Do you know the story of the world famous wax museum?
Do you know the story of the world famous wax museum? https://www.thomascook.in
கலை / கலாச்சாரம்

உலகின் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியம் உருவான கதை தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

லகப் பிரபலங்களின் அச்சு அசலான மெழுகு சிலைகளுக்காக புகழ் பெற்றது லண்டனில் உள்ள. ‘மேடம் டூசாட்ஸ் மெழுகுச் சிலைகள் மியூசியம்.’ உலகப் பிரசித்தி பெறும் பிரமுகர்களின் மெழுகு பொம்மைகள் லண்டனில் உள்ள இந்த மியூசியத்தில் இடம் பெற்றுவிடும். இந்த மியூசியம் லண்டன் பேக்கர் தெருவில் 1835ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. உலகில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களின் மெழுகு சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவது வழக்கம். இந்த மியூசியத்தில் தங்களுக்கு சிலைகள் வைக்கப்படுவதை பிரபலங்கள் மிகவும் கெளரவமாகக் கருதுவர்.

உலகப் பிரசித்தி பெற்ற லண்டன் மேடம் டூசாட்ஸ் மெழுகு சிலை மியூசியத்திற்கு இது வரை 600 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வந்து சென்றுள்ளனர். இது வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகையை விட அதிகம்.

இங்கிலாந்து நாட்டில் முதன்முதலாக உள்ளுர் பிரபலங்களின் மெழுகு உருவ சிலைகளை அந்நாட்டின் பிரபலமான சர்ச்சுகளில்தான் வைத்தார்கள். அந்த மெழுகு உருவச் சிலைகளை தத்ரூபமாக வடித்தவர் மேடம் டூசாட்ஸ் மாமாதான். அவர் தனது தொழிற்கூடத்தில் மெழுகு சிலைகள் செய்யும்போது உடன் இருந்து பார்த்து ரசித்து வந்த சிறுமி டூசாட்ஸ் பின்னர் தானே மெழுகு சிலைகள் செய்யக் கற்றுக்கொண்டார். தனது மாமாவின் மறைவுக்குப் பின்னர் தானே அவருடைய மெழுகு சிலைகள் செய்யும் கூடத்தை முன்னின்று நடத்தினார்.

இங்கிலாந்து பிரபலங்களின் மெழுகு உருவ சிலைகள் கொண்ட அருங்காட்சியகம் ஏன் வைக்கக்கூடாது? என மேடம் டூசாட்ஸ் சிந்தித்ததன் விளைவாக இந்த மெழுகு சிலைகளின் மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது. பிரபல கவிஞர் வால்டேர் உருவச்சிலைதான் முதன் முதலாக இந்த மியூசியத்தில் 1777ம் ஆண்டு வைக்கப்பட்டது. 1783ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின் உருவச்சிலை வைக்கப்பட்டது.

இதுவரை இங்கிலாந்து ராணி எலிசபெத் உருவம்தான் அதிக பட்சமாக 23 முறைகளுக்கு மேலும் மெழுகு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் முதலில் இடம் பிடித்த இந்தியர் மகாத்மா காந்தி 1960 ல் இடம்பெற்றார், இந்திரா காந்தி, முதல் விளையாட்டு வீரராக சச்சின் டெண்டுல்கர், இந்த மியூசியத்தில் இடம் பிடித்தார். முதல் இந்திய நடிகராக அமிதாப் பச்சன் 2000ம் ஆண்டில் இடம்பெற்றார், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், கரினா கபூர், பிரதமர் நரேந்திர மோடி, கபில் தேவ், சல்மான் கான், ரித்திக் ரோஷன் மற்றும் மாதுரி தீட்சித் மெழுகு உருவச்சிலைகளும் இந்த மியூசியத்திற்காக செய்யப்பட்டுள்ளன.

மேடம் டூசாட்ஸ் மெழுகு சிலை மியூசியம் முதன்முதலாக லண்டனுக்கு வெளியே 1970ல் ஆம்ஸ்டர்டாமில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 25க்கும் மேற்பட்ட கிளைகள் உலகெங்கும் உள்ளன. அதில் நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ளதும் அடங்கும். இந்த மியூசியத்தில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோசலுக்கு சிலை உள்ளது. முதல் இந்தியப் பாடகரின் மெழுகு சிலை இடம் பெற்றது அப்போதுதான். ‘பாகுபலி’ மெழுகு சிலை கூட தாய்லாந்து நாட்டின் பாங்காக் மெழுகு சிலை மியூசியத்தில் இடம் பெற்றுள்ளது.

ஒருவருடைய மெழுகு உருவத்தை செய்வதற்கு முன் அவருடைய தலை மற்றும் உடல் பாகங்களை ஒவ்வொரு கோணத்திலும் 250க்கும் மேற்பட்ட அளவுகள் எடுக்கப்படுகின்றன. மெழுகு உருவ மாடல்கள் 180 விதவிதமான போட்டோ கேமரா லென்ஸ் மூலம் வெவ்வேறு ஒளிகளில் எடுக்கப்படுகின்றன. ஒருவருடைய மெழுகு உருவத்தை செய்ய சுமார் 4 மாதங்கள் ஆகும். சராசரியாக ஒரு உருவ மாடல் செய்ய 330 பவுண்டு களிமண் தேவைப்படுகிறதாம். ஒரு நபரை தத்ரூபமாக சிலை வடிப்பதற்கு ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மெழுகு தேவைப்படுகிறதாம். அசல் தலைமுடி, ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் மெழுகு உருவ தலைப்பகுதி செய்ய மட்டும் 100 பவுண்டு தேன் மெழுகு தேவைப்படுகிறதாம். ஒரு பவுண்டு தேன் மெழுகுக்கு 17 மில்லியன் மலர்களிலிருந்து தேனீக்கள் தேன் சேகரிக்க வேண்டுமாம். தலைப்பகுதி செய்ய மட்டும் 70०C மெழுகு உருகு நிலையில் இருக்க வேண்டுமாம். தலைப்பகுதி மாடல் மட்டும் செய்ய 6 வாரங்கள் தேவைப்படுகிறதாம். ஒரு மெழுகு உருவச்சிலை செய்ய சராசரி 1.5 லட்சம் டாலர்கள் தேவை என்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் 4 மெழுகு உருவச்சிலைகள் மேடம் டூசாட்ஸ் மியூசியத்தில் (சிங்கப்பூர், லண்டன், ஹாங்காங் மற்றும் பாங்காக்) வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலை ஒன்றின் அன்றைய மதிப்பு 1.5 கோடி ரூபாய்.

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

SCROLL FOR NEXT