மேற்கு வங்காள மாநிலத்தில், புது ஜல்பைக்குரி தொடருந்து நிலையத்திலிருந்து டார்ஜிலிங் வரையில், 2 அடி (610 மிமீ) கொண்ட ஒரு சிறிய குற்றகல இருப்புப் பாதையாக அமைக்கப்பட்டிருக்கும் டார்ஜிலிங் இமாலய இருப்புப்பாதை (Darjeeling Himalayan Railway) வழியாக இயங்கும் தொடருந்து, டார்ஜிலிங் பொம்மைத் தொடருந்து என்று அழைக்கப்படுகிறது. 1879 மற்றும் 1881 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையானது, ஆறு கொண்டை ஊசி வளைவுகள், ஐந்து சுழல் வளைவுகள் கொண்டு சுமார் 88 கிலோ மீட்டர் (55 மைல்) நீளத்தைக் கொண்டிருக்கிறது.
1835 ஆம் ஆண்டில், டார்ஜிலிங் பகுதியில் சுமார் 20 குடிசைகளும், அங்கு சுமார் 100 மக்கள்தொகையினரும் இருந்தனர். இம்மலையில் ஒரு மடாலயமும் இருந்தது. 1839 ஆம் ஆண்டில், டார்ஜிலிங் நகரத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1840 ஆம் ஆண்டில் டார்ஜிலிங் நகரம், சுமார் 30 கட்டிடங்களையும், சில மேம்பட்ட வீடுகளையும் கொண்டு அமைக்கப்பட்டது.
1878 ஆம் ஆண்டில், கிழக்கு வங்க ரயில்வேயின் முகவரான ஃபிராங்க்ளின் ப்ரெஸ்டேஜ் என்பவர், டார்ஜிலிங் மலைகளுக்கும் சமவெளிகளுக்கும் இடையே ஒரு தொடருந்துப் பாதை அமைத்து, அதன் வழியாக ஒரு தொடருந்தை இயக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், சிலிகுரியில் இருந்து டார்ஜிலிங்கிற்கு இரண்டு அடி அகலத்திலான தொடருந்துப் பாதை அமைப்பதற்கான திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்தார்.
அதனை ஏற்ற வங்காளத்தின் துணை நிலை ஆளுநரான ஆஷ்லே ஈடன், திட்டத்தின் சாத்தியக் கூறுகளை மதிப்பிடுவதற்கு ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையினைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் 1879 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் கட்டுமானப் பணிகளும் அந்த ஆண்டேத் தொடங்கியது. டார்ஜிலிங் ஸ்டீம் டிராம்வே நிறுவனம் என்று தொடங்கப்பட்ட நிறுவனம், இந்தப் பாதையை நீராவி டிராம்வேயாக இயக்கும் யோசனையைக் கைவிட்டது. 1881 ஆம் ஆண்டில், செப்டம்பர் 15 அன்று இந்நிறுவனம் டார்ஜிலிங்கின் பெயருடன், டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே கோ. (DHR) என்று மாற்றப்பட்டது. 1948 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 அன்று சுதந்திர இந்திய அரசாங்கத்தால், இந்நிறுவனம் கையகப்படுத்தப்படும் வரை அந்நிறுவனத்தின் செயல்பாட்டிலேயே இருந்தது.
விடுதலை அடைந்த பிறகு, முதலில் இந்த இருப்புப்பாதை அசாம் இருப்புப்பாதையுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர், அசாம், வங்காளம் இடையேத் தொடருந்து இணைப்பை நிர்மாணிப்பதற்கும் மற்றும் கிஷான்கஞ்ச் வரை குறுகிய பாதை விரிவாக்கம் ஏற்படுத்தவும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், அதன் மற்றொரு விரிவாக்க இணைப்பான காலிம்பாங் வரையுள்ள தொடருந்து பாதை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு, 1952 ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்டு, வடகிழக்கு தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டு வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது.
இந்தத் தொடருந்துப் பாதையில், புது ஜல்பைக்குரி, சிலிகுரி நகரம், சிலிகுரி சந்திப்பு, சுக்னா, ரோங்டாங், தின்தாரியா, கயாபாரி, மகாநதி, கர்சியாங், துங், சோனாடா, கும் மற்றும் டார்ஜிலிங் என்று 13 தொடருந்து நிலையங்கள் உள்ளன. 1999 டிசம்பர் 2 அன்று, டார்ஜிலிங் இமாலய இருப்புப் பாதையினை யுனெஸ்கோ அமைப்பு, உலக மரபுவழிக் களமாக அறிவித்தது.
இந்தியாவின் மலைப்பாதைத் தொடருந்துகளில் ஒன்றாக அறியப்பட்ட, டார்ஜிலிங் இமாலயன் தொடருந்துப் பாதையானது, கீழ்க்காணும் சில காரணங்களுக்காக, உலகம் முழுவதும் புகழ் அடைந்துள்ளது:
இமயமலையின் நுழைவாயில்
இந்திய இருப்புப்பாதை நிறுவனத்தால் நீராவி வண்டியால் இயக்கப்படும் புகையிரதப் பாதை சிறிய அளவிலானது.
19 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த மிகச்சிறிய நான்கு சக்கர நீராவி வண்டிகளால் இந்தத் தொடருந்து இயக்கப்படுகின்றது.
இந்தத் தொடருந்து பாதை மிகவும் சவாலானது, செங்குத்தான ஏற்றங்களும், இறக்கங்களும் மேலும் குறுகிய வளைவுகளுடன் கூடியது.
இப்பாதையில் இயக்குவதற்காக 13 நீராவி வண்டிகள், திந்தாரியா பட்டறையில் இருக்கின்றன. அதில் சில 100 வருடங்கள் பழமையானவை. மிகவும் இளைய நீராவி வண்டியின் வயது சுமார் 70 என்று இருக்கிறது.
இந்தியாவில், டார்ஜிலிங் இமாலய இருப்புப்பாதை தவிர, நீலகிரி மலைத் தொடருந்து, கல்கா சிம்லா தொடருந்து என்று மற்ற மேலும் இரண்டு மலை தொடருந்துப் பாதைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.