இன்னும் சில நாட்களில் நாம் மக்களவை தேர்தலில் வாக்களிக்க இருக்கிறோம். நம்மில் பலருக்கு இன்னும் இந்தியாவில் இரு அவைகள் இருப்பதே தெரியாது. மக்களவை என்றால் என்ன? மாநிலங்களவை என்றால் என்ன எனும் கேள்விக்கான விடையை இந்தப் பதிவில் காண்போம்.
பொதுமக்கள் சபை மற்றும் மாநிலங்களில் பொதுமக்களால் சட்டசபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கும் அறிஞர்கள் சபை என இரண்டு சபைகள் இருந்தால்தான், ஒன்று மற்றதைத் தட்டிக்கேட்க முடியும் என்னும் நோக்கத்தில் ஏற்பட்ட அரசியலமைப்பு இந்தியாவுடையது!
இங்கிலாந்திலும், பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை என இரண்டு சபை உண்டு. அவர்களிடம் அடிமைப்பட்டிருந்த நாம் அவர்களைக் காப்பியடிப்பதில் வியப்பு இல்லையே! ஆனால், நாம் நமது சபையை பிரபுக்கள் சபை என வைக்கக் கூச்சப்பட்டு, மாநிலங்களவை என்று வைத்துள்ளோம்! ஜனநாயகமல்லவா நமது? எனினும், நமது அரசியல்வாதிகள் பலரும் என்றோ பிரபுக்கள் ஆகிவிட்டனர் என்பது அவர்கள் தெரிவிக்கும் சொத்து மதிப்பிலிருந்தே தெரிய வரும் விஷயமாக இருக்கிறது!
மக்களவை: மக்களவை என்பது இந்தியாவின் இரு சபை நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஆகும். மேலவை ராஜ்யசபா என்றும் அழைக்கப்படுகிறது. லோக்சபா உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதிகளில் இருந்து நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்திய சட்டப்பேரவைக்கு என சில பிரத்யேக அதிகாரங்கள் உள்ளன. நிதி மற்றும் கன்கர்ரன்ட் லிஸ்ட் தொடர்பான விஷயங்களைத் தவிர, எந்த விஷயத்திலும் மசோதாக்களை தொடங்குவதற்கும் நிறைவேற்றுவதற்கும் அதிகாரம் இதில் அடங்கும். கூடுதலாக, அது மட்டுமே ஒரு மசோதாவை பண மசோதாவாக அறிவிக்க முடியும். ராஜ்ய சபாவின் துணைத் தலைவரையும் சட்டசபை அதன் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறது.
மாநிலங்களவை: மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245. இதில் 233 மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும், 12 பேர் குடியரசுத் தலைவரால் நேரடியாகவும் நிரப்பப்படுகிறார்கள். கலை, அறிவியல், சமூக சேவகர்கள், சாதனையாளர்கள் என இவர்களில் சிறந்து விளங்கும் 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்.
மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆயுட்காலம் ஆறு வருடங்கள். மாநிலங்களவையின் தலைவராக குடியரசுத் துணைத் தலைவர் இருப்பார். புதியதாக ஒரு சட்ட மசோதாவை மத்திய அரசு சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென்றால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றினால் மட்டுமே அந்தச் சட்டம் 'சட்டமாக' நிறைவேறும்.
மக்களவையை கலைப்பது போன்று மாநிலங்களவையை கலைக்க முடியாது. மாநிலங்களவை உறுப்பினர் இறந்தாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ எந்த மாநிலத்தில் இருந்து அவர் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாரோ, அந்த மாநிலத்தில் இருந்து மட்டுமே புதிதாக ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும். மக்களவை இருக்கைகள் மற்றும் தரை விரிப்புகள் அனைத்தும் பச்சை நிறமாகவும், மாநிலங்களவை இருக்கைகள் மற்றும் தரை விரிப்புகள் அனைத்தும் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.