சிறுவாணி அணை நீர் திறப்பு 
கலை / கலாச்சாரம்

உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் சிறுவாணி பற்றி தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

நாம் குடிக்கும் நீர் சுவையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், அதற்காக நாம் பயன்படுத்துவது கெமிக்கல்கள் நிறைந்த மினரல் வாட்டர்தான். இயற்கையில் குடிநீருக்கு என்று ஒரு சுவை உள்ளது அதிலும் சில குடிநீர்கள் மிக மிக சிறப்பு வாய்ந்த சுவையோடு இருக்கும்.

கோவை மக்களின் தாகத்தைத் தீர்க்கும் சிறுவாணி தண்ணீருக்கு உலக அளவில் மிகவும் சுவையான குடிநீர் என்ற ஒரு புகழ் உண்டு. சரி, அந்த சுவையான குடிநீர் பற்றியும், அது எப்படி நம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

உலகின் இரண்டாவது சுவையான குடிநீரும், கோவை மாநகர மக்களின் தாகத்தைத் தீர்க்கும் நீருமாக இருப்பதுதான் சிறுவாணி நீர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தில் கடந்த 1929ம் ஆண்டு கட்டப்பட்டதுதான் சிறுவாணி அணை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இந்த அணை கேரள மாநிலம் வசம் சென்றது.

இன்று கோவை மாவட்டம் பரந்து விரிந்திருப்பதற்கும், தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகராகமாக உருவெடுத்திருப்பதற்கும் அடித்தளமே இந்த சிறுவாணி தண்ணீர்தான். கேரள அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது சிறுவாணி அணையில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

Siruvani Dam

இந்தத் தண்ணீரை சிறுவாணி அணையில் இருந்து எடுத்து தமிழக எல்லையில் சிறுவாணி அடிவாரத்தில் சுத்திகரிப்பு செய்கிறது பொதுப்பணித்துறை. பல்வேறு சுத்திகரிப்பு நிலைக்குப் பிறகு சிறுவாணி நீர் கோவை மாநகரின் ஒரு பகுதிக்கும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இனி, சிறுவாணி தண்ணீர் எந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறது என்று பார்ப்போம். சிறுவாணி அணையில் இருந்து குழாய் வழியாக உரிஞ்சி எடுக்கப்படும் இந்தத் தண்ணீர் அடுத்த 1.5 கிலோ மீட்டர்களுக்கு குழாய் வழியாகவே வருகிறது. மீதி உள்ள 1.5 கிலோ மீட்டருக்கு மலைப்பாதையில் வழிந்து வந்து சுத்திகரிப்பு நிலையத்தை அடைகிறது.

சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 7 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நீரை சுத்தப்படுத்த ஆலம் என்ற ரசாயனக் கட்டி பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 20 கிலோ ஆலம் ரசாயனக் கட்டி பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தண்ணீரில் குளோரின் கலக்கப்படுகிறது. ஆயிரம் லிட்டருக்கு ஒரு பி.பி.எம் என்ற அடிப்படியில் 7 கோடி லிட்டர் நீருக்கு 70 லிட்டர் தண்ணீரில் கலக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ‘ரேபிட் சேண்ட்’ என்ற பில்டரேஷன் சென்டரில் சிறுவாணி நீர் சுத்திகரிக்கப்படு கோவை மக்களை வந்தடைகிறது. எடுத்த எடுப்பிலேயே இந்த நீர் கோவை மக்களுக்குக் கிடைத்துவிடவில்லை. சிறுவாணி நீர் கோவை மக்களை வந்தடைய பல போராட்டங்களையும், தியாகங்களையும் சந்தித்திருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் சிறுவாணியை கோவை மாநகருக்குள் கொண்டுவர உழைத்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT