குஜராத் மாநிலம், வதோராவின் மையப் பகுதியில் கம்பீரமாக அமைந்துள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைதான் உலகின் மிகப்பெரிய தனிக் குடியிருப்பு என்ற பெருமையை கொண்டுள்ள ஒரு கட்டிடக்கலை அதிசயம் ஆகும். இது 1880களில் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாடால் கட்டப்பட்ட இல்லம் மட்டுமல்ல, பரோடாவை ஆண்ட கெயிக்வாட் வம்சத்தின் கம்பீரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இது சான்றாகத் திகழ்கிறது.
இந்தோ - சாரசெனிக் மறுமலர்ச்சி கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட லட்சுமி விலாஸ் அரண்மனை இந்திய மற்றும் ஐரோப்பிய கலை பாணிகளின் அதிசய கலவையை கொண்டுள்ளது. சிக்கலான செதுக்கல்களாலும் பல வண்ண மர்மத்தாலும் அலங்கரிக்கப்பட்ட அதன் கம்பீரமான கட்டமைப்பு அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி ஆகும்.
இந்த அரண்மனையில் 170க்கும் மேற்பட்ட அறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு அறையும் அற்புதமான கலைப் பொக்கிஷங்களாலும், தளவாடங்களாலும் நிறைந்துள்ளன. கெயிக்வாட் வம்சத்தினர் இன்றும் இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும், அவர்கள் தங்களின் முன்னோர்களின் பாரம்பரியத்தையும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர்.
ஐநூறு ஏக்கர் பரப்பளவில் கவனமாகப் பராமரிக்கப்படும் தோட்டங்கள், மலர்ச் சோலைகள் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானத்தையும் இந்த அரண்மனை கொண்டுள்ளது. ‘ஹவுசிங் டாட் காம்’ன் அறிக்கைபடி லட்சுமி விலாஸ் அரண்மனை மூன்று கோடியே நான்கு லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது. 15,000 கோடிக்கு உலகின் விலையுயர்ந்த குடியிருப்பைக் கொண்டுள்ள முகேஷ் அம்பானியின் 48 ஆயிரத்து 780 அடி சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்ட குடியிருப்பை விட இது நான்கு மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது.
1990களில் லட்சுமி விலாஸ் அரண்மணியின் கட்டுமான செலவு சுமார் 27,00,000 ஆகும். கெய்க்வாட் வம்சத்தின் அரச தலைமுறையாக தற்போது ரதிகராஜே கெய்க்வாட் இந்த அரண்மனையில் வசித்து வருகிறார். ஜூலை 19, 1978ல் பிறந்த இவர், வாசிப்பதிலும் எழுதுவதிலும் விருப்பமுள்ளவர். அத்துடன் இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்று, செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.