காகித மடிப்புகளை வைத்து பலவித அழகான வடிவங்களை உருவாக்கும் கலை ஓரிகமி. இது கண்கவர் வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சீனாவில் தோன்றிய ஓரிகமி கலை ஜப்பானில் பிரபலம் அடைந்தது.
தோற்றம்: சீனாவில் கி.பி. 100ல் காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு ஓரிகமி தோன்றியது. ஆரம்பத்தில் காகிதப் பொருட்கள், சடங்குகள் மற்றும் மத நடைமுறைகளுடன் தொடர்புடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. பின்பு ஆறாம் நூற்றாண்டில் காகித மடிப்பு நுட்பங்கள் ஜப்பானுக்கு பரவியது. அங்கு அது ஒரு தனித்துவமான கலை வடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மாறுபாடுகளை அடைந்தது.
ஓரிகமியின் பொருள்: ஜப்பானில் காகித மடிப்பு கலைக்கு ‘ஓரிகமி’ என்று பெயரிடப்பட்டது. ஜப்பானிய மொழியில் கமி என்றால் காகிதத்தையும் ஓரி என்றால் மடிப்பதையும் குறிக்கிறது. 1603 -1868 காலகட்டத்தில் ஓரிகமி குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்தது. உயர் வகுப்பினரிடையே ஓரிகமி ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியது. சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் நுட்பங்களுக்கு வழி வகுத்தது. அவற்றில் பல இன்றும் நடைமுறையில் உள்ளன. கொக்கு போன்ற சின்னங்கள் அமைதி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக மாறியது.
நம்பிக்கையின் வடிவம்: 1800களின் பிற்பகுதியில் ஜப்பானில், ஜெர்மன் காகித மடிப்பு நுட்பங்களை ஓரிகமியில் இணைத்தனர். இந்த நாட்களில் ஓரிகமி நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகக் கருதப்பட்டது. உதாரணமாக, புற்றுநோயை எதிர்த்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு காகிதங்களை பயன்படுத்தி கிரேன் வடிவங்களை செய்யத் தொடங்கினர். ஆயிரம் கிரேன்களை மடிக்கும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டது.
காகித கிரேன்கள்: இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் ஹிரோஷிமா கிராமத்தில் அணுகுண்டு வீசப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சடகோ சசாகி என்ற இளம்பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாள். ஆயிரம் பேப்பர் கிரேன்களை மடித்து வைத்து பிரார்த்தனை செய்தால் நோய்வாய்ப்பட்ட ஒருவர் விரைவில் குணமடைவார் என்று கேள்விப்பட்டு அதை செயல்படுத்தத் தொடங்கினாள். 644 காகித கிரேன்களை மடித்து முடித்தபோது சடகோ இறந்துபோனாள். ஆனால், உலகெங்கிலும் உள்ள மக்கள் அவளது கதையை கேட்டு ஈர்க்கப்பட்டனர். இன்று வரை உலகம் முழுவதிலும் இருந்து குழந்தைகள் சடகோவின் நினைவாக காகிதக் கிரேன்களை செய்கிறார்கள்.
காகிதத்தை மடிக்கும் கலை ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பான் உட்பட உலகம் முழுவதும் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட கலை வடிவம் இறுதிச் சடங்குகள், பிறந்த நாள், திருமண வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து வகையான மரபுகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது.
ஓரிகமியின் வளர்ச்சி: 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஓரிகமி தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது. மேற்கத்திய கலாசாரங்களில் மிகவும் பிரபலம் அடைந்தது. சமகாலத்தில் ஓரிகமி அதன் கலை வடிவங்களைக் கடந்து கணிதம் மற்றும் பொறியியலில் ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வுப் பகுதியாக மாறி உள்ளது. கட்டமைப்பு வடிவமைப்பு ரோபோடிக்ஸ் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட நடைமுறை பயன்பாடுகளுக்கு ஓரிகமி கொள்கைகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஓரிகமியுடன் தொடர்புடைய புதுமையான மடிப்பு நுட்பங்கள் கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் குறுக்கு வெட்டு தோற்றம் மற்றும் வழிமுறைகள் போன்றவை விண்வெளி சேமிப்பு வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று ஓரிகமி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கைவினைத் திறன்களை மேம்படுத்துவதற்கும் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மாநாடுகள் செயல்படுகின்றன. தனி நபர்கள் காகிதத்தின் துணையால் எளிய வடிவங்களை கொண்டு பலவிதமான காகித சிற்பங்களை உருவாக்குகின்றனர். இது படைப்பாற்றல் மற்றும் வளமான கலாசார மரபு போன்றவற்றை உள்ளடக்கியது. அமெரிக்காவில் முதல் ஓரிகமி குழுமத்தை நிறுவிய லில்லியன் ஓப்பன் ஹைமரின் பிறந்த நாளை ஒட்டி உலக ஓரிகமி தினம் நவம்பர் 11ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.