இந்திய நாடாளுமன்றம் 
கலை / கலாச்சாரம்

மத்திய அமைச்சரவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பொ.பாலாஜிகணேஷ்

ந்தியாவில் தேர்தல் முடிந்து எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்துள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் என ஒரு பெரிய கட்டமைப்பு நம் நாட்டை ஆளப்போகிறது. மத்திய அமைச்சரவை மற்றும் அதன் செயல்பாடுகள் பிரதமருக்கு அரசியல் சாசனம் வழங்கும் அதிகாரம் இவற்றைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை, மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அமைச்சரவையின் தலைவராக பிரதமர் விளங்குவார். மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு), இணை அமைச்சர்கள் (MoS) என்று 3 பிரிவுகள் உள்ளன. இவை இல்லாமல், துணை அமைச்சர்கள் என்று சிலரை நியமிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.

கேபினட்டில் முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் மூத்தவர்களாகவும், பல்வேறு துறைகளில் அனுபவமும் வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் கேபினட் அமைச்சர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைத் தங்கள் வசம் வைத்திருப்பார்கள். அவர்கள் ஒன்று அல்லது இரண்டு இணை அமைச்சர்களை உதவிக்கு அமர்த்திக் கொள்வார்கள்.

குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த பிரதமர் நினைத்தால், அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவதும் உண்டு. கேபினட் அமைச்சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்களில் பங்கேற்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள். தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்கள் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்.

அமைச்சரவை

கேபினட் அமைச்சர், இணை அமைச்சர் என்ன வித்தியாசம்?

மத்திய அமைச்சரவையில் கேபினட், இணை, துணை என 3 வித அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த 3 அமைச்சர்களும் அமைச்சரவைக்கு தலைவர் என்ற முறையில் பிரதமருக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர். மூத்த தலைவர்களும், அனுபவசாலிகளுமே கேபினட் அமைச்சராக நியமிக்கப்படுவர். அவர்களின் ஆலோசனைகளை பிரதமர் கேட்பதுண்டு. கேபினட் அமைச்சர் எண்ணிக்கை 20 வரையும், மற்ற அமைச்சர் எண்ணிக்கை 70 வரையும் இருக்கலாம்.

பிரதமருக்கு அரசியலமைப்பு வழங்கும் அதிகாரங்கள் என்ன?

மக்களாட்சி நாட்டில் பிரதமரே முக்கிய முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவார். அவருக்கென சில தனி அதிகாரம் அரசியலமைப்பு சட்டம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன? மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அதிகாரம், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யும் அதிகாரம், அமைச்சரவை குழுக்களை நியமிக்கும் அதிகாரம், சர்வதேச மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக பங்கேற்கும் அதிகாரம்.

மத்திய அமைச்சர்களுக்கு இருக்கும் அதிகாரம்!

மத்திய அரசின் கொள்கைகளை மத்திய அமைச்சர்களே வகுப்பார்கள். தனக்கு ஒதுக்கப்படும் இலாகா தொடர்பான முடிவை எடுப்பது, அதை செயல்படுத்துவது ஆகிய அதிகாரமும் அவர்களுக்கே உண்டு. மரண தண்டனை கைதி, சட்டம் ஒழுங்கு விவகாரம் போன்ற முக்கிய முடிவுகள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அளிப்பார்கள். மத்திய அரசின் சட்டங்கள், முடிவுகளை மத்திய அமைச்சர்களே செயல்படுத்துவார்கள்.

பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவோரே மத்திய அமைச்சர்களாக கருதப்படுகின்றனர். பிரதமரின் பரிந்துரையை ஏற்று, அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைப்பார். பிரதமர் விரும்பும் வரை மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் நீடிக்க முடியும். பிரதமர் தலைமையில் செயல்பட்டாலும், மத்திய அமைச்சர்களாக இருப்போருக்கும் தனி அதிகாரம், கடமைகள் உள்ளன.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT