‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது’ என்று கூறுவதைப் போல, காகித பிடிப்பூக்கியின், அதாவது பேப்பர் கிளிப் (Paper Clip) அளவு சிறிதாக இருப்பினும், அதன் பயன் மிகப்பெரியது. பேப்பர் கிளிப் தோன்றிய வரலாற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
13ம் நூற்றாண்டிலிருந்தே காகிதங்களை இணைத்து வைப்பதென்பது சவாலான விஷயமாக இருந்தது. காகிதத்தில் துளையிட்டு நாடாவை உள் நுழைத்து, சேர்த்து வைத்தனர். இந்த நாடாவில் மெழுகினைத் தடவி, அதனை வலுவாக்கினர். இத்தகைய முறை கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்தது.
1835ம் ஆண்டு, நியூயார்க் நகரின் மருத்துவர் ஜான் அயர்லாந்து ஹோவே, நேரான இரும்புக் கம்பிகளை உருவாக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அது மக்களுக்கு பெருமளவில் உதவியது. ஆரம்பத்தில், அது தற்காலிகமாக தையலின்போது, துணிகளை சேர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர், அது காகிதங்களை இணைக்கப் பெருமளவில் உதவியது.
1899ம் ஆண்டு நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் வாலர் என்ற காப்புரிமை நிறுவனத்தில் வேலை பார்த்த விஞ்ஞானி, நேரான கம்பியை வளைத்து, காகித பிடிப்பூக்கினைக் கண்டுபிடித்தார். உடனே, அதனை தான் கண்டுபிடித்ததற்காக காப்புரிமையை ஜெர்மனியில் பதிவு செய்தார். அப்போது நார்வேயில் காப்புரிமை சட்டங்கள் இல்லை.
பின்னர், இத்தகைய காகிதப் பிடிப்பூக்கிகளை அதிக அளவில் தயாரிக்கும் இயந்திரங்கள் இங்கிலாந்தில் உள்ள ஜெம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டன. அவற்றில் வளைவு நீள்வட்டமாக இருந்தது. நிறுவனத்தின் பெயரின் காரணமாக, அது ஜெம் க்ளிப் (gem clip) என்றும் கூட அழைக்கப்பட்டது.
இன்றும் கூட, எளிதில் காகிதங்களை ஓட்டை போடாமல் இணைத்து வைக்க, இந்த காகித பிடிப்பூக்கிகள் பெருமளவில் பயன்படுகின்றன. மேலும், இவற்றை எளிதில் பிரித்து விட முடியும். கைபேசியில் சிம் அட்டை உள்நுழைக்கவும், கணினியில் சிக்கிக்கொண்ட குறுவட்டினை (compact disc) எடுப்பதற்கு என்று பல்வேறு வகைகளில் இந்த ஜெம் க்ளிப் உதவுகிறது.