Margazhi Sangamam: Carnatic Music Festival  
கலை / கலாச்சாரம்

மார்கழி சங்கமம்: நாதஸ்வரம், தவில் மற்றும் தம்புரா கலையில்... குருவே மெச்சும் அந்த 3 மாணவர்கள் இவர்கள்தான்!

அனுராதா கண்ணன்
Margazhi Sangamam

மிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சௌமியா அவர்கள். இப்பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரி சென்னை அடையாறில் உள்ளது. இந்த இசைக்கல்லூரியில் பயிலும் மாணவிய, மாணவர்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று கேட்டவுடன் மூன்று பேரை பரிந்துரை செய்தார் Dr. சௌம்யா. குருவே மெச்சும் அந்த மூன்று மாணவர்கள் யாரென்று பார்ப்போமா...!

T.குஹன்- நாதஸ்வரம்

சென்னையில் பிரபல இசை அரங்கங்களில் கச்சேரிகள் செய்து வரும் இளைஞர், திருவள்ளூர் மாவட்டம் ‘வேங்கலை’ச் சேர்ந்த T. குஹன். அவருடைய தந்தை நாதஸ்வர வித்வான் வேங்கல் V. S. தணிகைவேல் அவர்களிடம் முதலில் நாதஸ்வரம் கற்கத் தொடங்கினார். தொடர்ந்து, மலயம்பாக்கம் M. D. மணி, கொடுங்கையூர் G. K. ரகுராமன் மற்றும் திருமெஞ்ஞானம் டி.கே.ஆர் ஐயப்பன் ஆகியோர்களை குருமார்களாகக் கொண்டு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாதஸ்வரம் இசையின் நுணுக்கங்களைக் கற்று வருகிறார்.

T.குஹன்- நாதஸ்வரம்

தந்தையுடன் இணைந்தும் தனித்தும் பல கச்சேரிகள் செய்து வருகிறார் குகன். 2018 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட்ட தனித்திறமைப் போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல் பரிசு வென்றார். 2022-ஆம் ஆண்டில், ‘அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை சொசைட்டி’ நடத்திய ’பல்லவி’ப் போட்டியில் கலந்து கொண்டு தமிழக முதல்வரிடமிருந்து முதல் பரிசையும் பெற்றார்.

தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில்,டி.கே.ஆர் ஐயப்பன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு எம்.ஏ. முடித்திருக்கும் இவர், ஒரு குருவிற்கு சேவை செய்து, அவர்களைப் பார்த்து எப்படிப் பழக வேண்டும் என்பதிலிருந்து வித்தையைக் கற்பது வரை, குருகுல முறையில் கிட்டும் அதே அனுபவம், இரண்டாண்டுகள் எம் ஏ படிக்கும் போதும் பல்கலைக்கழகத்தில் தனக்குக் கிட்டியது என்கிறார்.

பாரம்பரியமிக்க குருகுல முறையில் கற்றுத் தேர்ந்தவர் நாதஸ்வர வித்வான் டி.கே.ஆர் ஐயப்பன் அவர்கள். காலையிலிருந்து மாலை வரை நேரம் போவது தெரியாமல் குருகுல வாசம் போன்றே பல்கலைக்கழகத்திலும் அவரிடமிருந்து பயிற்சி பெற்றதைத் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறார் குஹன்.

சமீபத்தில் நாதஸ்வர சக்ரவர்த்தி டி. ஆர். ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 125 ஆவது பிறந்த ஆண்டை வெகுச் சிறப்பாக மும்பை ஸ்ரீ ஷண்முகானந்த சபை கொண்டாடியது. அத்தருணத்தில் ஊக்கத்தொகை பெற்ற நாதஸ்வரம் கற்கும் 100 இளைஞர்களுள் இவரும் ஒருவர்.

சங்கீத கலாநிதி டாக்டர் சௌம்யா அவர்களின் தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலோடு சென்னை மியூசிக் அகாடமி உள்ளிட்ட பல முக்கிய அரங்கங்களில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் குஹன், வரும் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று சென்னை சங்கீத வித்வத் சபையின் சதஸிலும் நாதஸ்வரம் இசைக்க, அவருக்கு பக்கவாத்தியமாக தவில் இசைக்கபோகிறார் தமிழ்ச்செல்வன்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் இளம் தவில் கலைஞராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் G.தமிழ்ச்செல்வன். தவிலுக்கு தமிழ்ச்செல்வன் எனும் அளவிற்கு அவரின் பெயர் பல்கலைக்கழக சகமாணவர்களிடம் பிரபலமடைந்துள்ளது.

தவில் G.தமிழ்ச்செல்வன்

தவில் கலையில் தேர்ச்சிப்பெற்றுவரு G. தமிழ்ச்செல்வனின் பெற்றோர் வழியில் தாத்தாக்கள், பனம்பாக்கம் தொப்பை மற்றும் திருமால்பூர் பி.வி. கண்ணன் இருவருமே நாதஸ்வர வித்வான்கள். பெற்றோர்கள் ஞானப்பிரகாசம், பனம்பாக்கம் ஜி. வசந்தா இருவரும் நாதஸ்வர வித்வான்கள். தாய் வசந்தா தமிழ்ச்செல்வனை கருவாக வயிற்றில் சுமந்தபடி கச்சேரிகள் பல செய்திருக்கிறார்.

உடன் பிறந்த சகோதரி ஒருவர் தமிழ்ச்செல்வனுக்கு உண்டு. தாய்ப்பால் அருந்தும் பிள்ளையாக தாயுடன் கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய கட்டாய குடும்பச் சூழல். இன்னிசை ஊட்டி வளர்த்த பிள்ளை இசைஞானம் இல்லாமல் இருக்குமா? நாதஸ்வரம் இசைக்கும் இசைப் பரம்பரையில் பிறந்த போதும் தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுத்தது தவில் வாத்தியத்தை!

பெற்றோர்களின் கச்சேரி முடிந்த பிறகு அவர்களுக்கு தவில் இசைக்கும் கலைஞர்களின் வாத்தியத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கியவருக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டது. தூசி குமரன் அவர்கள் தான் இவருடைய முதல் குரு. அவரிடமிருந்து இக்கலையைக் கற்று, அவருடன் பல கச்சேரிகள் வாசித்து பல அரிய அனுபவங்களைப் பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வன்.

ஒன்பதாவது படிக்கும் போது தந்தையை இழந்த தமிழ்ச்செல்வனுக்கு அவருடைய தாய், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவரை பி.காம் பட்டப் படிப்பில் சேர்த்தார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே கச்சேரிகள் பல செய்து அதில் வரும் வருமானத்தில் தன்னுடைய கல்லூரிச் செலவை எதிர்கொண்ட தமிழ்ச்செல்வன், வீட்டுச் செலவுகளையும் ஓரளவு பார்த்துக் கொள்ளும் பொறுப்பான ஆண் பிள்ளையாகவும் இருந்திருக்கிறார். பிகாம் முடித்து மேல் படிப்பையும் தொடர வேண்டும் என்று தாய் விருப்பப்பட்ட போதும் இரத்தத்தில் கலந்த சங்கீதம் இவரை இசையின் பால் ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் அடையாறு இசைக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு மயிலை கஜேந்திரன் அவர்கள் இவருக்கு குருவாக அமைந்தார். கல்லூரி விழாக்கள், கல்லூரி வழியாக பல அரசு விழாக்கள், சபா மேடைகள் பலவற்றிலும் கச்சேரிகள் வாசிக்கும் வாய்ப்பை கல்லூரியும், கல்லூரியின் துணை வேந்தர் டாக்டர் சௌமியா அவர்களும் இவருடைய குரு மயிலை கஜேந்திரன் அவர்களும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சௌமியா

கல்லூரி என்றவுடன் நேர்மறையான பல அனுபவங்கள் தான் தனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று பெருமையாகச் சொல்கிறார், இறுதி வருடப் படிப்பில் இருக்கும் தமிழ்ச்செல்வன். தற்போது கல்லூரியில் அடையார் ஜி சிலம்பரசன் அவர்கள் குருவாக இவரை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

யுவராஜ் - தம்புரா

சங்கீதத்திற்கு ஆதாரமாக அமைவது சுருதி தானே? சுருதி பிசகாமல் தம்புராவை மீட்டும் யுவராஜை சந்திப்போமா?

தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள மாலுரைச் சேர்ந்தவர் யுவராஜ். இசை ஆர்வம் கொண்ட இவருடைய தந்தை இவரை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா இசைக் கல்லூரியில் ‘சங்கீத விஷாரதா’ மூன்று வருட டிப்ளமா படிப்பில் அனுமதித்தார். அங்கு வயலினை முக்கியப் பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்த இவருக்குக் குருவாக அமைந்தவர் டாக்டர் பூர்ணா வைத்தியநாதன்.

யுவராஜ் - தம்புரா

ஒரு குருவாக மட்டுமல்லாமல் பெற்றோராக இருந்து அரவணைத்துக் கொண்டிருக்கின்றனர் இசைத் தம்பதியர் பூர்ணா வைத்தியநாதன் மற்றும் கலைமாமணி ஜெ. வைத்தியநாதன் இருவரும். அவர்கள் வீட்டிலேயே யுவராஜை தங்க வைத்து, சென்னை அடையாறில் அமைந்துள்ள டாக்டர் ஜெ ஜெயலலிதா நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர்த்தனர். அங்கும் வயலினை முக்கியப் பாடமாக தேர்ந்தெடுத்துப் படித்தார் யுவராஜ்.

டாக்டர் கண்டதேவி விஜயராகவன் அவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறந்த குருவாக இவருக்கு அமைந்து சரியான திசையில் இவரைக் கொண்டு சென்றார். பட்டப்படிப்பை டிஸ்டிங்ஷனில் முடித்த இவரை அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் வாய்ப்பாட்டில் அனுமதித்தனர் இந்த இசைத் தம்பதியர். இது தவிர ஆர்கே ஸ்ரீராம் குமார் அவர்களிடம் வாய்ப்பாட்டும் கற்று வருகிறார் யுவராஜ்.

பல கலைஞர்களுக்கு இவர் தம்புரா மீட்டுவதை நாம் காணலாம். தனக்கு அதிக வாய்ப்புகள் வழங்கி ஊக்கம் தரும் ராகசுதா அரங்கத்தின் உரிமையாளர் திருமதி ஜெயலட்சுமி அவர்களுக்கும் நாரத கான சபையின் செயலர் ஹரிசங்கர் அவர்களுக்கும் நன்றி கூறும் அதே வேளையில், தனக்கு தம்புராவை சுருதி கலையாமல் எப்படி மீட்டுவது என்பதைக் கற்றுத் தந்த ஜெ. வைத்தியநாதன் அவர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் உடையவராக இருக்கிறார் யுவராஜ்.

பல முன்னணிக் கலைஞர்களுக்கும் மூத்த கலைஞர்களுக்கும் தம்புரா இசைக்கும் போது பலவித இசை பாணிகளை அறிந்துகொள்ள முடிவதோடு தனக்கு வருமானமும் கிடைக்க இது வழி செய்திருக்கிறது என்கிறார் இவர். இது தவிர மேடையிலும், மேடைக்கு அப்பாலும் எப்படி நடந்து கொள்வது, நேரம் தவறாமை போன்ற நல்ல குணங்களையும் வளர்க்க உதவியவர் ஜெ. வைத்தியநாதன் என்பதை மிகுந்த நன்றியோடு கூறிக் கொள்கிறார் யுவராஜ். திரு. விஜய் சிவா, திரு. ஆர் கே ஸ்ரீராம் குமார் ஆகியோருடன் தம்புரா இசைக்க பல ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியிருக்கிறது.

கல்லூரியில் துணைவேந்தர் டாக்டர் சௌம்யா அவர்கள் இவருக்கு தகுந்த ஊக்கம் தந்து பாடவும், வயலின் பக்கவாத்தியம் இசைக்கவும், தம்புரா மீட்டவும் உள்ளூர் சபாக்களிலும் வெளியூர்களிலும் வாய்ப்புகள் பல அமைத்துத் தருகிறார். கல்லூரியில் நடைபெறும் சிறு கச்சேரிகளில் பாடவும் பக்கவாத்தியம் இசைக்கவும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. வயலின் போட்டிகளிலும் பங்கு கொண்டு பரிசுகள் வென்றிருக்கிறார். வடபழனி கோவிலில் ஓதுவாராக இருக்கும் இவருடைய நண்பர் திரு. அருண் கார்த்திக்குக்கு தொடர்ந்து வயலின் பக்கவாத்தியம் இசைத்து வருகிறார் யுவராஜ். இந்த மார்கழி இசை சங்கமத்தில் மணியான இம்மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய மனதார வாழ்த்துவோம்!

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT