கணவன், மனைவிக்காகக் கட்டிய தாஜ்மஹாலை பற்றி நமக்குத் தெரியும். ஆனால், மனைவி தனது கணவனுக்காக கட்டிய தாஜ்மஹாலுக்கான முன்னோடி பற்றித் தெரியுமா? ஆம். ஹுமாயுன் கல்லறை மாடம்தான் அது. இந்த ஹுமாயுன் கல்லறைதான் தாஜ்மஹாலுக்கு முன்னோடியாக அமைந்த ஒரு நினைவுச் சின்னமாகும். ஹுமாயுன் கி.பி. 1556ல் படிக்கட்டில் இறங்கும்போது, தவறி விழுந்து, திடீரென மரணமடைந்தபொழுது, அவரது மனைவி பேகா பேகம் மிகவும் துயறுற்றார். தனது கணவனுக்கு தனது சாம்ராஜ்யத்தில் தலைசிறந்த ஒரு கல்லறை மாடத்தைக் கட்ட எண்ணினார். அதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணிக்க எண்ணினார். இது முழுக்க முழுக்க அவரது சொந்தச் செலவில் கட்டப்பட்டது.
கி.பி. 1565ல் கட்டத் தொடங்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான கல்லறை மாடம் கி.பி. 1572ல் கட்டி முடிக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு அந்தக் காலத்திலேயே 15 லட்சம் ரூபாய் செலவானது. இந்த கல்லறை மாடத்தைச் சுற்றி சார் பாக், அதாவது நான்கு தோட்டங்கள் ஒன்றிணைந்த அமைப்பான, பாரசீகத் தோட்டம் உருவாக்கப்பட்டது. இத்தகைய பாரசீகத் தோட்டம் இந்தியாவிலேயே முதன்முறை இங்குதான் உருவாக்கப்பட்டது.
ஹுமாயுன் உடல் முதலில் டெல்லியில் உள்ள புராணா கிலா, அதாவது பழைய கோட்டையில் புதைக்கப்பட்டது. பின்னர் மறுபடி ஹுமாயுன் கல்லறையில் புதைக்கப்பட்டது. இங்கு ஹுமாயுன் கல்லறை மட்டுமின்றி முகலாய ராஜ பரம்பரையைச் சார்ந்த கிட்டத்தட்ட 170 கல்லறைகள் உள்ளன. ஹுமாயுன் கல்லறை மாடத்தைக் கட்டிய பேகா பேகமும் இங்குதான் புதைக்கப்பட்டார். அவுரங்கசீப்பின் சகோதரனான தாரா ஷிக்கோ இங்குதான் புதைக்கப்பட்டார். அக்பரின் அம்மா ஹமிதா பானு பேகம் இங்குதான் புதைக்கப்பட்டார்.
முகாலய பேரரசில் இவ்வாறு பிரம்மாண்டமான கல்லறை மாடங்கள் கட்டுவதைத் துவக்கி வைத்தவர் பேகா பேகம்தான். இவர் தொடங்கிய இந்தக் கட்டடக்கலை தாஜ்மஹால் காலத்தில் உச்சகட்டத்தை அடைந்து இன்றும் தாஜ்மஹால் உலக அதிசயமாகக் கருதப்படுகிறது. தாஜ்மஹாலும் ஹுமாயுன் கல்லறை மாடமும் பெருமளவு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
ஹுமாயுன் கல்லறை மாடத்தில் வெங்காயத்தைப் போன்ற குவிமாடம் சலவை கல்லிலும் மற்ற பகுதிகள் சிவப்பு மணற் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான தோற்றத்தைத் தவிர்ப்பதற்கு அங்கங்கு வெள்ளை, கருப்பு சலவைக்கற்கள் மற்றும் மஞ்சள் மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கல்லறை மாடமானது 57 அடி உயர மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடையின் அகலமானது 299 அடி. 12000 சதுர மீட்டர்கள் பரப்பளவு உடையது. கல்லறைக் குவிமாடத்தைச் சுற்றி இரண்டு அடுக்கு எண்கோண அறைகள் உள்ளன. சூபி கலாசாரத்தின்படி இந்த அறைகளின் வழியாக நடப்பதன் மூலம் நம்மால் ஹுமாயூன் கல்லறையைச் சுற்றிவர முடியும். இங்குள்ள ஜாலி அதாவது ஜன்னல் வேலைப்பாடுகள் மிகவும் அழகானவை. இந்தியாவிலேயே இரண்டடக்கு குவி மாடத்தினை முதன் முதலில் பயன்படுத்திய கல்லறை மாடம் இதுதான். தரைத் தளத்தில் 124 அறைகள் உள்ளன.
இந்த இடம் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தொடர்புடையது. முதல் இந்திய சுதந்திரப் போரின்போது கி.பி. 1857ம் ஆண்டு முகலாய கடைசி அரசர் பகதூர் ஷா ஜபர் அவரது மூன்று மகன்களுடன் இங்குதான் ஆங்கிலேய கிழக்கு இந்தியக் கம்பெனியால் கைது செய்யப்பட்டார். இந்த இடம் கி.பி. 1993ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
நீங்கள் டெல்லி சென்றால் இந்த அருமையான தாஜ்மஹாலை போன்ற ஹுமாயுன் கல்லறை மாடத்தைக் காணத் தவறாதீர்கள். இந்தக் கல்லறை மாடத்திற்கு செல்லும் வழியில் இதேபோன்ற சில பிரம்மாண்டமான கல்லறை மாடங்களும் உள்ளன. அவற்றையும் காணத் தவறாதீர்கள்.