சுழலும் இந்திரன், இந்திராணி புடைப்புச் சிற்பம் 
கலை / கலாச்சாரம்

வியப்பில் ஆழ்த்தும் சுழலும் யானைச் சிற்பம்!

ஆர்.வி.பதி

காஞ்சிபுரத்தில் ஜைனகாஞ்சி என அழைக்கப்படும் திருப்பருத்தின்குன்றத்தில் புகழ் பெற்ற சமணர் திருத்தலமான திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோயில் அமைந்துள்ளது. பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணுவால் கி.பி.556ம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோயில், ‘வர்த்தமானீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. பல்லவர்களின் காலத்தில் செங்கல் கோயிலாகக் கட்டப்பட்ட இது,  பிற்கால சோழ மரபைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கருங்கல் கற்றளியாக மாற்றப்பட்டது. பின்பு  விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவர்த்தமானர் கோயிலில் வர்த்தமானர், புஷ்பதந்தர் முதலானோருக்கும் பத்மபிரபா, வசுபூஜ்யர் முதலானோருக்கும் தனித்தனியாக இருதொகுதி கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் முதலானவை அமைக்கப்பட்டுள்ளன. பார்சுவநாதருக்கும் தரும தேவிக்கும் இங்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.

முதலாம் புக்கரின் அமைச்சர் ஸ்ரீ இருகப்பா என்பவரால் இக்கோயிலில் சங்கீத மண்டபம் கி.பி.1387ல் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரைகளில் கி.பி.17ம் நூற்றாண்டில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் இன்று வரை நிலைத்து நின்று காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. மேற்கூரையில் சில புடைப்புச் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.

ஆலயக் கருவறையின் முன்பாக நீளமான 61 அடி அகலமுள்ள மகாமண்டபம் கி.பி.1387ல் கட்டப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதால் இந்த மண்டபம் சங்கீத மண்டபம் என அழைக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர் முதலாம் புக்கரின் அமைச்சரவையில் பணியாற்றிய ‘இருகப்பா’ என்பவர் புஷ்ப சேனா மகா முனிவரின் சீடராகி அறப்பணிகள் மேற்கொண்டார்.    அவருடைய ஆணைப்படி இந்த சங்கீத மண்டபம் அமைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இருபத்தி நான்கு உயரமான தூண்கள் சதுரம், அறுகோணம், எண்கோணம் என பல்வேறு வடிவமைப்புகளுடனும் அடிப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகளுடனும் காட்சி தருகின்றன. இம்மண்டபத்தின் கூரையில் தீட்டப்பட்டுள்ள பல ஓவியங்களின் அடிப்பகுதியிலும், பக்கவாட்டிலும், ஓவியங்களின் நிகழ்வுகளின் குறிப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

சங்கீத மண்டபத்தின் மேற்கூரையில் யானையின் மீது இந்திரனும், இந்திராணியும் அமர்ந்துள்ள ஒரு புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. சுற்றிலும் பெரிய அளவில் வண்ணத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திசைக்கொன்றாக அமைந்துள்ள இரண்டு குதிரைகளின் மீது பெண்கள் அமர்ந்துள்ள ஓவியங்கள் சுற்றிலும் தீட்டப்பட்டுள்ளன. யானை மீது அமர்ந்திருக்கும் இந்திரன் இந்திராணி புடைப்புச் சிற்பத்தை நாம் அதன் கீழ் நின்று மேல் நோக்கி எந்த திசையிலிருந்து பார்த்தாலும் யானை நம்மைப் பார்ப்பதைப் போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நமக்கு ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும் தருகிறது.

காஞ்சிபுரம் சென்றால் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருப்பருத்திக்குன்றத்திற்குச் சென்று திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோயிலில் அமைந்துள்ள இந்த சுழலும் புடைப்புச் சிற்பத்தைக் கண்டு தரிசியுங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT