கத்புட்லி பொம்மலாட்டம் 
கலை / கலாச்சாரம்

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

ஆர்.வி.பதி

சில வருடங்களுக்கு முன்பு ஜெய்ப்பூருக்கு ஐந்து நாட்கள் பயணமாகச் சென்றிருந்தோம். அப்போது அங்குள்ள கோட்டைகளில் இசை, பாட்டு, பொம்மலாட்டம் என பல கலைகளைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோட்டைகளில் ஆங்காங்கே அமர்ந்து இசைக்கலைஞர்கள் ஒரு கம்பி வாத்தியத்தை வைத்து இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு இசைக்கலைஞரை சந்தித்தோம். அவருடைய வாசிப்பு எங்களை பிரமிக்க வைத்தது. அவரிடம் கேட்டபோது அந்த கருவியின் பெயர் ‘ராமன்ஹதா’ என்றார்.

கோட்டைகளில் சிறிய அளவில் ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கையில் மரத்தினால் ஆன வண்ணமயமான பொம்மைகளை வைத்து பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கண்டபோது வியப்பாக இருந்தது. நாங்கள் ஒரு பொம்மலாட்டக்காரரை அணுகி, ‘உங்கள் பொம்மலாட்டத்தைப் பார்க்க விரும்புகிறோம். எப்போது நிகழ்ச்சி தொடங்கும்’ என்று கேட்டதுதான் தாமதம். உடனே அவர் அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி விட்டார்.

கத்புட்லி பொம்மலாட்டம்

சுமார் ஐந்து அடி உயர மற்றும் பத்து அடி அகல அளவில் மரச்சட்டத்தில் ஆன ஒரு பெட்டி போன்ற அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு கம்பளியை விரித்தார். முன்புறத்தைத் தவிர்த்து மரச்சட்டத்தைச் சுற்றிலும் வண்ணமயமான ஜரிகைத் துணிகளைக் கட்டினார். மேற்புறம் திறந்திருந்தது. எதிரில் இருந்து பார்ப்பதற்கு ஒரு நாடக மேடை போன்று தோற்றமளித்தது.

ஒருவர் பாட, மற்றொருவர் மேளத்தை இசைக்க பொம்மலாட்டம் ஜோராகத் தொடங்கியது. பின்பக்கமாக நின்று கொண்டு நூல்களால் இணைக்கப்பட்டிருந்த பொம்மைகளைத் தனது கைகளால் மின்னல் வேகத்தில் இயக்கத் தொடங்கினார். உண்மையில் ஒரு பெண் நடனமாடினால் எப்படி இருக்குமோ அத்தகைய பாவங்களோடு பெண் பொம்மையை இயக்கி நடனமாட வைத்தார். எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பொம்மலாட்டத்தைப் பார்த்து பரவசமானோம்.

கத்புட்லி பொம்மலாட்டம்

மொத்தம் ஆறு சிறிய பொம்மைகளை இயக்கி ஒரு பாடலைப் பாடி மூன்றே நிமிடங்களில் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். மறக்க இயலாத அவ்வளவு அற்புதமான நிகழ்ச்சியாக அமைந்தது அது. ஒரு சிறிய தொகையைக் கொடுத்ததும் மிகவும் மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டார். இந்த பொம்மலாட்டத்தை அவர்கள், ‘கத்புட்லி’ (Kathputli) என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுவோம்.

ஜெய்ப்பூர் தெரு இசைக்கலைஞர்

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த அற்புதமான பொம்மலாட்டக் கலையானது ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத் என்றால் மரம். புட்லி என்றால் பொம்மை. மரம் மற்றும் வண்ணமயமான துணிகளை வைத்து இத்தகைய பொம்மைகளை உருவாக்குகிறார்கள். இந்த பொம்மைகள் சுமார் மூன்று அடி உயரமே உள்ளன. மரத்தினால் ஆன இத்தகைய பொம்மைகளைப் பிரதான பாத்திரங்களாக வைத்து நடத்தப்படும் இந்த பொம்மலாட்டக் கலையே ‘கத்புட்லி’ என்று அழைக்கப்படுகிறது.

கத்புட்லி பொம்மலாட்டமானது ராஜஸ்தானின் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறது. ராஜஸ்தான் மன்னர்கள் கத்புட்லி கலையை பெரிதும் ஊக்குவித்துள்ளார்கள். முற்காலத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் முதலான புராணக் கதைகளை அதிக அளவில் கத்புட்லி பொம்மைகளைக் கொண்டு நடத்தி வந்தார்கள். ஆனால், கால ஓட்டத்தில் தற்போது குறைந்த அளவு பொம்மைகளை வைத்து குறுகிய நேரத்தில் பொம்மலாட்டத்தை நடத்துகிறார்கள். ராஜஸ்தானி நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணக் கதைகளை பொம்மலாட்டமாக நடத்திக் காட்டுகிறார்கள். தற்காலத்தில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காகவும் கத்புட்லி பொம்மலாட்டக்கலை மிகவும் பயன்படுகிறது.

கட்புட்லி பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகளின் முகபாவங்களும், வண்ணங்களும், உடைகளும் தனித்துவமான அழகுடன் காட்சியளிக்கின்றன. ஜெய்ப்பூர் மட்டுமின்றி, ராஜஸ்தான் முழுவதிலும் கத்புட்லி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வாழ்வில் அவசியம் கண்டு ரசிக்க வேண்டிய கலை நிகழ்ச்சிகளில் ராஜஸ்தான் மாநிலத்தின் கட்புட்லியும் ஒன்று.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT