சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் கொங்மிங் விளக்கு (Kongming lantern) எனும் ஒரு வகை விளக்கு பறக்கும் விளக்கு (Sky lantern) என்று சொல்லப்படுகிறது. உலகில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் பலூன் என்றும் இதனைக் கூறலாம். இவை வான மெழுகுவர்த்திகள் என்றும், நெருப்புப் பலூன்கள் என்றும், வான விளக்குகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சீனாவில் இவ்வகை விளக்குகள் சீனாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக இருக்கின்றன.
ஜ்ஹு கே லியாங் எனும் சீனப்பேரரசின் படைத்தளபதியால் கொங் மிங் விளக்குகள் எனப்படும் பறக்கும் விளக்குகள் கி. பி. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விளக்குகள் போர்க் காலங்களில் தகவல்கள் பரிமாற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. சீனப் படைவீரர்கள் ஆபத்துக் காலங்களில் இவ்விளக்குகளைப் பறக்கவிடுவதன் மூலம் பல்வேறு செய்திகளை பறிமாறியுள்ளனர். ஒவ்வொரு வகையான செய்திக்கும் தனித்தனியே நிறத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இவ்விளக்குகள் எண்ணெய் காகிதம் என்று அழைக்கப்படும் மிக மெல்லிய காகிதத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் மூங்கில் வளையம், காயவைத்த தேங்காய் பருக்கு போன்றவை காங் மிங் விளக்குகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் பருக்கு அவ்விளக்கு பறப்பதற்கான எரிபொருளாகப் பயன்படுகிறது. சில நேரங்களில் தேங்காய் பருக்குவிற்கு பதிலாக எரியும் தன்மையுடைய வேறு சில பொருட்களையும் பயன்படுத்துவார்கள்.
சீனா, தைவான் மற்றும் தாய்லாந்தில் வான விளக்குகள் பாரம்பரியமாக மூங்கில் சட்டத்தில் எண்ணெய் தடவிய அரிசிக் காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. சூடான காற்றின் ஆதாரம், ஒரு சிறிய மெழுகுவர்த்தி அல்லது மெழுகு எரியக்கூடிய பொருளால் ஆன எரிபொருள் கலமாக இருக்கின்றன. பிரேசில் மற்றும் மெக்சிகோவில், வான விளக்குகள் பாரம்பரியமாக மெல்லிய ஒளி ஊடுருவக்கூடிய, 'பட்டுக்காகிதம்' என்று அழைக்கப்படும் காகிதத்தின் பல திட்டுகளால் செய்யப்பட்டன.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மரபு வழியிலான பல்வேறு விழாக்களில் இவ்விளக்குகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் இவ்விளக்குகள் பயன்பாட்டால் பெரும் தீ விபத்துகள் நிகழ்ந்து, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. எனவே, இவ்விளக்குகள் பயன்படுத்துவதற்குப் பல இடங்களிலும் தடை விதிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு முதல் வியட்நாம் முழுவதும் வான் விளக்குகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் வெளியிடுதல் தடை செய்யப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இவ்விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளனர். பரவலான நெருப்பின் காரணமாக, தற்போது ஆசியாவின் பல பகுதிகளில் வான விளக்குகள் பறக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இவ்வகை விளக்குகளால் ஏற்படும் நெருப்புகளின் பாதிப்புகளால், மனிதர்களுக்கு மட்டுமில்லாது, காடுகளிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் பெரும் ஆபத்தானதாக இருக்கிறது என்பதால் இவ்வகை விளக்குகள் தடை செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான்.