வெஜ் பிரியாணி 
கலை / கலாச்சாரம்

பிரியாணி இந்தியாவுக்கு வந்த வரலாறு தெரியுமா?

ம.வசந்தி

மிழர்களின் பாரம்பரிய உணவுகளை எல்லாம் மிஞ்சி நம் உணர்வோடு கலந்துவிட்ட பிரியாணி, இன்று கிராமங்களில் கூட ஏதாவது விசேஷம் என்றால் முதன்மையான உணவாக மாறிவிட்டது. வீதிகள் தோறும் தெரு விளக்குகள் இருக்கிறதோ, இல்லையோ ஒரு பிரியாணி கடை இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஆனால், பிரியாணியின் தாயகம் நமது இந்தியா அல்ல என்பதுதான் ஆச்சரியம். அதே நேரத்தில் இந்த நாட்டில் இருந்துதான் இது வந்தது என்றும் உறுதியாகச் சொல்லவும் முடியாது.

துருக்கிய - மங்கோலிய பேரரசன் தைமூர் என்பவன் 1398ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது கையோடு பிரியாணி உணவைக் கொண்டு வந்ததற்கு ஒரு கதையும் உண்டு. அவருடைய படைகள் முகாம் இட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி, காய்கறிகள் மற்றும் வாசனைப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து சாதம் செய்து அப்படியே அதை அப்படை வீரர்களுக்கு சூடாக பரிமாறினார்கள். அதுதான் இந்தியாவுக்கு முதல் முதலில் பிரியாணி வந்த கதை என்று சொல்கிறார்கள்.

ஒரு சமயம் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் படை வீரர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்குச் சென்று இருக்கிறார். அங்கே இருந்த வீரர்கள் மிகவும் பலவீனமாகவும் ஊட்டச்சத்து இல்லாமல் சோர்ந்து போய் இருப்பதைப் பார்த்த அவர் உடனே தலைமைச் சமையல்காரரை அழைத்தார். அரிசியும் இறைச்சியும் கலந்த ஊட்டச்சத்துள்ள ஓர் உணவை தயாரிக்கச் சொன்னார். அதுதான் பிரியாணி என்று சொல்பவர்களும் உண்டு.

ஹைதராபாத் நிஜாம்களுக்கும் லக்னோ நவாப்களுக்கும் பிரியமான உணவான பிரியாணியை அவர்கள் பிரபலப்படுத்தவும் செய்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் மிக முக்கியமான அடையாளமாகவே அது மாறிப்போனது. பிரியாணி கொஞ்சம் கடினமான உணவு என்பதால் இதயக் கோளாறுகளுக்கும் உடல் பருமனுக்கும் வழி வகுக்கும். கொழுப்பை கூட்டும், ஆரோக்கியத்துக்கு கேடு என்று பலவிதமாகச் சொல்லப்படுகிறது.

பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள வைக்கப்படும் வெங்காயம், கத்தரிக்காய் தொக்கு இரண்டும் மருத்துவ குணம் கொண்டவை. செரிமானத்திற்கு உதவி புரியும். சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை வாரத்துக்கு ஒரு முறை சாப்பிடுவது, எப்போதாவது விசேஷத்தின்போது சாப்பிடுவது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஊட்டச்சத்து அளிக்கக் கூடியது. இதுதான் உண்மை. அளவோடு சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பிரியாணிக்கும் பொருந்தும். இதுதான் உணவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT