சிலம்பாட்டம் https://www.indiamart.com
கலை / கலாச்சாரம்

தற்காப்புக்கலை விளையாட்டாகிய சிலம்பாட்டமும் அவற்றின் பயன்களும்!

கலைமதி சிவகுரு

க்கள் தங்களை சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது. இது தமிழர்களின் வீர விளையாட்டு. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். தனது கைகளில் எப்போதும் இருக்கக்கூடிய சிறிய  ஆயுதங்களான கம்பு, சிறுகத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையை பயன்படுத்தினர்.

அடிப்படை விளையாட்டு: சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினை தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தை கற்றுக்கொள்ள குறைந்தது ஆறு மாதம் தேவை. இதை ஆடுவதற்கு குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்ட போட்டிகளில் விளையாடுவர்.

சிலம்பின் முக்கிய உட்கூறுகள்: ஒருவர் அடிப்படையில் துவங்கி படிப்படியாக இவற்றை கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளை தம்முள் அடையலாம்.

1. மெய்ப்பாடம்: மெய்ப்பாடம் என்பது சிலம்பக்கலையின் முதலாவது பயிற்சி ஆகும். உடல் வலிமையை பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளை செய்து உடல் தகுதியை அடைவதாகும்.

2. உடற்கட்டுப்பாடம்: குறிப்பிடத்தக்க வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலில் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப்பாடமாகும்.

3. மூச்சுப்பாடம்: கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.

4. குத்துவரிசை: சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்துவரிசை அமைகிறது. எதிரியை கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசை. குத்துவரிசையின் நுணுக்கமாக நிற்கும் நிலைகளை எப்படி லாவகமாக மாற்றிக்கொள்வது என்பதை கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும்.

5. தட்டுவரிசை: மறுபக்கம் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும்போது அவற்றை அவர் தம் நிலைக்கேற்பத் தன் நிலையை மாற்றித் தட்டி விடுதல் என்பதே தட்டுவரிசை.

6. பிடிவரிசை: எதிரி தம்மைத் தாக்க வரும்போது எதிரியை எப்படி லாவகமாக தம் பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை ஆகும். இக்கூறானது யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்டதாகும்.

7. அடிவரிசை: ஏதாவது ஒன்றை பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப் படுத்துவதே அடிவரிசை ஆகும். சிலம்பக் கலையின் இக்கூறானது குரங்குகளிடம் இருந்து கற்றுக் கொண்டதாகும்.

சிலம்பாடுவதால் கிடைக்கும் பயன்கள்: சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சி. கம்பு எடுத்து சுழற்றும்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்புகளும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பை கைகளால் சுழற்றி சுற்றும்போது தம் உடலை சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே  கலத்தைக் கொண்டு அமைக்கும் இதுபோன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத் திறன், உடல் நெகிழ்வுத் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை இவற்றை மேம்படுத்த சுகாதார நலன்கள் பெறும் வழக்கமான பயிற்சி போன்றவை சிலம்பம் சுற்றுபவர்களுக்கு ஏற்படும் பலன்கள் ஆகும்.

கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும்போது ஏற்படும் ஓசை போன்ற காரணங்களால் தமிழரின் தற்காப்பு கலைக்கு சிலம்பம் என்ற பெயர் ஏற்பட்டது. தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT