child image Image credit- explore topics
கலை / கலாச்சாரம்

‘காத்தவராயன் கொழுக்கட்டை’ – இப்படி ஒரு நிகழ்வு இருப்பது தெரியுமா?

மும்பை மீனலதா

ர்ப்பக்கம் சென்றிருந்த சமயம், பள்ளி சிநேகிதியின் பேரக் குழந்தையைப் பார்க்கச் சென்றேன். அவளது வீடு பரபரவென செயல்பட்டுக் கொண்டு இருந்தது. என்னை வரவேற்று அமரச் செய்தாள்.

வீடு நன்கு சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. புது முறமொன்றில், புதுத் துணி ஒன்றை விரித்து அதில் மணி – மணியாக நிறைய கொழுக்கட்டைகள் மற்றும் காசுகள் போட்டு ரெடியாக வைக்கப்பட்டிருந்தது. 4 -5 சிறு குழந்தைகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். பெரிய வி.ஐ.பி.யைக் காண எதிர்பார்த்திருந்தது போல இருந்தது.

சிநேகிதியின் பேரக்குழந்தை தவழ்ந்து வந்து, படியருகே நெருங்கியதும், மெதுவாக அப் படியைத் தாண்டுகையில், சிநேகிதியும், அவளது மகளும், முறத்துக் கொழுக்கட்டையை, குழந்தை தலையில் பூவைப் போல ஸ்லோ – மோஷனில் கொட்டியதும், குழந்தை கைகொட்டி சிரித்தது. மற்றைய குழந்தைகளும் கைகொட்டியதோடு, கீழேயிருந்து அக் கொழுக்கட்டைகளை எடுத்துச் சாப்பிட்டன. பேரக் குழந்தையும் தவழ்ந்து சென்று கையில் கொழுக்கட்டையை எடுத்துச் சாப்பிட்டது.

சுவாரசியமான இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நான் அவளிடம் விபரம் கேட்டேன். 7 – 8 கொழுக்கட்டையை தட்டில் வைத்து என்னிடம் அளித்து சாப்பிடச் சொன்னாள். ருசியாக இருந்தது.

அவள் கூறிய விபரம்:

குழந்தைகள் பத்து அல்லது பதினோராவது மாதமாகையில், தத்தக்க – பித்தக்காவென நடக்க ஆரம்பித்து கீழே தொப்பென விழுவது வழக்கம். கிராமப்புற வீடுகளிலுள்ள படிகள் சற்றே உயரமாக இருக்கும். அதுவும் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போவதற்கு படி உண்டு. இந்தப் படியைத் தாண்ட குழந்தை முயற்சிக்கும். முடியாமல் கீழே விழுந்து அழும். பிறகு மீண்டும் தாண்ட முற்படும். காலை லேசாக படி மீது வைத்தபிறகு முடியாமல் கீழே இறக்கும்.

எப்படியும் இரு நாட்களுக்குள் குழந்தை படியைத் தாண்டிவிடும் என்று வீட்டுப் பெரியவர்கள் யூகித்துவிடுவார்கள். கொழுக்கட்டை தயார் செய்ய ஏற்பாடு பண்ணி விடுவார்கள். மூன்றாம் நாள் முதன்முதலாக படி தாண்டும். குழந்தைக்காக ‘காத்தவராயன் கொழுக்கட்டை’யை செய்து ரெடியாக வைக்க, குழந்தையும் படியினைத் தாண்ட, மேலே கூறிய நிகழ்வு நடைபெறும்.

‘காத்தவராயன்’ எனும் தேவதை படிகளில் வீற்றிருப்பதாக கூறுவது வழக்கம். குழந்தை படியைத் தாண்டும்போது, தன் காலில் பட்டுக்கொள்ளாமல், காத்து, ரட்சிக்க தேவதையை வேண்டி கொழுக்கட்டை செய்வதால் இது காத்தவராயன் கொழுக்கட்டை என அழைக்கப்படுகிறது. மிகவும் சுவாரசியமான நிகழ்வாக இருந்தது.

கொழுக்கட்டை

காத்தவராயன் கொழுக்கட்டை

தேவை: ஈரமான பச்சரிசி மாவு – 2 தம்ளர், பொடி செய்த வெல்லம் – 1 தம்ளர், ஏலப்பொடி – 1½ டீஸ்பூன், பொடியாக கீறிய தேங்காய் – 1 கிண்ணம் பொடி உப்பு – ¼ சிட்டிகை, தண்ணீர் – தேவையானது.

செய்முறை: முதலில் அடிக்கனமான வாணலியை அடுப்பின் மீது வைத்து தேவையான தண்ணீரை விடவும். நன்கு சூடானதும், கீறிய தேங்காய், பொடித்த வெல்லம், உப்பு மற்றும் ஏலப்பொடியைப் போட்டு கொதிக்கவிடவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து, அரிசி மாவை மெதுவாகப் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். ஆறிய பிறகு மாவை சிறிய சீடை அளவில் மணிமணியாக கொழுக்கட்டை மாதிரி உருட்டி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

லேசான தித்திப்புடன், தேங்காய்ப் பல் சுவைக்க, ஏலம் மணக்க காத்தவராயன் கொழுக்கட்டையைச் சாப்பிடுகையில் செம டேஸ்ட்டாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT