Amazing sculptures of tamilan Image Credits: ANCIENT TEMPLES of TAMILNADU
கலை / கலாச்சாரம்

வியப்பூட்டும் தமிழர்களின் சிற்பக்கலை அதிசயம்!

நான்சி மலர்

லகில் உள்ள அழகிய ஓவியங்களையும், சிற்பங்களையும் பாராட்டி மெய்சிலிர்க்கும் நாம்தான், நம் அருகிலேயே இருக்கக்கூடிய நுணுக்கமான தமிழர்களின் சிற்பக்கலையை கவனிக்க மறந்துவிடுகிறோம்.

திருச்செங்கோடு மலைக்கோயிலில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும் நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் இருக்கும். இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இந்த சிற்பத்தை ஒரே கல்லில் செதுக்கியிருக்கிறார்கள். இந்தச் சிற்பமும் கோயிலின் மேற்கூரையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது.

எல்லா கலைகளுமே இறைத்தன்மையின் வெளிப்பாடாக இருந்தாலும், பக்திக்கும் வழிபாட்டிற்கும் அடையாளமாக விளங்குவது சிற்பக்கலைதான். நடுக்கல்லில் தொடங்கிய உருவ வழிபாடு பிற்காலத்தில் கோயிலில் திருவுருவ வழிபாடாக மாறியது. ஆயக்கலை அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கிய தமிழர்கள் சிற்பக்கலையிலும் தலை சிறந்து விளங்கினர்.

அயல்நாட்டுச் சிற்பங்கள் உள்ளதை உள்ளபடி காட்டக்கூடியது. ஆனால், நம் நாட்டு சிற்பமோ சிற்பங்கள் வடிப்பதின் மூலம் கருத்துகளை உணர்த்துகிறது. சிற்பங்கள் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமில்லாமல், நம் உணர்ச்சிகளை தூண்டக்கூடியது. உலகில் மற்ற நாட்டினர் கல் எடுத்து வேட்டையாடிக் கொண்டிருந்த வேளையில் தமிழர்கள் கல்லை குடைந்து சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற கோயில்களில் யாழி சிற்பத்தை பார்த்திருப்பீர்கள். இந்த சிற்பத்தின் வாயில் இருக்கும் கல்லால் ஆன பந்தை சுழற்ற முடியும். ஆனால், வெளியிலே எடுக்க முடியாது. இரும்பு சங்கிலியை பார்த்திருப்போம். ஆனால், கருங்கல்லையே செதுக்கி சங்கிலியாக வடித்தனர் நம் தமிழர்கள்.

உடலில் முறுக்கேறிய நரம்பை கல்லில் காட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை. சிற்பத்தில் நரம்பைப் படைத்து அதற்கு உயிர் கொடுத்தவர்கள் தமிழர்கள். மகாபலிபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்திலும் தமிழனின் கலையும், திறமையும் புதைந்திருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் உள்ள யானையின் சிற்பத்தில் யானையை மட்டும் கல்லால் செதுக்காமல் அந்த யானையைக் கட்டப் பயன்படுத்தும் கயிற்றையும் கல்லால் செதுக்கி இருப்பது தமிழரின் அரிய சிற்பக்கலை.

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கோயிலில் இருக்கும் சிற்பத்தை காகிதத்தில் கூட அவ்வளவு நுணுக்கமாக நம்மால் வரைய முடியாது. அவ்வளவு நுணுக்கமாக கல்லிலே சிற்பத்தைச் செதுக்கியிருப்பார்கள். புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் இருக்கும் சிலை ஒன்றின் கையில் வாள் வைத்திருக்கும் போர் வீரனை போன்ற ஒரு சிலையில் கல்லையே நாணலாக வளைத்திருக்கிறார் அந்த தமிழ் சிற்பி.

கோயில்கள் ஒரு வழிபாட்டு தலமாக மட்டுமில்லாமல். தமிழர்களின் திறமையை பறைச்சாற்றும் களமாகவும் இருந்திருக்கிறது. இனி கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் சிலைகளை சற்று நேரம் நின்று ரசித்துவிட்டு வாருங்கள். ஏனெனில் அவை அனைத்துமே கல்லை காகிதமாக்கிய தமிழனின் மாபெரும் படைக்கும் திறமைக்கான சான்றுகளாகும்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT