நம் வாழ்நாளில் எத்தனையோ கோயில்களை பார்த்திருப்போம். ஆனால், சில கோயில்கள் மட்டுமே நம்மை வியப்பிற்குள் ஆழ்த்தும். அதன் கட்டமைப்பும், கலைத்திறனும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அப்படிப்பட ஒரு கோயில்தான், கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலாகும்.
இது ஒரு இந்து புத்த கோயிலாகும். முதலில் இந்து கோயிலாகக் கட்டப்பட்டு பிறகு புத்த கோயிலாக மாற்றப்பட்டது. இதன் பரப்பளவு 402 ஏக்கர்கள் ஆகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது. இக்கோயில் 900 வருடம் பழைமையானதாகும். அந்நாட்டிற்கு அதிகமாக வருவாய் ஈட்டி தரக்கூடிய சுற்றுலா தலமாகவும் இது விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கோர்வாட் கோயில்தான் உலகத்திலேயே மிக பெரிய ஆன்மிகத்திற்காக உருவாக்கிய கோயிலாகும். இக்கோயிலில் சொல்லில் அடங்கா சிலைகளும், சிற்பங்களும் செதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அங்கோர்வாட் கோயில் 12ம் நூற்றாண்டில், இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. 1850ம் ஆண்டு முதல், அங்கோர்வாட் கோயிலை கம்போடிய அரசு அதன் நாட்டின் கொடியில் அச்சிட்டு அக்கோயிலுக்கு மேலும் பெருமை சேர்த்து வருகிறது. இக்கோயிலுக்கு செல்ல நேர்த்தியாக உடையணிந்து செல்ல வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கெமர் மொழியில், ‘அங்கோர்’ என்றால் ‘நகரம்’ என்று பொருள். ‘வாட்’ என்றால் ‘கோயில்’ என்று பொருள். அங்கோர்வாட் என்றால் ‘கோவில் நகரம்’ என்று பொருள். இதன் உண்மையான பெயர், ‘பரம் விஷ்ணுலோகா’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் விஷ்ணுவின் தங்கும் இடம் என்று பொருள். இக்கோயில் முதலில் மகாவிஷ்ணுவிற்காகவே கட்டப்பட்டதாகும். பிறகு 12ம் நூற்றாண்டில் இது புத்த கோயிலாக மாற்றப்பட்டது.
இக்கோயில் மேரு மலையை குறிப்பது போன்றே கட்டப்பட்டதாகும். இந்து புராணத்தின்படி, மேரு மலை உலகின் நடுவிலே அமைந்திருப்பதாகும். இதுவே காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன், படைக்கும் கடவுளான பிரம்மன் மற்றும் தேவாதி தேவர்கள் குடியிருக்கும் இடம் என்று நம்பப்படுகிறது.
மற்ற அங்கோர் கோயில்கள் கிழக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கும்போது அங்கோர்வாட் மட்டும் மேற்கு நோக்கி கட்டப்பட்டிருப்பது இறப்பின் திசையை குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். இக்கோயிலை சூர்யவர்மன் தன்னுடைய சமாதியாக பயன்படுத்த நினைத்திருப்பார் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும், மேற்கு நோக்கி சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு இருக்கும் இக்கோயிலுக்கு அதைக் காரணம் காட்டியே நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவது ஆச்சர்யமான ஒன்றாகவே உள்ளது.
‘ப்னாம் குல்லன்’ மலை அங்கோர்வாட்டிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கேயுள்ள அதிக எடையுடைய மணற்கல் 1500 கிலோ எடை கொண்டதாகும். இக்கோயிலைக் கட்ட அதிகப்படியான உழைப்பை போட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 5 மில்லியன் டன் மணற்கற்களை பயன்படுத்தி அங்கோர்வாட் கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கோர்வாட் கோயிலை கட்டுவதற்கு 30 வருடங்கள் ஆகியிருக்கும். இக்கோயிலை கட்ட 3 லட்சம் பணியாட்களும், ஆறாயிரம் யானைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 12ம் நூற்றாண்டில் சூர்யவர்மனால் கட்டப்பட்ட இக்கோயில் எந்த இயந்திரமும் இன்றி கட்டப்பட்டிருக்கிறது.
இக்கோயிலின் சுவர்களில் எண்ணற்ற சிலைகளை வடிவமைத்து வைத்திருப்பது இக்கோயிலுக்கு மேலும் அழகைக் கூட்டுகிறது. இக்கோயிலில் இராமாயண, மகாபாரத சம்பவங்கள் சிலைகளாக செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், அங்கோர்வாட் கோயில் நடைபாதையில் ஏழு தலை நாகத்தின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. 7 என்னும் எண் இறைவனை அடைய சூட்சுமம் நிறைந்த எண்ணாகக் கருதப்படுகிறது. இச்சிலை சக்தி, தண்ணீர் மற்றும் வளம் போன்றவற்றை உணர்த்துகிறது.
எனவே, அதிசயமும், அழகும், கலைநயமும், ஆச்சர்யங்களும் கொண்ட இந்த அங்கோர்வாட் கோயிலை வாழ்வில் கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று பார்த்துவிட்டு வர வேண்டியது அவசியம்.