Isaiyaal Vasamaaga Ithayamundo
Isaiyaal Vasamaaga Ithayamundo https://www.vchri.ca/stories
கலை / கலாச்சாரம்

இசையால் வசமாகா இதயமுண்டோ?

பாரதி

பாடல்களே மனித உணர்வுகளைத் தூண்டும் ஒரு ஆயுதம்! இனி. இதன் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்த தெரிந்துக்கொள்ளுங்கள்! இப்போதைய இளைஞர்கள் தனியாக இருந்தாலும் தனிமையை உணராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் பாடல்கள்தான். அதேபோல், எப்போதும் ஹெட் செட் போட்டிருப்பதற்கும் ஸ்பீக்கரில் அதிகமாக ஒலி வைத்து பாடல்கள் கேட்பதற்கும் திட்டாத பெற்றோர்களும் இல்லை, திட்டு வாங்காத இளைஞர்களும் இல்லை.

இந்தப் பாடல்களுக்கு உயிர் உள்ளதா? என்று கேட்டால் நிச்சயம் ‘ஆம்’ என்பதுதான் பதில். ஒருவருடைய உணர்வைக் கிண்டிப்பார்க்கும் சக்தி பாடல்களுக்கே உள்ளது. ஒருவனின் காதலை வளர்ப்பதும் பாடல், அன்புக்கு விளக்கம் கொடுக்காமல் நமக்குள் அதை வளர்த்துவிடுவதும் பாடல், காயத்தை சரி செய்வதும் பாடல், அதேபோல் நம்மை காயமாக்குவதும் பாடல்தான். ஏதாவது நிகழ்ச்சி வந்தாலோ அல்லது திருவிழாக்கள் வந்தாலோ ஏன் அந்த ஊர் முழுவதும் ஸ்பீக்கர் வைக்கிறார்கள் என்று யோசித்ததுண்டா? திருவிழாக்களில் பக்தி பாடல்கள் வைத்து ஊரில் உள்ள அனைத்து இளைஞர்களையும், பெரியவர்களையும், குழந்தைகளையும் பக்தி மயமாக்கத்தான் இது. அதேபோல், நிகழ்ச்சிகளில் எந்த சோகமும் இல்லாமல் உற்சாகமாக இருக்கத்தான் ஸ்பீக்கர் வைப்பார்கள். இப்போது சிலர் ஸ்பீக்கர் வைப்பதில்லை என்றாலும், ட்ரெண்டிற்கேற்ப திருமணத்தின்போது பாடலுடன் நடனமும் சேர்ந்து நிகழ்வுகளை உற்சாகமாக ஆக்குகிறது.

மொழிக்கு முன்னர் இசை பிறந்தது என்று கூறுவார்கள். அது இயற்கையின் இசையே. நீங்கள் எப்போதும் தனிமையை விரும்பும்போது அமைதியான இடத்திற்கு செல்வீர்கள். அமைதியான இடமென்றால் சத்தம் இல்லாதா இடமா? அதுதான் இல்லை. நீங்கள் எங்கே போனாலும் இயற்கையின் சத்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். உண்மையில் நீங்கள் அந்த சத்ததைத்தான் ரசிக்கிறீர்கள். அது இயற்கையின் சத்தம் என்று கூறுவதைவிட இயற்கையின் இசை என்று கூறலாம். ஏன்! இன்னும் சொல்லப்போனால் காது கேட்காதவர்கள் கூட இயற்கையின் இசையை தொடுதல் மூலம் உணர முடியும். இப்படி பிரபஞ்சம் முழுவதும் இசை நிரம்பியுள்ளது. நாமும் அதனை சலிக்காமல் ரசித்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

இப்போதுள்ள இளைஞர்கள் பழைய பாடல்கள், குத்துப் பாடல்கள், சோகப் பாடல்கள், பிற நாட்டு இசை, வரிகள் இல்லாத இசை என இசையை எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்தையும் கேட்கிறார்கள். இசைக்கு வயது வரம்பில் பிரியர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் கூற முடியாது. அனைவருமே ‘இசைப் பிரியர்கள்’ அவ்வளவுத்தான்.

உணர்வுக்கும் பாடலுக்கும் எப்படி தொடர்புப்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

உங்களை விட்டு ஒருவர் பிரியும்போதும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை ஏமாற்றியபோதும் நீங்கள் என்ன பாடல்கள் கேட்பீர்கள்? பொதுவாக அனைவரும் சோக வரிகளுடன் இருக்கும் சோகப் பாடல்களைத்தான் கேட்பீர்கள். அதற்கு பெயர் கூட இப்போது ‘Situation song.’ பெரும்பாலானோர் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் பாடல்கள் கேட்பார்கள். ஆனால், அப்படி கேட்கவே கூடாது. சோகமாக இருக்கும்போது சோகப் பாடல்கள் கேட்டால், அந்த வரிகள் மனதிற்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஆனால் உண்மையில் அது ஒரு போதை. நம்மை எப்போதும் அதே சோக நிலையில் வைத்துக்கொள்ளும் ஒரு கருவி. ஆனால், அந்த சமயங்களில் ஒரு ஊக்கப் பாடல்களோ அல்லது குத்துப் பாடல்களோ கேட்டால், நமது மனது கொஞ்சம் கொஞ்சமாக உற்சாக நிலைக்கு மாறிவிடும். ஆகையால், அந்த சோகமும் மறைந்துவிடும். அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் அடுத்த வேலைகளை செய்வதற்கு இதுதான் கருவி.

இனி, உற்சாகமாக இருக்கும்போது மெலடி பாடல்களும் சோகமாக இருக்கும்போது குத்துப் பாடல்களும் மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் ஊக்கப் பாடல்களையும் கேட்டுப் பழகிக்கொள்ளுங்கள். பாடல்களே உங்கள் உணர்வுகளைத் தூண்டும் ஒரு ஆயுதம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT