berlin wall fall 
கலை / கலாச்சாரம்

உலக சுதந்திர தினம் கொண்டாடப்படுவதன் கலாசார வரலாற்று முக்கியத்துவம் தெரியுமா?

நவம்பர், 9 உலக சுதந்திர தினம்

எஸ்.விஜயலட்சுமி

1989ம் ஆண்டு ஜெர்மனியில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் நவம்பர் 9ம் தேதி உலக சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் பின் உள்ள வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பிரிவினை: இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் நாடு, கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என்று இரண்டு பகுதிகளாகப் பிரிந்தன. சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனியை கட்டுப்படுத்தியது. மேற்கு ஜெர்மனியை பிரான்ஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நாடுகள் ஆக்கிரமித்தன. மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனிக்கு இடையிலான வாழ்க்கை முறைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தன. மேற்கு ஜெர்மனியில் பொருளாதார நிலைமைகள் செழித்தோங்கியது. கம்யூனிஸ்ட் ஆளும் கிழக்கு ஜெர்மனியில் நிலவிய கடினமான மற்றும் சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க நினைத்த ஜெர்மனியர்கள் மேற்கு ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தனர். 15 ஆண்டுகளில் மூன்று மில்லியன் மக்கள் கிழக்கு ஜெர்மனியை விட்டு வெளியேறினர். இதனால் சோவியத் யூனியன், அணு ஆயுதங்களை பயன்படுத்தி மேற்கு ஜெர்மனியை மிரட்டியது. 1961ல் மேற்கு மற்றும் கிழக்கு பெர்லினுக்கு இடையில் இரவோடு இரவாக ஒரு பௌதீக தடையை உருவாக்கி முள்வேலி மற்றும் 91 மைல் நீள கான்கிரீட் சுவரை எழுப்பியது. சுவரில் கண்ணிவெடிகள், கண்காணிப்பு கோபுரங்கள், மின்சார வேலிகள் இருந்ததால் அதை யாரும் கடந்து செல்ல முடியாத நிலை.

இடிந்த சுவர்; ஒன்றுபட்ட ஜெர்மனி: 1989ல் புதிய தலைவர் பொறுப்பேற்றபோது கிழக்கு பெர்லினில் இருந்து மேற்கு பெர்லினுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள், உளிகள், சுத்தியல்கள் பயன்படுத்தி சுவரை இடிக்கத் தொடங்கினர். 1990ல் பெர்லின் சுவர் முற்றிலுமாக இடிக்கப்பட்டு மேற்கு மற்றும் கிழக்கு பாகங்கள் இணைந்து ஒரே ஜெர்மனியாக உருவெடுத்தது.

வரலாற்று முக்கியத்துவம்: உலக சுதந்திர தினம் என்பது பெர்லின் சுவர் எடுக்கப்பட்டதை நினைவு கூறும் ஒரு கூட்டாட்சி அனுசரிப்பு ஆகும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் முடிவை நினைவு கூறும் இந்த நாள் 2001ல் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷால் நியமிக்கப்பட்டது. நவம்பர் 9, 1989 அன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வானது பிளவுபட்ட ஜெர்மனியின் முடிவையும் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்கு இடையேயான பனிப்போர் பிரிவின் முடிவையும் குறிக்கிறது.

கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஜனநாயக இயக்கங்களின் அலையைத் தூண்டுவதில் இந்த நிகழ்வு முக்கியமான ஒன்றாக மாறியது. போலந்து, ஹங்கேரி மற்றும் செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் அமைதியான போராட்டங்களை நடத்தின. கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வரவும், ஜனநாயக ஆட்சியை நிறுவவும் வழிவகுத்தது.

பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது அடக்குமுறை ஆட்சிகளுக்கு எதிரான வெற்றியை பிரதிநிதித்துவப்படுத்தியது.

அரசியலமைப்பு மாற்றங்கள்: சுவரின் சரிவு மற்றும் ஜெர்மனியின் மறு ஒருங்கிணைப்பு குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. இது சிவில் உரிமைகள் மற்றும் ஜனநாயக நிர்வாகத்தை மேம்படுத்தியது. இது ஒருங்கிணைந்த ஐரோப்பாவை ஸ்தாபிப்பதில் இன்றியமையாத பங்கு வகித்தது.

கலாசார முக்கியத்துவம்: கலாசார ரீதியாக பெர்லின் சுவர் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களுக்கு நம்பிக்கையின் நீடித்த சின்னமாக மாறியது. கூட்டு நடவடிக்கை மற்றும் விடாமுயற்சி மூலம் மாற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. அடக்குமுறை ஆட்சிகளின் கலாசார மற்றும் சமூக தாக்கங்கள் மற்றும் சிவில் உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விவாதங்களை இது ஊக்குவிக்கிறது.

கலை மற்றும் வெளிப்பாடு: சுவரின் வீழ்ச்சியை தொடர்ந்து சுவர் ஓவியங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கியம் தொடர்பான கலைப்படைப்புகள் வெளிவந்துள்ளன. அவை விடுதலையின் உணர்வையும் ஒடுக்குமுறையின் கீழ் வாழும் மக்களின் பல்வேறு கதைகளையும் படம் பிடித்தன. உலகளாவிய ரீதியில் சுதந்திரத்துக்காக நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் விழுமியங்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் நாளாக இந்த நாள் விளங்குகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT