இமயமலையில் ஒரு பகுதியில் உள்ள ஒரு ஏரியில் எக்கச்சக்க எலும்புக்கூடுகள் சிதறிக்கிடக்கின்றன. இங்கிருக்கும் எலும்புக்கூடுகள் எப்படி இங்கு வந்தன என்று பார்ப்போமா??
உத்தரகண்ட் மாநிலத்தில் இந்தியாவின் உயரமான மலை தொடர்களில் அமைந்திருக்கும் ஒரு ஏரிதான் ரூப்குந்த் ஏரி. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,029 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஏரியை 1942ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் ஆஃபிஸர் ரோந்து பணியின்போது கண்டுபிடித்தார். அப்போதுதான் இந்த பகுதிகளிலும் பனிக்கட்டிகளுக்கும் அடியில் நிறைய எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. காலநிலையையும் தட்பவெப்ப நிலையையும் பொறுத்தே அங்குள்ள ஏரிகள் சுருங்குகிறது விரிவடைகிறது.
பனி உருகும்போதே அங்கு மறைந்திருக்கும் அனைத்தும் வெளியே தெரிகிறது. அப்படி பனி உருகிய பின்னர் வெளிவந்த மர்மம்தான் இந்த ஏழும்புக்கூடுகள்.
பொதுவாக உடலை பதப்படுத்தி வைக்க பனியையே பயன்படுத்துவார்கள். அப்போது பனி பிரதேசங்களிலேயே அங்கேயே இறந்தவர்களின் நிலை?? ஆம், சில நேரங்களில் தசையோடு அவ்வெலும்புகள் இருப்பதையும் பார்க்க முடியும். இதுவரை 800 எலும்புக்கூடுகள் கண்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
யார் இவர்கள்? மலையேறுபவர்களாக இருந்தாலும் கூட அத்தனை பேர் எப்படி அந்த ஏரி இருக்கும் பகுதியிலேயே உயிரிழந்திருப்பார்கள்??
இந்த ஏலும்புக்கூடுகளின் எச்சங்களை இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் 16 அமைப்புகளைச் சேர்ந்த 28 பேர் ஐந்து ஆண்டு கால நீண்ட ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வின் மூலம் இங்கு இறந்தவர்கள் அனைவரும் ஒரே குழுவையோ அல்லது காலக்கட்டங்களையோ சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்தது.
1841-ம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமிக்க நினைத்த இந்திய படையினர் தோற்கடிக்கப்பட்டார்கள். 70-க்கு மேற்பட்டவர்கள் இமய மலையிலேயே தங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டானது. அவர்கள் இமய மலையிலேயே இறந்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த இடம் ஒரு காலத்தில் பெருந்தொற்றினால் இறந்தவர்களை புதைக்கும் இடமாக இருந்திருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்.
ஆய்வறிக்கையின்மூலம் இப்பகுதியில் இறந்தவர்களின் உயரம் சராசரி மனிதர்களை விட அதிகமாக இருந்திருப்பதாக தெரியவந்தது. அதைபோல் அனைவரும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பெண்கள் மற்றும் ஆண்கள் என கலந்திருக்கிறார்கள் என்றும் (சிறுவர்கள் இல்லை), அவர்கள் சாகும் வரை நன்றாகவே இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கார்பன் டேட்டிங் செய்துப் பார்த்ததில் இங்கிருக்கும் சில எலும்புக்கூடுகள் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்களுடையது என்று தெரியவந்தது.
பலதரப்பட்ட மரபணுக்கள் கலந்திருப்பதாகவும், தெற்காசியாவில் இன்று வாழும் ஓர் இன மக்களின் மரபணுவை ஒத்து இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல இந்த ஏரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு இனத்தின் மரபணு, இன்றைய தேதியில் ஐரோப்பாவில் குறிப்பாக க்ரெடே என்கிற க்ரீக் தீவுகளில் இருப்பவர்களின் மரபணுவை ஒத்து இருக்கிறதாம்.
மனிதர்களின் எச்சங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, ஆயுதங்களோ அல்லது மக்கள் வாழ்ந்ததற்கான எந்த தடயங்களோ கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.