Silappadikaram Kovalan commentary Image credit: Artist Maruti
கலை / கலாச்சாரம்

மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே…!

இந்திராணி தங்கவேல்

சிலப்பதிகாரம் என்னும் நூலின் பெருமை என்று கூறினால் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் சிறப்புற எடுத்துக் கூறும் அழகு படைத்த காவியம் என்று சொல்லலாம். அதில் கோவலன் கண்ணகியின் அழகை வர்ணிக்கும்போது கூறிய சில வரிகள் நாம் படிக்கும் காலத்திலேயே அனைவரின் உள்ளத்திலும் ஆழப் பதிந்தவை. அதை இப்பொழுதும் எடுத்துப் பார்த்தால் அதன் இன்பத்தை நுகரலாம். இலக்கியத்துக்கு அழகு சேர்ப்பது வர்ணனைகள்தான். கோவலன் என்றால் மாதவியோடு சேர்ந்திருந்த காலங்களைத்தான் அதிகமாக நினைத்துப் பார்ப்போம். ஆனால், அவன் கண்ணகியை எப்படி போற்றினான் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

கண்ணகிக்கு திருமணம் முடிந்து நிறைய மலர்களை சூடி இருந்தபொழுது அதை பார்த்த கோவலன் நறுமண மலர்வினை சூடிய கோதையே ! உன் நலத்தை பாராட்டுபவரான உன்னுடைய ஏவன் மகளிர் குற்றமற்ற உன் இயற்கை அழகு இருக்கும்போது பிற பல அணிகளையும் உனக்கு  அணிவித்து இருக்கின்றனரே! அவ்வாறு அணிவதால் நீ பெற்ற பேரழகுதான் எத்தனையோ!  பல்வகை உடைய உன் கருங்கூந்தலில் சிற்சில மலர்கள் சூட்டினால் போதாதோ? இதழ் விரிந்த மாலையையும் சூட்டி இருக்கின்றார்களே! அவர்களுக்கு என்னதான் வந்ததோ! நாற்றமுள்ள நல்ல அகிற்புகையை கூந்தலுக்கு ஊட்டுதல் சரிதான்! ஆனால், மான்மதச்சாந்தமும் ஊட்டி  இருக்கின்றனரே! அஃது ஏனோ? அழகிய உன் நெஞ்ச தடங்களின் மேல் ஒற்றை வட முத்து மாலையும் அணிவித்திருக்கின்றனரே! மதி போன்ற உன் முகத்திலே முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பி இருக்கின்றனவே! சிறிதான உன் இடையோ ஒசிந்து விடுவது போல் வாடுகின்றதே! அதுகண்டும், இங்கு இவற்றையெல்லாம் இவ்வளவு (பிற அணிகள்) உன் மேனியின்மேல் அணிந்து வைத்திருக்கிறார்களே, அவர்கள் என்ன பித்து பிடித்தவர்களா?

‘மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை’

குற்றமற்ற பசும்பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்துப் போன்றவளே! குற்றமற்ற விரை போன்ற மனம் உடையாய்! கரும்பினும் இனிய சுவை உடையவளே! தேனினும் இனிமை உடையாளே! பெறுதற்கு அருமையான பாவையே! என் அரிய உயிருக்கு ஓர் அமுதம் போன்றவளே! பெருங்குடி வானிகனின் பெருமை பொருந்திய இளமகளே! நின்னை, ‘மலை இடையிலே பிறவாத மணியே' என்று சொல்வேனோ! 'அலை இடையே பிறவாத அமிழ்தமே என்று அழைப்பேனோ !'

'யாழிடையே பிறவாத இசையே!' என்று இயம்புவேனோ? தாழ்ந்த கருங் கூந்தலினை உடைய தையலே! நின்னை யான் எவ்வாறு சொல்லித்தான் பாராட்டுவேனோ?

இப்படி பலப் பல கூறி பாராட்டியவனாக பூங்கொத்துக்களுடைய கோதை போன்ற கண்ணகியுடன் மகிழ்வுடன் இல்லறம் பேணியும் வந்தான். கோவலனின் தாயார் இருவரையும் தனி குடித்தனம் வைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார் என்கிறது இக்கதை. ஆக, அப்பொழுதே தனிக் குடித்தனம் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இப்படியே சில ஆண்டுகள்  காணத்தகும் சிறப்பினை உடைய கண்ணகியுடனான இல்லற வாழ்வு கழிந்தது என்பதை இதில் அறிய முடிகிறது.

ஒரு காப்பியத்தையோ காவியத்தையோ இலக்கியத்தையோ படிக்கும்பொழுது சில வரிகள் மாத்திரம் மனதில் நிலைபெற்று நின்றுவிடும். அப்படி நின்ற வரிகள்தான் மேலே கூறிய அந்த இலக்கிய வரிகள். அதைப் படிக்குந்தோறும் எல்லோர் மனதிலும் நிலைப்பெற்று நிற்கும் என்பதுடன் மேலும் மேலும் அந்தக் காப்பியத்தை  முழுமையாகப் படிக்கத் தூண்டுவனாக அமைவது உறுதி.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT