காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கலைநயமிக்க கைலாசநாதர் கோயில் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவன் காலத்தில் தொடங்கப்பட்டு இதன் பின்னர் நரசிம்மவர்ம பல்லவன், மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் முழுமை பெற்றது. காஞ்சிபுரத்திலுள்ள மிகப்பழைமையான கோயில்களில் இது ஒன்றாகும். இத்தலத்தை கல்வெட்டுக்கள், ‘ஶ்ரீ ராஜசிம்ம பல்லவேஸ்வரம்’ எனக் குறிப்பிடுகின்றன. பல்லவர் காலத்தைய கட்டுமானங்களில் காணப்படும் சிங்கமுக தூண்களும் சோமாஸ்கந்த மூர்த்தியும் இக்கோயிலிலும் உள்ளன.
கோயிலின் வாசலில் எட்டு சிறு கோயில்களின் வரிசை அமைந்துள்ளது. இதில் இரு கோயில்கள் தெற்கு திசையிலும் ஆறு கோயில்கள் வடக்கு திசையிலும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயில் பிண்டி எனப்படும் மணல்கற்களால் கட்டப்பட்டது. இக்கோயில், ‘தென்திசை கைலாயம்’ என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலின் முன்னால் நந்திதேவர் பிரம்மாண்டமாக அமைந்துள்ளார். இக்கோயிலினுள் சிற்பங்கள் ஒருபுறத்தில் சம்ஹார மூர்த்தங்களாகவும் மறுபுறத்தில் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளது விசேஷம். பிரதான கோயிலிலும் அதைச் சுற்றியுள்ள துணைக்கோயில்களிலும் பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன.
மூலவர் சிவலிங்கத் திருமேனி 16 பட்டைகள் கொண்ட ஷோடச லிங்கம் ஆகும். மூலவர் லிங்கத்திற்குப் பின்புறச் சுவரில் ஈசன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் மிகப்பெரிய அளவில் சிவ வடிவங்கள் காட்சி தருகின்றன. தெற்கில் தென்முகக் கடவுள், மேற்கில் கங்காளர், வடக்கில் கங்காதரர் ஆகிய சிற்பங்கள் பிரம்மிப்பூட்டுபவை. திருச்சுற்று மாளிகை முழுவதிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது வேறெங்கும் காண இயலாத அதிசயமாகும்.
வேறு எந்தக் கோயிலிலும் காண இயலாத அதிசயத்தை இக்கோயிலின் கருவறைத் திருச்சுற்றில் காணலாம். கருவறையைச் சுற்றி ஒரு குறுகிய திருச்சுற்று அமைந்துள்ளது. இந்தத் திருச்சுற்றானது, ‘புனர் ஜனனி’ என்று அழைக்கப்படுகிறது. இதன் உள், வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி வர உள்ளே நுழையும்போது தரையில் படுத்தபடியே மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று கருவறையைச் சுற்றி வந்து திருச்சுற்றை விட்டு வெளியே வரும்போதும் இதேபோல ஊர்ந்து வளைந்து வெளியே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவறை திருச்சுற்றுக்குள் நுழைந்து வெளியே வந்ததும் புனர் ஜன்மம் எடுத்தது போன்ற ஒரு உணர்வு நமக்கு இயல்பாகவே ஏற்படும். இந்தக் கருவறைத் திருச்சுற்றைச் சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை என்பதும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.