கல்லறைகள் https://www.neermai.com
கலை / கலாச்சாரம்

சிற்றிலக்கிய அந்தஸ்து பெற்ற புகழ்மிக்க கல்லறை வாசகங்கள்!

கோவீ.ராஜேந்திரன்

வ்வொரு கல்லறையிலும் இறந்தோரின் பெயர் மற்றும் அவர்களது பிறப்பையும், இறப்பையும் குறிக்கும் தேதிகள் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் சில வாசகங்களும் வேறு பல கூற்றுகளும் பொறிக்கப்பட்டிருக்கும். அவை இன்று ‘புகழ் பெற்ற கல்லறை வாசகங்களாக’ விளங்குகின்றன.

இறந்தவர்கள் அனைவருக்குமே கல்லறை வாசகம் எழுதப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த ரோமன் நாட்டவரை, பல கிறித்தவ நாடுகள் பின்பற்றத் தொடங்கின. இங்கிலாந்து நாட்டில் எலிசபெத் மகாராணி ஆட்சிக் காலத்தில் கல்லறை வாசகங்களுக்குத் தனிப்பட்ட ஒரு மவுசு ஏற்பட்டது. அதற்கு இலக்கிய அந்தஸ்தும் கிடைத்தது. பல கவிஞர்கள் கல்லறை வாசகங்கள் எழுதியே அவற்றை சந்தைகளில் விற்று பணம் சம்பாதித்தனர். இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல கல்லறை வாசகங்கள் அழியாத புகழ் பெற்றது. இவ்வாசகங்கள் காலப்போக்கில் புத்தக வடிவம் கண்டு சிற்றிலக்கியங்களாகவும் மாறியது.

கல்லறை வாசகங்கள் எழுதி வருவதை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் எகிப்தியர்கள்தான். இந்தக் கல்லறை வாசகங்கள் இறைவனை வேண்டுவது போலவே இருக்கும். இதிலிருந்து மாறுபட்டு சொல் நயமிக்கதாக மாற்றியவர்கள் கிரேக்கர்கள்.

கிரேக்கர்கள் தங்களது நாட்டின் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே கல்லறை வாசகங்கள் எழுதி சிறப்பித்தார்கள். ஆனால், ரோமன் நாட்டினர் எந்தவொரு பாரபட்சமும் காட்டவில்லை. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்லறை வாசகங்கள் எழுதி வந்தார்கள். இலக்கிய ரசம் ததும்பும் கல்லறை வாசகங்கள் வர அவர்களே காரணம். உதாரணமாக, டார்சஸ் நாட்டின் மன்னர் டயோனிசியஸின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம்,

‘மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன் பெண் துணை இல்லாமலே. நன்றாக இருந்திருக்கும் என் தந்தையும் என் போல் வாழ்ந்திருந்தால்.’

கிரேக்க நாட்டின் பாபிலோனியாவில் உள்ள ஒரு கல்லறை வாசகம் இது, ‘உலகமே போதாது போதாதென்று அலைந்த மாமன்னனுக்கு இந்த ஆறடி நிலம் போதுமென்றாகி விட்டது.’

உலகமே கண்டு பயந்து, வியந்த சக்கரவர்த்தி அலெக்சாண்டரின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம்தான் இது. ‘மனிதனின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைப்பது இந்த இடம்தான் என்று சொல்லலாம்’ என்பது.

கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை:

‘சத்தமிட்டு நடக்காதீர்கள்
இங்கேதான் என் அம்மா
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!’

ஐந்தே ஆண்டுகள் எழுதினாலும் உலக இலக்கியத்தில் போற்றப்படும் கவிஞர்களுள் ஒருவர் ஜான் கீட்ஸ். 26 ஆண்டுகளே வாழ்ந்து எலும்புருக்கி நோயால் காலமான இவர் தனது கல்லறை மீது எழுதப்பட வேண்டிய வாசகம் என்று அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கவிதை வரிகள்.

‘இங்கே உறங்குபவன் பெயர்
நீர் மேல் எழுத்து.’

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் என்ன தெரியுமா?

‘உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.
நல்லவேளையாகப் பிணமானாள்.
இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்.’

உலகப் புகழ் பெற்ற சிற்பி ஜான் வேன்பிரஹ். அதிகமான சிலைகளை வடித்த இந்த சிற்பியின் கல்லறை மீது அவரின் நண்பர்கள் எழுதி வைத்த வேடிக்கையான வாசகம்,

‘மண்ணே! இவனைப் போட்டு நன்றாய் அழுத்து.
உனக்கு அதிக சுமை ஏற்றிவன் இவன் என்பதை மறந்து விடாதே.’

புகழ் பெற்ற எழுத்தாளர் பெர்னார்ட்ஷா தனக்கே உரித்தான பாணியில், ‘யார் இந்த சைத்தான்’ என்று தனது கல்லறை மீது எழுதி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கட்டுரை இலக்கியத்தில் பரவலாகப் பேசப்படுபவர் ஹில்லேர் பெல்லாக். அவர் தனது மனைவி இறந்த பிறகு அவர் எழுதிய கல்லறை வாசகம்,

‘என் மனைவி இங்கே உறங்குகிறாள், அவள் இங்கேயே இருக்கட்டும்
அவளுக்கும் நிம்மதி, எனக்கும் நிம்மதி.’

புகழ் பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான், தனது கல்லறையில் எழுதப்பட வேண்டிய வரிகளை, தனது நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

‘நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.’

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT