இலங்கை, யாழ்ப்பாணத்து மக்களின் உணவுப் பழக்கங்களைப் பார்த்தோமானால், பண்டைக் கால தமிழர் உணவு பழக்கங்களாகவே இருக்கும். அவர்களின் முதன்மை உணவு ஆசிய நாடுகளில் இருப்பதைப் போலவே அரிசி சோறுதான். நெல்லை புழுக்கி பெறப்படும் புழுங்கலரிசி சோற்றையே அவர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.
அதேபோல், யாழ்ப்பாணத்து சமையலில் நம்மூர் சாம்பார் அதிகம் இடம் பெறுவதில்லை. நம்மூரில் செய்யப்படும் புளியோதரை, தேங்காய் சாதம் போன்று அரிசியில் செய்யப்படும் கலந்த சாத வகைகளும் செய்வதில்லை. பொரியல், கடையல், துவையல், சம்பல், சொதி என உணவு வகைகள் நிறைய இருந்தாலும், ஒடியல் பிட்டு, ஒடியற்கூழ் என உணவில் அதிக வித்தியாசத்தை அவர்கள் காட்டுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் பிரபலமான உணவு பனங்கிழங்கு. இதனை நீளவாக்கில் கிழித்து வெயிலில் காய விட்டு உலர்த்துகிறார்கள். உலர்ந்த கிழங்கை ஒடியல் என்கிறார்கள். இது கெடாமல் நீண்ட காலம் இருக்கும். இதனை இடித்து மாவாக்கி பலவகையான உணவுகளை தயார் செய்கிறார்கள். அதில் பிரபலமானது ஒடியல் பிட்டு, ஒடியற்கூழ் ஆகியவை. மேலும், தேங்காயையும் அவர்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.
சம்பல் என்பது நம்ம ஊர் சட்னி போல்தான். இடிச்ச சம்பல் என்பது தேங்காய், உப்பு, புளி, வெங்காயம், மிளகாய் சேர்த்து அரைப்பது. மிளகாய் சேர்த்து செய்வது மிளகாய் சம்பல் என்றும், இஞ்சி சேர்க்கும்போது அது இஞ்சி சம்பல் என்றும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாண மக்களின் தோசை சற்று மாறுபட்ட சுவையுடன் இருக்கும். தோசை மாவிற்கு சிறிது மஞ்சள் சேர்த்து அரைப்பதும், கடுகு, மிளகாய் தாளித்தும் செய்கிறார்கள். இவர்கள் செய்யும் சட்னி நம்மூர் போல் நீர் தன்மை கொண்டு நெகிழ்ந்து இருப்பதில்லை. காய்ந்த சிவப்பு மிளகாயை பொரித்து உப்பு, புளி, வெங்காயம், தேங்காய் சேர்த்து இடித்து செய்கிறார்கள். இது நம்மூர் சட்னி போல் இல்லாமல் வறண்டு உதிர்கின்ற தன்மை கொண்டதாக இருக்கும்.
யாழ்ப்பாணத்து சிப்பி பலகாரம் (அரிசி மாவு, உளுத்த மாவு, எள்ளு, தேங்காய் பால், சர்க்கரை கொண்டு செய்யப்படுவது), சீனி அரியதரம் ஆகிய இனிப்பு வகைகள் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் சிறப்பு உணவாகும்.