கலாசாரத்தில் காதல் உணர்வுகளுடன் தொடர்புள்ளது. சீன தோட்டங்கள் மற்றும் சீன இலக்கியங்களிலும் இடம் பிடித்துள்ளது.

ஜப்பானிய கலாசாரத்தில் முக்கியத்துவம்: இந்த மலர்கள் ஜப்பானிய கலாசாரத்தில் ஒரு சிறப்பு இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானில் உள்ள அஷிகாகா மலர் பூங்காவில் 150 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான மரங்கள் உட்பட மிகப்பெரிய விஸ்டேரியா மரங்களும் உள்ளன என்பதே இதற்கு சாட்சி.

மேற்கத்திய கலாசாரம்: மேலை நாடுகளில் விஸ்டேரியா மலர் காதல், கவிதை மற்றும் அன்பு, அழகு ஆகிவற்றின் அடையாளமாகும். மென்மையான அடுக்கடுக்கான மலர்கள் ஏக்கம் மற்றும் கனவு உணர்வை தூண்டுகின்றன. பெரும்பாலும் காதல் நாவல்கள் மற்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஓவியங்கள்: வரலாறு முழுவதும் விஸ்டேரியா எண்ணற்ற கலைஞர்களின் கேன்வாசுகளை அலங்கரித்துள்ளன. பல ஓவியர்கள் இவற்றை துடிப்பான வண்ணங்களில் உயிரோட்டத்துடன் வரைந்துள்ளார்கள். எமிலி டிக்கின்சன் போன்ற அமெரிக்க கவிதாயினியின் பாடல்களில் அடிக்கடி தோன்றுபவை இந்தப் பூக்கள்.

கடினத்தன்மை: இந்தப் பூக்கள் கடினத்தன்மை மற்றும் மீள்தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. இவை பரந்த அளவிலான மண் வகைகளில், கால பருவ நிலைகளில் வளரும். இருந்தாலும் அதிக அளவில் இந்த பூக்கள் பூக்க அதிகமாக சூரிய ஒளி தேவை.

விஷத்தன்மை: அழகும், கலாசார முக்கியத்துவமும் வாய்ந்த மலராக இருந்தாலும் இது விஷத்தன்மை வாய்ந்த மலராகும். இந்த தாவரத்தின் விதைகள் மற்றும் இலைகள், பூக்கள் போன்றவை விஷத்தன்மை வாய்ந்தவை. இலைகள் மற்றும் பூக்களை தெரியாமல் வாயில் போட்டு விட்டால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தலை சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும். இதன் விதைகளை உட்கொண்டால் விஷத்தன்மை காரணமாக மரணம் உறுதி. சில சமயங்களில் நாய்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகள் இந்த மலர்களையோ  இலைகளையோ அல்லது விதைகளையோ தின்று மரணத்திற்கு உள்ளாகின்றன.

அதனால் இந்தத் தாவரங்களை பொதுவாக பழங்கள் அல்லது காய்கறி தோட்டங்களுக்கு அருகில் நடவு செய்வதை தவிர்ப்பார்கள். அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும் என்பார்கள். அதை உறுதி செய்வது போல விஸ்டேரியா மலர் இருக்கிறது.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT